ஜனநாயகத்துக்கான கோரிக்கையை முன்வைத்தல்.
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜனநாயகத்துக்கான கோரிக்கையை முன்வைத்தல்.
றோகினி கென்ஸ்மன் (Rohini Hensman)
மொழிபெயர்ப்பு: சேனன்
ஜனநாயகம் பற்றிய வரைவிலக்கணங்கள்.
ஜனநாயகம் பற்றிய பிரபலமான விளக்கங்கள் அதைப் பாராளுமன்ற ஆட்சியுடனும் தேர்தல்களுடனும் சம்மந்தப்படுத்துகின்றது. தேர்தல் என்ற ஒன்றே இல்லாதிருப்பதைவிட தேர்தல் நடப்பது சந்தோசப்படவேண்டியதே. ஆயினும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது, அதன் உச்சக்கட்டத்திலும் கூட, ஒரு சிறுபான்மையினரின் ஆட்சியாகவே இருக்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்கள்- அவர்கள் பொதுவாக உயர்தர வர்க்கத்தில் இருந்தே உருவாகின்றார்கள்- தேர்தலுக்குப் பின் தங்களைத் தேர்வு செய்தவர்களின் விருப்பு வெறுப்புகள் பற்றிய கவனமின்றித் தம்போக்கில் தாம் நினைத்ததையே செய்கிறார்கள். அடுத்த தேர்தல் வரையும் அவர்தம் செயல்களில் தலையிடத் தேர்வுசெய்தவர்களால் முடிவதில்லை.
பெரும்பான்மையினரின் ஆட்சி என்பது ஜனநாயகம் பற்றிய இன்னுமொரு பிரபல விளக்கம். பெரும்பான்மையினரின் ஆட்சி என்று சொல்வதன் மூலம் சிறுபான்மையினர் மேலான தாக்குதலை இவ்விளக்கம் நியாயப்படுத்துகிறது. வேலைக்கும், சொத்துகளுக்குமான கடும்போட்டி நிலவும் முதலாளித்துவ சமுதாயத்தில் மேற்கூறிய வரைவிலக்கணம் பலமாக உபயோகிக்கப்படுகிறது. இதுபோன்ற பெரும்பான்மை வாதத்தை இலங்கையில் நாம் நிறையவே பார்த்துள்ளோம். சிங்களப் பெரும்பான்மை என்ற பெயரில் மலையக மக்கள் வெளியேற்றம், அரசின் மொழிச்சட்டம் தொட்டு இன்றய கிழக்கில் நடக்கும் சிங்கள காலனியாதிக்கம் ஈறாக தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள்- அல்லது அரசுக்கு வர முயலும் கட்சிகள், சிறுபான்மைச் சமூகத்தின் கல்வி, வேலை, நிலம், வீடு, ஏன் பலசமயங்களில் அவர்தம் உயிரைக் கூடப் பலியாக்கிய செயலைச் செய்துவருகிறார்கள். இதன் மூலம் எத்தனை சிங்கள மக்கள் பலனடைந்துள்ளார்கள் என்ற கேள்வியை நாம் எழுப்புவோமானால் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்கள் மட்டுமே என்பதுதான் பதிலாக மிஞ்சும்.
உண்மையில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரதோ, சிறுபான்மையினரதோ ஆட்சியல்ல. மாறாக அது மக்களின் ஆட்சி. எந்த விதிவிலக்குமற்று எல்லா மக்களினதும் ஆட்சி. வர்க்கப் பிளவுடைய முதலாளித்துவ சமுதாயத்தில் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க முடியாது என்பது உண்மைதான். முதலாளித்துவச் சமூக ஜனநாயகம் வர்க்க வேறுபாடற்ற சமூகத்து ஜனநாயகத்துடன் மாறுபட்டதே. இருப்பினும் வர்க்க வேறுபாடற்ற சமூகத்தை – ஜனநாயகத்தை அடைவதற்கு குறைந்த பட்சம் மட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகமாவது முதற் தேவையாக இருக்கிறது.
நடைமுறைப் பிரச்சனைகள்.
ஜனநாயகத்தை நாம் மக்களின் ஆட்சி என்று வரையறுத்தால் அதைச் சாத்தியபடுத்துவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? இதற்குள் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு. ஏனென்றால் ‘மக்கள்’ என்பது ஒருங்கான சீரான குழு அல்ல. வயது,பால் வேறுபாடுகள் முதற்கொண்டு வர்க்க வேறுபாடு உட்பட ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் பல முரண்பாடுகள் உண்டு. பெரும்பான்மையான நவீன சமுதாயங்களில் மொழி, இன, மத, கலாச்சார வேறுபாடுகள் வேரூன்றியுள்ளன. ஜனநாயக ஒழுங்குபடுத்தல் பற்றிப் பேசுவோமானால் எல்லா விசயத்திலும் முரண்பட்ட கருத்துக்களையே நாம் எதிர்கொள்ள நேரிடும். இதை எவ்வாறு உள்வாங்குவது?
நமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வன்முறையைப் பாவிக்கக் கூடாது என்பதை நாம் முதற் கட்ட நிபந்தனையாகச் சுட்டலாம். யாரும் யாரையும் நசுக்குவதன் முலம் வெளிப்படுவதை தவிர்த்தல் முக்கியம். அதற்கு உயிர்வாழும் உரிமைப் பறிப்பு, கீழ்த்தரமான மனிதவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முதலியவற்றில் இருந்து விடுபடுதல் வேண்டும். இந்த ‘வதை’ முறைகள் முற்றாக இல்லாமல் போகவேண்டும். ஒருவரது உரிமை மற்றையவரின் உரிமையைப் பாதிக்கும் தருணத்தில் அவரது சுதந்திரத்துக்கான உரிமை குறைக்கப்படவேண்டி நேரலாம். இத்தருணத்தில் மிகவும் கவனமாகத் தண்டனைக்கான வழிமுறைகள் கையாளப்பட வேண்டும். அது மற்றயவர்களைப் பாதிக்கும்படி, பாவிக்கப்படாமல் இருப்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.
சமத்துவமான சட்டமும், சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமையும் அவசியம் பேணப்படவேண்டும். அதேசமயம் ஒரு தனிநபர் எவ்விதப் பாகுபடுத்தலுக்கோ துன்புறுத்தலுக்கோ உட்படுத்தப்படாது பாதுகாத்தலும் அவசியம். இது இன, மொழி, மத குழுக்களின் தனிப்பெருமையைத் தவிர்க்க உதவும். புத்த சமயத்துக்கு தனி உரிமைகள் இலங்கை சட்டத்தில் வழங்கப்பட்டிப்பதால் புத்த மதத்துக்கு எந்த லாபமும் இல்லை. பதிலாக அது ஜனநாயகத்தைப் பாதிப்பதாக இருக்கிறது. சமத்துவமான கொள்கையைச் செயல்படுத்துவதற்கு அதை காப்பாற்றும் சட்டங்களும், அச்சட்டங்களைச் சரியானபடி நடைமுறைப்படுத்தும் அமைப்புக்களும் அவசியம்.
இறுதியாக, மக்களின் ஆட்சியான ஜனநாயகம் என்பது தகவல் சுதந்திரம் உட்பட, பேச்சுரிமை, முதலான பல உரிமைகளை வழங்கி ஒவ்வொருவரும் சுய-ஆட்சியை நிர்ணயிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கூடவே இவ் உரிமைகள் மற்றையவரின் உரிமைகளைப் பாதிக்கும் விதத்தில் உபயோகப்படுத்தப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் ஜனநாயகத்தின் மேலான தாக்குதல்.
இன்று இலங்கையில் நடக்கும் பிரச்சினை தமிழர்-சிங்களவர், தமிழர்-முஸ்லிம்கள் பற்றியதல்ல. மாறாக இது ஜனநாயகம் பற்றிய, இனத்துவேசம் பற்றிய பிரச்சினை. தமிழ்,சிங்கள இனத்துவேசங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருக்கலாம். ஆனால் முக்கியமாக அவை ஜனநாயகத்தைக் கொன்று கொண்டிருக்கின்றன என்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
1972ம் ஆண்டு இயற்றப்பட்ட இலங்கை யாப்பு சிறுபான்மையர் உரிமைகளைப் பறித்தது பரவலாக அறியப்பட்ட விடயமே. ஆனால்,இதே சட்டம் சிங்களப் பெரும்பான்மையர் உரிமைகளையும் பறித்தது, அதிகாரத்தை ஆளும் கட்சியின் கைகளுக்குள் மட்டும் முடக்கியது பலருக்கும் தெரியாததே. இதன் பின் 1978ம் ஆண்டு சட்டம் அதிகாரத்தை ஒரு தனி நபரின் கைகளில் முடக்கியது. அளவற்ற அதிகாரத்தை ஒரு ஜனாதிபதியின் கைகளில் திணித்த இச்சட்டம் பலரதும் உயிர் வாழும் உரிமைகளையும் பறிக்க உதவியது. இதன் பிரதிபலன் தமிழ் மக்களின் மத்தியில் உடனடியாக வெளிச்சமானது. ஆயிரக்கணக்கானவர் காணாமற் போயினர், சித்திரவதைக்குள்ளாகினர், கொல்லப்பட்டனர். சிங்கள மக்கள் மத்தியில் இச்சட்டம் ஏற்படுத்திய பாதிப்பு சில ஆண்டுகளின் பின் தெளிவாகியது. இதே சட்டத்தைப் பாவித்து 1987ல் இருந்து 1990 வரை ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள், காணாமற்போனார்கள். புலிகள் கேட்கும் தனிநாடும் இந்த வழிமுறைகளில் இருந்து மாற்றம் கொண்டதாக இருக்கப்போவதில்லை. அனைத்து அதிகாரங்களையும் ஒருவர் கையில்- அதாவது பிரபாகரன் கைகளில் குவித்து மக்களின் வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் புறக்கணிக்கும் நடைமுறையையே அவர்களும் கொண்டுவருவார்கள்.
இலங்கையில் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஒரு சர்வாதிகாரத்தைக் கட்டமைத்த கதையைப் பலரும் மறந்து விடுகிறார்கள். 1994ல் சிறிதளவு ஜனநாயக உரிமைகள் மீட்கப்பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும் இச்சிறு வெற்றி கூட ஈடாட்டம் கொண்டதாக – ஜனாதிபதியின் நல்லெண்ணத்தில் தங்கியிருப்பதாக- அப்பதவியில் இருப்பவரால் கணத்தில் நிர்மூலமாக்கப்படகூடியதாக இருப்பது நாளுக்கு நாள் வெளிச்சமாக்கி வருகிறது. சில உதாரணங்கள் இதை எமக்குத் தெளிவாக்கும்.
