இலங்கைப் பொதுத்தேர்தல் 2010
http://www.lumpini.in/a_punaivu-001.html
முப்பது வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் சனநாயகம் பூத்துக் குலுங்குவதற்கான எடுத்துக்காட்டாக, ஆளும் வர்க்க ஊடகங்கள் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்ற 14வது நாடாளுமன்றத் தேர்தலைச் சுட்டிக் காட்டுகின்றன. 7680 வேட்பாளர்கள், நாடு தழுவிய தேர்தல் என்று புளுகித்தள்ளுகிறார்கள். புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் இனி எப்படிச் சனநாயகம் மலராமல் இருக்கமுடியும்? என்று புன்சிரிப்புடன் சிலர் பூரிக்கின்றனர். இனி எல்லாம் ‘சுபம்’ என்று இலங்கையின் போராட்ட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி போட்டுவிட்டுத் தமது சொந்த ‘வியாபாரங்களில்’ இறங்கியிருப்பவர்கள் ஆளுமை செலுத்தத் தொடங்கியிருக்கும் இலங்கை அரசியலின் பின்னணியைக் கடந்த தேர்தல் படம் போட்டுக் காட்டியுள்ளது.
இத்தேர்தல் சனநாயக ரீதியாக நடாத்தப்பட்ட தேர்தல் அல்ல. இதைச் சொன்னவுடன் சிலருக்கு மூக்கில் முட்டுங் கோபம் வரலாம். “நீங்கள் இங்கிலாந்துத் தரத்தோடு இலங்கைத் தேர்தலை ஒப்பிடக்கூடாது. பக்கத்து நாடு இந்தியாவை பாருங்கள். உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டில் தேர்தல் காலத்தில் நடக்கும் வன்முறைகளை விடக் குறைந்தளவில் தானே இலங்கையில் வன்முறை நிகழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி நீண்டகாலத்துக்குப் பின்னர் முதற் தடவையாக ஒட்டுமொத்தமாக முழுத் தமிழ் மக்களும் வாக்களிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பல கட்சிகள் சுதந்திரமாகத் தேர்தலில் பங்குபற்ற முடிகிறது. இது முன்னேற்றமில்லையா? சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் இடதுசாரிகள் கூட வட- கிழக்குத் தேர்தலில் பங்குபற்ற முடியாத நிலையில் இருந்து, இன்று சுதந்திர பங்குபற்றுதலுக்கு வழியேற்பட்டிருப்பது வரவேற்கப்பட முடியாததா? சில குறைபாடுகள் இருந்தாலும் யுத்தம் முடிஞ்சு ஒரு வருசகாலம்தானே ஆகுது. இது தொடக்கம்தான். மேலதிக முன்னேற்றத்திற்கு இன்னும் இடமிருக்கு” என்று பொறி பறக்க வாதங்களை அள்ளி வீசுவர் அரச ஆதரவாளர்கள் என்பது எமக்குத் தெரியும்.
உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு இந்தியா என்ற போக்கிரிக் கதையை விடுவோம். ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் வறிய மக்கள் இந்தியாவில் படும்பாடு தெரியாதவர்களின் கதையது. வேதாந்தா, பொஸ்கோ என்று பல சர்வதேசக் கம்பனிகள் சனநாயகத்தின் பெயரில் இந்தியவின் பெரும்பான்மை வறிய மக்களின் வாழ்வாதாரத்தைச் சின்னாபின்னமாக்க வரிந்து கட்டிக்கொண்டிருப்பது தெரியாதவர்களின் கதையது.
இங்கிலாந்து முதலான மேற்கத்தேய நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது என்ற வாதமும் கேலிக்கிடமானது. அப்பாவி மக்களைச் சுடுவது, அடித்து நொறுக்குவது முதலிய அட்டகாசங்களை நியாயப்படுத்தும் கதையது. இவர்கள் நவகாலனித்துவ நாடுகளுக்கொரு சனநாயகம், மேற்கத்தேய நாடுகளுக்கொரு சனநாயகம் என்ற கதைபேசித் தம் வன்முறையை நியாயப்படுத்துகிறார்கள். மேற்கத்தேய நாடுகளிலும் ஒன்றும் ‘சனநாயகம்’ பூத்துகுலுங்கவில்லை. முதலாளித்தவ சனநாயகம் என்பது அதிகார சக்திகளின் அவர்தம் கட்சியின் சேவகனாகவே உலகெங்கும் வழக்கத்தில் உள்ளது. சிறுபான்மையர், ஒடுக்கப்படும் தொழிலாளர்கள், வறிய மக்கள் தமது குரலை வெளிப்படுத்தப் படாதபாடு படுகிறார்கள்.