2001ல் ஜனாதிபதியின் கட்டற்ற அதிகாரத்தைக் குறைக்கும் முகமாக OPA( Non Political Organisation of Professional Associations of Srilanka) யாப்பிற்கு 17வது திருத்த பிரேரணையை வைத்தது. இறுதியில் பாராளுமன்றத்தால் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட திருத்தமே அமுலாக்கப்பட்டது. இருப்பினும் பாராளுமன்றத்தில் எந்த எதிர்ப்பும் இன்றி அமுலுக்கு வந்த இச்சட்டத்தின் மூலம் Constitutional Council (CC)உருவாக்கப்பட்டது. இதன்மூலம் காவல்துறை மற்றும் தேர்தல்,சட்டம் முதலான முக்கிய துறைகளின் அரச ஊழியர்களை நியமிக்கும் உரிமை சர்வ கட்சிக் குழுவுக்குச் சென்றது.
இருப்பினும் ,2005ல் Constitutional Council (CC)ன் பெரும்பான்மை உறுப்பினர்களின் வேலைக் காலவரையறை முடிவுக்கு வந்தபோது பல்வேறு காரணங்களைக்காட்டி ஜனாதிபதி புதிய உறுப்பினர்களை நியமிக்க மறுத்து விட்டார். சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமையாக உறுப்பினர்களை முன்மொழியவில்லை என்பது முதலில் சொல்லப்பட்டது. இது ஒரு பாசாங்கு. இந்தப் பிரச்சினைக்குரிய உறுப்பினர்களைத் தவிர்த்துப் பார்த்தாலும் CCக்கு தேவையான குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை போதுமானதாக இருந்தும் இந்தப் போலிக் காரணம் முன்வைக்கப்பட்டது. பின்பு OPA பலத்த அரசியல் வேறுபாடுகள் மத்தியிலும் சிறுபான்மைக் கட்சிகளை ஒருபடியாக ஒன்று படுத்தி முன்னாள் Auditor General மாயாதுனாவை( S.C.Mayadunne)முன் மொழிந்தது. இது மிகவும் சரியான தேர்வு என்பதைப் பலரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். இத்தருணத்தில் ராஜபக்ச புதிய அதிருப்தியை எழுப்பினார். மாயாதுனே Public Accounts Committef க்கும் Committee on Public Enterprice கும் ஆலோசகராக இருப்பதால் இவரை தேர்வு செய்வது குழப்பத்தை உண்டுபண்ணும் என்று அதிருப்தி தெரிவித்தனர். CC யினால் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் தான் ஆலோசனை பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக மாயாதுன அறிவித்த பின்பும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. புதிய காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
17ம் திருத்தம் பாராளுமன்ற தேர்வுக்குழுவின் மறுபரிசீலனைக்கு உட்பட்டு வருவதால் அது முடியும்வரை இத்திருத்தம் அமுலுக்கு வர முடியாது என்று அறிவிக்கப்பட்டது. CC நடைமுறைக்கு வரும்பொழுது இது போல் மேலும் பல குழப்பங்களைத் தோற்றுவிக்கும் என்பது எமக்கு தெரிந்ததே. நிறைவேற்றுத்துறை(Exeutive) , சட்டஉருவாக்கற்துறை(Legislature ), நீதித்துறை(Judiciary) முதலானவைகளுக்கிடையிலான மோதல் காரணமாக ஏற்படும் தாமதப்படுத்தல் ஜனாதிபதிக்குத் தனக்குச் சார்பான உறுப்பினர்களை நிர்ணயிக்க உதவும் என்பது தெரிந்ததே. இருப்பினும் 17ம் திருத்தம் ஏற்கனவே இலங்கை சட்ட யாப்பின் பகுதியாக இருப்பதால் அதை அமுல்ப் படுத்தவேண்டியது ஜனாதிபதியின் கடமை என்பதை OPA மீண்டும் சுட்டிக்காட்டியது.
அரசின் மூன்று முக்கிய துறைகளுக்கிடையிலான மோதலைத் தவிர்த்தல் என்ற முகமூடியின் கீழ் இயங்கிச் சட்டத்தை மட்டுப்படுத்துவதற்கு மாறாக, மீள்பரிசீலனை என்பது சட்டத்தைப் பலப்படுத்துவதாக இருந்திருக்க வேண்டும். மூன்று துறைகளினதும் முழு அதிகாரத்ததையும் ஒருவர் கையில் குவிப்பதாகவே இச் செயற்பாடுகள் இருக்கக்கூடாது.
சட்ட ஆய்வாளர் ரோகன் எடிரிசின்க (Rohan Edirisinha) சரியாகக் குறிப்பிட்டதுபோல் CC குழறுபடிகள் ஜனாதிபதியிடம் குவிந்துள்ள கட்டற்ற அதிகாரத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது.
தனது சொந்த அதிகாரத்தைக் காப்பாற்றும் வழிமுறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் ஜனாதிபதியின் குவிந்த நிறைவதிகாரம் பலமானது. இதைப் பாவித்து அவர் எத்தருணத்திலும் எந்தவித பிரச்சினையுமின்றி எச்சட்டத்தையும் மீறமுடியும். இது அனைத்து மக்களுக்கும் அக்கறையான பிரச்சனை.
CC ஜ நடைமுறைப் படுத்தாதது, ஜனநாயகத்தின் முக்கிய பகுதியான நீதித்துறையைக் கேலிக்குள்ளாக்குவதாக இருக்கிறது. போதாக்குறைக்குச் சட்டத்திற்குப் புறம்பான முறையில் ஜனாதிபதி நீதித்துறைக்கு நேரடியாக உறுப்பினர்களைத் தேர்வு செய்தார். அரசின் மனித உரிமை மீறல்களை மறைக்கும் முகமாகச் சட்டத்திற்குப் புறம்பான முறையில் நீதித்துறையின் மீது ஜனாதிபதியின் நேரடித் தலையீடாக இது இருக்கிறது.
2006ல் ACF ன் 17 தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டது இன்னுமொரு உதாரணம். செப்டம்பர் 4ம் திகதி வரையும் விசாரணையைக் கேட்ட முத்தூர் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா, அடுத்த நாள் தனது தீர்ப்பை வழங்க ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது, நீதித்துறை மந்திரி சுகடா கமலாத் (Suhada Gamalath) அவரைத் தொலைபேசியில் அழைத்து வழக்கை அனுராதபுரத்திற்கு ஜன்டாசாவிடம்(Gindasa) மாற்றும்படி கோரினார். இந்த நீதிபதி சாட்சி வழங்க இருந்தவர்களின் மொழி பேசாதவராக இருந்தது மட்டுமின்றி வழக்கை நடத்தக் கோரிய இடம் சாட்சிகள் சாட்சி அளிக்கப் பயப்பிடக்கூடிய இடமாகவும் இருந்தது. தீர்ப்பு வழங்கப்பட முதல், முழுமையான விசாரணை செய்துவந்த நீதிபதியிடம் இருந்து இவ்வழக்கை மாற்றுவதே இந்நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.
2006ல் காணாமற் போன பாதிரியார் ஜிம் பிரவுன் (Jim Brown) பற்றிய உண்மையை வெளிக் கொண்டுவருவதில் மும்முரமாக இருந்த ஊர்காவற்துறை நீதிபதி திருமதி.நடேசகரன் விசயமும் இதுபோன்றதே. இந்த நீதிபதியை ஆபத்தானவராகக் கருதிய ISC அவரை ஊர்காவற்துறை பொறுப்புகளில் இருந்து விடுவித்தது. பாதுகாப்புத்துறையின் குற்றங்களை நீதித்துறை பாதுகாத்து மறைக்கும் நடவடிக்கைகளின் சிறந்த உதாரணம் இது. மேலும் இவ்விரு சம்பவங்களையும் விசாரிப்புக்கு எடுத்த( Chairman of the commissions of Inquiry )நீதிபதி உடலாகாம, PSC யின் உறுப்பினர். உடனடியாக முதலாவது வழக்கை அனுராதபுரத்துக்கு மாற்றியதையும், ஊர்காவற்துறை நீதிபதியை வெளியேற்றியதையும் அவர் நிறைவேற்றினார். மேற்சொன்ன இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே. இருப்பினும் 1980 களில் நடந்ததுபோல் இதே முறையில் சிங்கள மக்கள் மேல் அதிகாரம் பாவித்து ஒடுக்கப்படுதல் நடக்கலாம்.
இறுதியாக, ஜனநாயகத்துக்கு முற்றாக உலைவைக்கும் முகமாகப் பத்திரிகைத்துறை மீதான தாக்குதலானது பத்திரிகையாளர்களுக்கு உலகின் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக இலங்கையை மாற்றியுள்ளது. பேச்சுச் சதந்திரம், தகவல் பரிமாற்றம், உரிமைகள் மேலான தாக்குதல்கள், முதலானவற்றிற்கும் இலங்கை உலகின் மோசமான நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
அதிகாரப் பகிர்தலுக்கான ஜனநாயக வடிவமைப்பு
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய வாதங்கள் அதிகாரப் பகிர்வுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஜனநாயகத்தின் தேவைக்கு அளிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். ஒரு பொதுவான ஜனநாயக வடிவத்துக்குள் அதிகாரப் பகிர்வு என்பது நிச்சயமாக ஒரு ஜனநாயக நடவடிக்கையே. நாம் வாழும் முனிசிபாலிட்டி, கிராமம், மாவட்டம் சார்ந்த அரசியல் முடிபுகளை அங்கு வாழாத, அப்பகுதிகள் பற்றிய எந்த அறிவுமற்ற தலைநகர் வாசிகள் முடிவெடுப்பதற்குப் பதிலாக, அங்கு வாழும் நாம் எமது தலைவிதியை நிர்ணயிக்கும் முடிவுகள் எடுப்பதில் பங்குபற்ற விரும்புவது இயற்கையே. இருப்பினும், அதிகாரப் பகிர்வு ஜனநாயக மாற்றத்திற்காக, என்று தெளிவாகக் குறிப்பிடப்படாத பட்சத்தில் அது பல வகையில் ஆபத்தாக முடியச் சாத்தியமுள்ளது. இவ் ஆபத்தில் அரைகுறை அதிகாரப் பகிர்வு என்பதும் ஒன்று. மக்களின் உரிமைகள் சார்ந்த காரணம் இன்றி மத்திய அரசு அநாவசியமாக மாவட்ட நடவடிக்கைகளில் தலையிடும் ஆபத்தை இது உருவாக்குகிறது. பழைய மாகாணசபைப் பரிசோதனைகள் இலங்கையில் தோல்வியுற்றமைக்கு இது முக்கிய காரணம். அதே தருணம் மாகாண சபை தடையின்றி மக்களின் உரிமைகளை மீறிய செயல்களிலும் ஈடுபடலாம்.