ஆனால், இலங்கையில் நடக்கும் வன்முறை அளவுகடந்தது. மனிதஉரிமை மீறும் நாடுகளில் உலகின் முன்னணி நாடாக இலங்கை இருப்பது பொய்ப் பிரச்சாரமல்ல. ஊடகங்கள் அடித்து நொருக்கப்படுவதும், சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக எழுத,பேச முனைபவர்கள் காணாமல் போவது, சாகடிக்கப்படுதல், சிறையிடப்படல் தொடர்ந்து நிகழ்வதும் உலகறிந்த ஒன்று.
கடந்த தேர்தலில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் வன்முறைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தேர்தல் நாளில் மட்டும் 84 பாரிய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தததையும் அவற்றில் 53 தேர்தற் சாவடிக்கு அருகாமையில் நிகழ்ந்திருப்பது பற்றியும் 189 தேர்தல் சட்டவரைமுறைகள் மீறப்பட்டிருப்பது பற்றியும் தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்று பதிவுசெய்துள்ளது ( the center for monitoring election violence (CMEV)). அளவுக்கு மீறிய வன்முறையால் 34 தேர்தல் சாவடிகளில் வாக்கு எண்ணுவது நிறுத்தப்பட்டதும் அத்துமீறிய வன்முறை நிகழ்ந்த திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதும் நாமறிந்ததே. வாக்குச்சாவடிப் பக்கம் அரசுசாரா – தனியார் ஊடகவியலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நாடெங்கும் வாக்குச் சாவடிகளைத் தமது கட்டுபாட்டில் வைத்திருந்த ஆளும் கட்சி மந்திரிகளும் அவர்தம் சகாக்களும் எதிர்கட்சியினர் வாக்குச்சாவடிப் பக்கம் வரவிடாமல் அடித்துத் துரத்தியுள்ளார்கள். நாட்டின் முக்கிய ஊடகங்கள் பலவும் அரச கட்டுப்பாட்டின்கீழ் ‘நடுநிலை’ என்ற பெயரில் அரசின் பேரினவாதப் பிரச்சாரங்களைச் செய்தன. அரச உடமைகள் ஆளும் கட்சியின் தேர்தற் பிரச்சாரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. ‘எங்கிருந்தோ’ முளைத்த கறுப்புபணம் தெருவெங்கும் அரச பிரச்சாரங்களாக ஓடி வழிந்தது. எந்த ஒரு முன்னணிக் கட்சியும் தமது பிரச்சாரச் செலவுகளுக்குக் கணக்குக் காட்டத் தயாரில்லை. திட்டமிட்ட முறையில் அரச சக்திகள் தம் ஆதரவு பலவீனமாக இருந்த இடங்களில் மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்கான ஆவனைகளைச் செய்தன. வேறு வழியின்றித் திருகோணமலை,கண்டி ஆகிய இடங்களில் மீண்டும் தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டு 20ம் திகதி ஏப்ரலில் மீள் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
வாக்களிப்பு வீதம் அதிகாக இருக்கும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த தேர்தலில் வாக்களிப்பு வீதம் மோசமாகச் சரிந்தமைக்கு மேற்கண்ட நடவடிக்கைகளும் ஒரு காரணம். தேர்தலில் மொத்தமாக வாக்களித்தோர் 54 வீதமாயிருக்க
வடக்கு,கிழக்கில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 18 வீதமான மக்கள் மட்டும் வாக்களித்திருந்தனர். “விகிதாச்சாரப்படி ஒப்பிடவோ வாதிடவோமுடியாது, ஏனென்றால் வாக்களிக்கத் தகுதியாகப் பதிந்துள்ளவர்கள் பலரும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்” என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. என்னே சனநாயகபப்ற்று என்று வியக்கவேண்டியுள்ளது. உதாரணத்துக்கு வன்னி மக்கள் வாக்களித்த முறையைப் பாருங்கள்.