2002ல் குஜாராத் மாகாண அரசு முஸ்லிம் மக்களுக்கு எதிரான படுகொலை நடவடிக்கைகளில் இறங்கிய பொழுது மத்திய அரசு அந்தக் கொடிய சித்திரவதை, பாலியல் வன்முறைகளுக்கு எதிராகத் தலையிட்டிருக்க வேண்டும். அவ்வாறு நிகழவில்லை. காங்கிரஸ் கூட்டாட்சி மத்திய அரசைக் கைப்பற்றிய பிறகும் கூட குஜாராத் அரசு, முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளைத் தொடர்ந்துகொண்டிருக்க அனுமதித்துள்ளது. அங்குள்ள நீதித்துறை, முஸ்லிம்களைச் சிறையிலிட்டு உண்மையான குற்றவாளிகளைத் தப்பிப்போக விட்டுக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் குஜாராத் அரசு ஒரு ஜனநாயக வடிவமைப்புக்குள் இயங்கும் பாசிச அரசாக இருக்கிறது. அதிகாரப் பகிர்வு பிழைத்துப்போனதுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.
2002 அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டாட்சி முறைக்குப் பிரபாகரன் இணங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். கிட்டத்தட்ட குஜாராத்தில் நடப்பது போன்ற செயற்பாடே அங்கும் நடந்திருக்க வாய்ப்புண்டு. வடக்கைச் சேர்ந்த முஸ்லிம்களுக்குத் தமது சொந்த இடம் திரும்பும் உரிமை பறிக்கப்பட்டு, கிழக்கு முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்குப் பலியாகி, வடக்குக் கிழக்கில் ஒரு பாசிச மாகாணசபை அரசேறியிருக்கும். ஜனநாயக உரிமைகள் சுதந்திரம் என்பவை முற்றாக மறுக்கப்பட்டிருக்க கூடியதுடன் நீதித்துறை புலிகளின் விருப்புக்கு இணங்கியே செயலாற்றியிருக்க முடியும். அதே சமயம் சிங்களப் பெருந்தேசியவாதிகள் நிறைந்த மற்றைய மாகாணசபைப் பகுதிகளில் தமிழர்கள் மேலான உரிமை மீறல் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருந்திருக்கும்.
குறைந்தபட்சம் கிராமசபை நிலையில் கூட, அதிகாரம் பிரமுகர்கள் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கும் பட்சத்தில் அவை ஜனநாயகத்தை வளர்க்கப்போவதில்லை. இந்தியாவில் கிராம மட்டத்தில் இருந்தே இந்தியத் தகவல் உரிமை சட்டத்திற்கான இயக்கம் தோன்றியது. கிராம அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் பெருந்தொகைப் பணம் எப்படிக் காணாமற் போகிறது என்ற கேள்வியில் இருந்து தோன்றியது இவ்வியக்கம். அதைத் தொடர்ந்து இச்சட்டம் ஊழலுக்கும் அதிகாரத் துஸ்பிரயோத்துக்கும் எதிரான மிகச் சிறந்த ஆயுதமாக மாறியது. இதேபோல் கிராமத்துப் பஞ்சாயத்தில் பெண்களுக்கென்று 33 வீத இட ஒதுக்கீட்டை செய்த சட்டம் கொண்டு வரும் வரையும் அவர்கள் அப்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவதற்கு எந்த வாய்ப்பும் இருக்கவில்லை. பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும் பெண்களுக்கான 33வீத ஒதுக்கீட்டுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இருப்பினும் உள்ஊராட்சியில் பெண்களின் நுழைவு நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. எல்லாருக்கும் பலன்தரும் பொதுச்சேவைகளுக்கான முக்கியத்துவம் கூடியுள்ளது. இலங்கைக்கும் இது ஒரு நல்ல படிப்பினையாக இருக்கும். அதிகளவு படித்த பெண்கள் இருக்கும்- அதிகளவு திறமையான பெண்கள் வாழும் இலங்கையில் அரசாங்கத்தில் பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. இது ஒரு மிகப்பெரிய இழப்பு. பெண்களுக்கு மட்டுமின்றி முழு நாட்டுக்குமே இது ஒரு பெருமிழப்பு. இப்பிரச்சினை அதிகாரப்பகிர்வு மூலம் மட்டும் தீர்க்கப்படக்கூடியதல்ல. இதுமட்டுமின்றிக் குழந்தைகளின் உரிமைகள், கட்டாய இராணுவ ஆட்ச்சேர்ப்பு, குடும்பங்களுக்குள்ளும் வெளியிலும் நிகழும் பாலியல் வன்முறைகள், மன உளைச்சல் முதலான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அதிகாரப் பகிர்வு மட்டும் தீர்வாக முடியாது.
அதனால் நாம் அதிகாரப் பகிர்வு மட்டும் ஜனநாயகத்தை கொண்டு வந்துவிடும் என்று தீர்மானிக்க முடியாது. எல்லா மக்களினதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை முறையானபடி பாதுகாக்கும் வழிமுறைகளை ஏற்படுத்துவதும், ஜனாதிபதியின் கட்டற்ற அதிகாரத்தை இல்லாதொழிப்பதும், எல்லாவகைத் தன்னிச்சை அதிகாரங்களையும் இல்லாதொழிப்பதும் மிகமிக முக்கியமாகும். பாதிக்கப்படுபவர்கள் தமக்கான முடிபுகளைத் தாமே எடுக்கும்படியான அதிகாரப்பரப்பலை அறிமுகப்படுத்துவதானது மேற் சொன்ன வழிமுறைகளாலேயே உண்மையான ஜனநாயக நடவடிக்கையாக மாற முடியும்.
இவ்வாறு ஜனநாயகத்தை அணுகாத, சிங்கள ஒன்றுபட்ட நாட்டுக்குப் போராடும் சிங்களப் பிரமுகக் குழுக்களாயினும், ஒன்றுபட்ட தமிழ் நாட்டுக்குப் போராடும் புலிகளாயினும் தமது அதிகாரத்தைச் சிறுபான்மையினருடனோ அல்லது பெரும்பான்மையினருடனோ பகிர்ந்து கொள்ள மறுப்பர் என்பது நமக்கு தெரியும். அதனால் இவர்தம் குறிக்கோள்கள் இவர்களது நலன்களுக்கு எதிரானது மட்டுமின்றி ஜனநாயகத்துக்கும் எதிரானதாக இருக்கிறது. ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் சட்டமுறை மாற்றங்கள் மூலம் பெரும்பான்மை மக்கள் பயன்பெற முடியும் என்பது மட்டுமின்றி இன அடிப்படையிலான குளறுபடிகளுக்கும் அது முற்றுப்புள்ளி வைக்கும்.
இந்த முறையில் சட்ட மாற்றத்தைக் கோரி நிற்பதானது -கிழக்கு மற்றும் மலையக மக்களைத் தவிர்த்த தமிழ் மக்களின் நலன், என்ற குறுகிய வடிவத்தைத் தாண்டி இலங்கை வாழ் பெரும்பான்மை மக்களின் நலன்களை அக்கறையோடு பார்க்கிறது.
2007ம் ஆண்டு Marga Institute செய்த கருத்துக் கணிப்பின் படி அரசு தமக்கு நெருக்கமாக வரும் சாத்தியம் உண்டென்றால், அதிகாரப்பகிர்வுக்குப் பெரும்பாலான சிங்கள மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
தமிழருக்குக் கூடிய அதிகாரமும், சிங்களவருக்குக் குறைந்த அதிகாரமும் என்ற பாணியில் அதிகாரப் பரவலாக்கம் பிரச்சாரப்படுத்தப்படுவது எவ்வித லாபமுமற்றது. அதிகாரப்பரவலாக்கம் எல்லோரதும் நன்மைக்காக என்ற கருத்தை நாம் மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும். தற்சமயம் சுரண்டலிலும் ஒடுக்குதலிலும் ஈடுபட்டு வரும் மிகச்சிறுபான்மையினர் தவிர்த்து இது அனைவரினதும் -எல்லா இனத்தவரினதும் நலனுக்கான நடவடிக்கை என்பதை நாம் மக்களுக்கு தெளிவாக்க வேண்டும். யுத்தத்தை நீண்டகாலத்துக்கு நிறுத்தவும் இதுதான் ஒரே ஒரு வழி என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
முன்பு தமிழ்நாட்டிலும் தனிநாடு கோரிக்கை எழுந்தது. அது பேச்சுவார்த்தை மூலமும் அதிகாரப் பரவலாக்கல் மூலமும் தீர்க்கப்பட்டது. இன்று, இந்தியக் குடியுரிமை வேண்டுமா? வேண்டாமா? என்று பெரும்பான்மைத் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கேட்டால் பெரும்பான்மையானவர்கள் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். அதேபோல் முழு இலங்கையிலும் இலங்கைத் தமிழருக்கு ஜனநாயக உரிமையும் சுதந்திரமும் இருக்குமானால் அவர்கள் ஏன் தமது உரிமைகள் மறுக்கப்படக்கூடிய ஒரு சிறு குட்டி தனி நாட்டை கேட்கப்போகிறார்கள். இதன்மூலம் தனி நாட்டு கோரிக்கை போராட்டத்தை முன்வைக்கும் தலைவர்கள் தனிமைப்டுத்தப்படுவர். யுத்தம் ஒரு முடிவுக்கு வரும்.
என்னைப் பற்றிச் சில குறிப்புகள்
தெற்கைச் சேர்ந்த சிங்களம் பேசும் பேர்கர் தமிழராக, தொழிலாளர் போராளியாக, பெண் உரிமைகளுக்கான போராளியாக, இருக்கிறேன் என்ற வகையில் இலகு படுத்தப்பட்ட ஒருபரிமாண முறையில் அடையாளங்களை வரையறுப்பது நாம் தீர்வுக்கு வருவதுக்கு தடையாக இருக்கும் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால், இது வர்க்கம், சாதி, பால், அரசியல் நம்பிக்கை, கலப்பு இனம், முதலாக இலங்கையில் மலிந்து கிடக்கும் பல்வேறு அடையாளங்களைத் தவிர்க்கிறது. என்னைச்சுற்றி வாழ்ந்த மத்தியதர, மற்றும் குறைந்த வருவாயுள்ள சிங்கள மக்கள் தமிழர்களை வெறுக்கவில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். 1958இலும் 85இலும் அவர்கள்தான் என் குடும்பத்தை காப்பாற்றினார்கள். அவர்களுடைய சாப்பாட்டை நானும் பகிர்ந்துகொள்ளும்படி அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தலாம். ஆனால் அதிகாரத்தைத் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ளும் படி நான் கேட்டால் அவர்கள் பதில் என்னவாக இருக்குமென்று எனக்குதெரியும். ‘என்ன அதிகாரம்? எம்மிடம் எந்த அதிகாரமும் இல்லை. எம்மிடம் இல்லாத ஒன்றை நாம் எப்படி பகிர்ந்துகொள்ள முடியும்?’ என்பதாகவே அப்பதில் இருக்கும். உருப்படியான வேலை இன்றி அன்றாட உணவுக்கு அல்லற்பட்டு வாழ்க்கையோட்டும் இந்தப் பெரும்பான்மையானவரின் அதிகாரமற்ற கழிவிரக்கம் புரிந்துகொள்ளப்படக்கூடியதே.