ITAK (TNA) – 41,673 (won three seats)
UPFA – 37,522 (won two seats)
UNP – 12,783 (won one seat)
இடம்பெயர்ந்தோர் வாக்குகள்:
UPFA -12,011
UNP -5,497
ITAK -2,527
2 மாதத்துக்கு முன் சனாதிபதித் தேர்தலில் இங்கு வாக்குகளின் விபரம் வருமாறு:
Sarath Fonseka (UNP) -70,367
Mahinda Rajapakse (UPFA) -28,740
இரண்டு மாதத்தில் எப்படி வாக்களிக்கும் முறை தலைகீழாக மாறியது பாருங்கள்! மிக முக்கியமாக இடம்பெயர்ந்தோர் வாக்களித்திருக்கும் முறை உங்களுக்கு மேலும் ஆச்சரியத்தை தரலாம். அடித்து நொருக்கிக் முகாம்களில் அடைக்கப்பட்டுப் பெருந் துன்பத்துக்குள்ளான மக்கள் தமது துன்பத்துக்குக் காரணமாகவிருந்த ஆளும் கட்சிக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்து அவர்களை முதலாம் இடத்தில் நிறுத்தியுள்ளார்கள் என்பதை எம்மால் நம்பமுடியவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு ஒரு வருடம் கூட ஆகவில்லை. தமது சொந்தங்களை இழந்த மக்கள், இன்னும் உடற்காயங்கள், மனக்காயங்கள் ஆறாத மக்கள் எவ்வாறு ஆளுங் கட்சிக்கு ஆதரவளிக்க முடியும் இந்த தேர்தல் எவ்வாறு நடத்தப்பட்டிருக்கிறது என்பதை ஊகிக்க இது நல்ல உதாரணம்.
அடாவடித்தனங்கள்,சுத்துமாத்துக்கள் மூலம் ஒரு பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளது ஆளுங்கட்சி. ஆளும் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி 144 ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 60 ஆசனங்களையும்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரிற் போட்டியிட்ட தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் புலிகளின் ஆதரவுடன் த.தே.கூ 22 ஆசனங்களை வென்றிருந்தனர். இதேபோல் 39 ஆசனங்களை கடந்த தேர்தலில் வென்றிருந்த ஜே.வி.பி சனநாயகத் தேசிய முன்னணி என்ற புதுப் பெயரில் போட்டியிட்டு 7 ஆசனங்களை மட்டும் பெற்றுப் படுதோல்வியடைந்துள்ளது.
அதேபோல் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் படுதோல்வியடைந்துள்ளது. முதலாளிகளின் கட்சியான ஐ.தே.க ராஜபக்ச அரசுக்கு எவ்விதத்திலும் எதிர்ப்பைக் காட்ட வல்லமையற்றது என்பது அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தெரிந்ததே. மேற்கத்தேய அரசுகளின் நலனைப் பிரதிபலித்து நியோலிபரல் கொள்கைகளை இக்கட்சி அமுல்படுத்தும் என்பது இலங்கைத் தொழிலாளர்களுக்கு அனுபவபூர்வமாகத் தெரிந்த விடயம். ஆதரவு மிகக்குறைந்த நிலையில் ஐ.தே.க நீண்டகாலத்துக்கு அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவர்களது பலவீனத்தை ராஜபக்ச அரசு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அதேபோல், ராஜபக்ச அரசு ஜே.வி.பிக்கு எதிராகவும் பழிவாங்கல் நடவடிக்கையில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனவெறியை மார்க்சிய சொல்லாடலில் மறைத்துத் தெடர்ந்து துவேசத்தையும் பிளவுகளையும் தூண்டி வரும் ஜே.வி.பி 2005ல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் கடுமையாக வேலை செய்தது நாமறிவோம். அவர்களது பொறுக்கித்தனமான மார்க்சிய சொல்லாடல் தோய்ந்த இனவாதம் குறிப்பிடத்தக்க சிங்களத் தொழிலாளர்களை ராஜபக்சவுக்கு ஆதரவாகத் திருப்பியதை நாமறிவோம். கடந்த காலத்தில் ஜே.வி.பி எல்லாவிதமான அரசியற் தீர்வுகளையும் எதிர்த்து வந்துள்ளது. அரசுடன் தாம் ஏற்படுத்தியிருந்த கூட்டிலிருந்து விலத்திய பின்னருங் கூட அரசின் கொடூர யுத்தத்துக்குத் தமது முழு ஆதரவையும் ஜே.வி.பி வழங்கிவந்தது. பின்பு யுத்தவெற்றிப் பிரச்சாரத்தைப் பாவித்துத் தாமும் ஆதரவுபெற யுத்தத்தை நடத்திய ஜெனரல் பொன்சேகாவுடன் கூடி, ராஜபக்சவை எதிர்க்க முயன்றது ஜே.வி.பி. பொன்சேகாவைக் கைது செய்து சிங்கள இனவாத சக்திகளை மீண்டும் தன்கட்டுபாட்டில் கொண்டு வந்து விட்ட ராஜபக்ச தற்போது தமது தாக்குதலைப் பலவீனமான ஜே.வி.பிக்கு எதிராகத் திருப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுக்கு எதிர்ப்பு வளர்ந்து வரும் இத்தருணத்தில் தொழிலாளர்கள், வறிய மக்களின் அதிருப்தியைப் பரந்த போராட்டமாகக் கட்டமைக்க வக்கற்றது ஜே.வி.பி. ராஜபக்சவிடமிருந்து குறிப்பிட்ட இனவாதிகளை வென்றெடுக்கும் முயற்சியை தவிர வேறு எதையும் செய்ய அவர்கள் தயாராக இல்லை. இதனால் ராஜபக்ச தொழிலாளர்கள் மேலான தமது தாக்குதலை உக்கிரப்படுத்த – பயங்கரவாதிகள் என்ற பெயரில் ஜே.வி.பி யை தாக்குவதன் மூலம் ஒட்டுமொத்த தொழிலாளர் நலன்களையும் தொடர்ந்து தாக்க இவர்கள் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.