உருப்படியான வேலைசெய்பவர்கள் பாடும் திறமானதல்ல. உதாரணமாக; 1980களில் நான் இலவச வர்த்தக வலையத்துப் பெண் தொழிலாளர்கள் மத்தியில் அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த பொழுது காணாமற்போகும் அல்லது மரணிக்கும் அபாயத்தை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. இருப்பினும் தொடர்ந்த போராட்டம் பல வெற்றிகளைக் கண்டது. தற்பொழுது எகிறும் பணவீக்கம் கஷ்டப்பட்டு வென்ற சம்பள உயர்வுகளைக் கொஞ்சங் கொஞ்சமாகச் சூறையாடிவருகிறது.
‘இங்கு ஒரு பெண் ஒரு நேரச் சாப்பாடு மட்டுமே சமைக்கிறாள். கடந்த ஐந்து நாட்களாக வெறும் சோறும் பூசணிக்காயும் மட்டும் ஒரு நேரம் காய்ச்சிச் சாப்பிடுகிறாள்.’ என்று கொழும்புப் பெண்கள் நிலையத்தில் இருந்து தான் அனுப்பும் அறிக்கையில் குறிப்பிடுகிறார் தோழி பத்மினி வீரசூரிய. இதுபோல் நாம் பல உதாரணங்களைத் தர முடியும்.
இதுதான் தமிழ் மக்கள் கேட்கிறார்களா? நான் அப்படி நினைக்கவில்லை. 1990க்குப் பிறகு நான் கிராமப்புறங்களுக்குச் செல்லவில்லை. முன்பு நான் JVP கிளர்ச்சியாலும், அரசின் இக்கிளர்ச்சிக்கெதிரான நடவடிக்கையாலும் விதவையாக்கப்பட்ட பெண்களுடன் உரையாடிய பொழுது அவர்தம் அதிகாரமற்ற இயலாமையையும் அது அவர்களை எவ்வளவு தூரம் நோகடித்துக்கொண்டிருந்தது என்பதையும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. தற்பொழுது உருவாகியுள்ள மகா கேவலமான பொருளாதாரத் தட்டுப்பாட்டில் இதேபோல் பலரும் அதிகாரமற்ற தன்மையால் கொதித்துப்போயிருக்கும் தன்மையை என்னால் உணரமுடிகிறது.
தங்களிடம் இருக்கும் அதிகாரத்தை விடத் தமிழர்கள் அதிகமாகக் கேட்கிறார்கள் என்று இவர்கள் நினைப்பது ஆச்சரியமானதா? அல்லது சிங்கள மக்களைக் கொன்று கொண்டிருக்கும் புலிகளுக்கு விட்டுக்கொடுப்பதாக அதிகாரப்பரவலாக்கம் இருப்பதாக அவர்கள் நம்ப வைக்கப்படுவது இலகுவாக இருப்பது ஆச்சரியமானதா? இவ்வகை வாதங்களை நாம் எதிர்க்கவேண்டும். ஜனநாயக வழிப்பட்ட அதிகாரப் பரவலாக்கம் மட்டுமே யுத்தத்திற்கும் பிரிவினை வாதத்திற்கும் எதிரான ஓரே ஒரு வழி என்ற விளக்கத்தை இவர்கள் வாதங்களுக்கு எதிராக நிறுத்தி மக்களுக்கு அவ்வாதங்களின் பொய்மையை தெளிவாக்கவேண்டும். இது சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் நன்மை தரும் ஒன்றே.
இதை எதிர்த்து ஒன்றுபட்ட நாடுபற்றிக் கதைப்பவர்கள் மக்களின் பொதுநலனில் எவ்வித அக்கறையுமின்றி ஒரு சிறு குறுகிய அரசியற் பிரமுகர்களின் நலன்களில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.
APRC யின் தொடக்கம் சரியானதாகவே இருந்தது. சிறுபான்மையினர் மத்தியில் ஜனநாயக பெரும்பான்மையிடமிருந்து சட்ட மாற்றத்துக்கான ஆமோதிப்பைப் பெறுவது தொடங்கிச் சட்ட மாற்றத்திற்காகப் பலரதும் ஒற்றுமையை ஏற்படுத்துவது ஈறாக அளப்பரிய பணியாற்றினார் புரபசர் திச விதாரன. இருப்பினும், மகிந்த ராசபக்சவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தற்போது மட்டுப்படுத்தப்பட்ட 13வது திருத்தத்தை அமுலுக்கு கொண்டுவருவதில் வந்து நிற்கிறார். இதுக்கு ஒரு APRC தேவையா?
ஜனநாயக வடிவத்துக்குள் அதிகாரப் பகிர்வு என்பது, எவ்வளவு தூரம் சிறுபான்மையினரின் நலன் சார்ந்ததோ அதேயளவு பெரும்பான்மை சிங்கள மக்களினதும் நலன் சார்ந்ததே என்ற பிரச்சாரம் முறையாக செய்யப்படாததன் குறைபாடாகவே இது இருக்கிறது. APRC ன் தீர்மானங்கள் மாற்றமின்றி மக்கள் மத்தியில் வெளியிடப்படுவது மிக முக்கியமானது. இதனுடன் முரண்பாடு உள்ளவர்கள் அல்லது பெரும்பான்மை அறிக்கைகளை விரும்புபவர்கள் சமர்ப்பிக்கலாம். யுத்தத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கு ஆதரவான அனைவரையும் ஒன்று திரட்டி இதற்கு ஆதரவான பிரச்சாரம் செய்யப்படவேண்டும்.
முற்போக்கு அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், மத அமைப்புகள், புத்திஜீவிகள், கல்வியாளர்கள், மாணாக்கர்கள், பத்திரிகையாளர்கள், NGOக்கள் என்று பலரும் சட்ட மாற்றுக் கோரிக்கையை,பலரும் ஆதரிக்கும் படியாக்க வேண்டும். இதை எதிர்ப்பவர்களுக்கெதிராகச் சிங்கள மக்கள் மாறும்படி பிரச்சாரம் பலப்படுத்தப்படவேண்டும். இந்த ஜனநாயக யாப்பமைப்புக்குப் பதிலாக தாம் இயங்கும் பட்சத்தில் மக்கள் தங்களை ஒதுக்குவார்கள் என்பதை அரசியல்வாதிகள் உணரவேண்டும். இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்க இதுதான் ஓரே வழி.
முடிவுரை
ஜனநாயகமற்ற அதிகாரப் பரவலாக்கம் இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு கொண்டுவரப்போவதில்லை. வடக்கு,கிழக்கு சிங்களவரும் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழரும் எல்லா இடங்களிலும் வாழும் முஸ்லிம்களும் மற்றைய சிறுபான்மையினரும் தொடர்ந்தும் ஒடுக்குதலுக்கு ஆளாகியே வருவர். பெரும்பான்மையினரின் உரிமைகள் கூட முக்கியமாகப் பெண்கள் குழந்தைகளின் உரிமைகள் கூடப் பாதுகாக்கப்படப் போவதில்லை. இந்நிலையில் இதற்கெதிரான போராட்டத்தைச் சிறுபான்மையர் மட்டும் வென்றெடுக்க முடியுமென்று நினைப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. பெரும்பான்மைச் சமூகம் இப்போராட்டத்தில் தமது பங்கை உணர்வது மிக மிக முக்கியமானது. அதனால் அதிகாரப் பரவலாக்கத்தில் இருந்து ஜனநாயகத்தை நோக்கி நாம் எமது வாதத்தைத் திருப்ப வேண்டும். ஜனநாயக அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வென்பது ஒரு பகுதியே என்பதை வலியுறுத்தி பல்வேறு உரிமைகளுக்கான போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவ்வாறு மாறும் பட்சத்தில் பெரும்பான்மை ஆதரவை நாம் பெறுவது சாத்தியமாகும். இதை ஏற்படுத்துவதற்கான செயல்முறை உத்தியில், யாப்பு மாற்றத்திற்கான ஜனநாயகத் தீர்மானம் முக்கிய பங்கு வகிக்கிறது. கோரப்படும் சட்டங்கள்,உரிமைகள் வெளிப்படையாகப் பிரகடனப் படுத்தப்படுவதன் மூலம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கும் அவர்தம் உரிமைகள் கோரப்படுவது தெளிவாகத் தெரியவர வேண்டும். இதனுடன் மாறுபடும் எந்தக் கட்சியோ அல்லது சிறுபான்மையினரின் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதாகச் சொல்பவர்கள் தமது தீர்மானங்களை முன்வைக்க வரவேண்டும். முன்வைக்கப்படும் தீர்மானங்களில் எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு விடவேண்டும். எந்த இடைக்கால நிர்வாகமும் இறுதி அரசியல் முடிவு வரைக்கும் பொறுத்திருப்பது மட்டுமின்றி அதை நோக்கிச் செயற்பட வேண்டும்.
சட்ட மாற்றத்திற்கான போராட்டமும் ஒரு ஜனநாயகத்துக்கான போராட்டம் தான். எல்லாப் பிரேரனைகளும் -தீர்மானங்களும் மூன்று மொழிகளிலும் பிரசுரிக்கப்படவேண்டும். அவற்றைப் பற்றிக் கருத்து பரிமாற மக்கள் அழைக்கப்படவேண்டும். இதன் பிறகு விவாதங்களை நடத்துவது மக்கள் சார் அமைப்புகளைச் சேர்ந்தது. பின்பு இவை மக்களின் வாக்களிப்புக்கு விடப்பட வேண்டும்.
கடந்த 60 வருடங்களாக இலங்கையில் அரசியல் பிரமுகக் குழுக்கள் ஜனநாயகத்தைச் சிதைத்து நாட்டைக் குட்டிச் சுவராக்கி வந்துள்ளார்கள். அவர்களால் இப்பிரச்சினைக்குக் கடைசிவரையும் தீர்வு கொண்டுவர முடியாது. ஆனால் இலங்கை வாழ் மக்கள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவர்கள் சட்ட மாற்றம் பற்றிக் கலந்துரையாட அனுமதிக்கப்பட்டால் பெரும்பான்மையானவர்கள் ஜனநாயகத்தின் பக்கமே நிற்பார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.