ராஜபக்ச கூட்டின் வெற்றி சிங்கள பௌத்த இனவாத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது. புலிகளைத் தோற்கடித்தோம் என்ற வெற்றிப் பிரச்சாரம் மூலம் ஆதரவு தேடி வந்த அரசு, சிங்ககள இனவாத சக்திகளின் ஆதரவு சிதறாதவண்ணம், சனாதிபதித் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட பொன்சேகாவைக் கைது செய்து தமது இனவாத ஆதரவை ஒன்றுபடுத்தியிருந்தது. யுத்தத்தின்போது புலிகளையும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் வேட்டையாடிய பொன்சேகா இனவாத வாக்கு வங்கியை பிரிக்கக்கூடிய அபாயம் இருந்தது. ஜனாதிபதி தேர்தலில் அவர் 40 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரைக் கைது செய்து இனவாத வாக்குகளைத் தமக்கு ஆதரவாக மீண்டும் திருப்பிய அரசு தற்போது தம்மை பேரினவாதத்தின் தனிப் பிரதிநிதியாக்கிகொண்டுள்ளது.
‘’மகிந்த சிந்தனய’ என்ற விசர்தனமான பெயர் கொண்ட மகிந்தவின் பிரச்சாரக் கொள்கைளில் அரசியல் தீர்வு பற்றி எந்த விளக்கமும் இல்லை. மாறாகத் தெற்காசியாவின் வேகமாக வளரும் முன்னணி நாடு இலங்கை என்று பிரச்சாரிக்கிறது ‘மகிந்த சிந்தனய’. இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சியடைவதாகக் காட்டப்பட்டாலும், இந்த வளர்ச்சி 2002 அமைதிப் பேச்சுவார்த்தையின் பின்னரேற்பட்ட வளர்ச்சியிலும் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சமாக 80 வீதமாக வளர்ந்திருப்பது பற்றியோ அல்லது அதிகரிக்கும் விலைவாசி பற்றியோ யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. 2009ல் IMFமிடமிருந்து கடன் வாங்கியதன் மூலம் பொருளாதாரம் வங்குரோத்தாவதைத் தவிர்த்த அரசு, தற்போது கடனளித்தவர்களின் உத்தரவுகளை நிறைவேற்றப் பொதுச்சேவைகளுக்கான செலவைக் குறைப்பது நிச்சயம். இராணுவத்துக்கான செலவு மேலும் மேலும் அதிகரிக்கும் இத்தருணத்தில் மக்கள் சேவைகளுக்கான செலவு குறைக்கப்படுவதும் வறிய தொழிலாளர்களின் நலன்கள் தாக்கப்படுவதும் நடந்தேறப்போவது திண்ணம்.
இருப்பினும், பொருளாதாரம் வளர்கிறது என்ற பிரச்சாரமும் யுத்தவெற்றிப் பிரச்சாரமும் சேர்ந்து ஆளும் கட்சிக்கு அமோக வெற்றியீட்டித் தந்துள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்து நாட்டின் சட்டத்தை மாற்றுவோம் என்று முழங்கிய அரசு மிகக குறைந்தளவு ஆசனங்களால் மட்டுமே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது. இருப்பினும், இனி அவர்கள் பல ஆசனங்களைக் காசு கொடுத்து வாங்கித் தமக்குத் தேவையான மூன்றில் இரண்டு பொரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிறுவுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின் அவர்கள் தாம் செய்யப்போவதாக சொல்லும் சட்ட மாற்றங்கள் பாரிய அழிவை கொண்டுவரவல்லன. ஒரு செனட்சபையை உருவாக்கித் தேர்ந்தெடுக்கப்படாத ‘மதத் தலைவர்களையும்’ இச்சபையில் இணைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது அரசு. இனவாத பௌத்த சமயக் கட்சியான JHU முதலான கட்சிகள் ஏற்கனவே மோசமான இனவாதம் பரப்பிவருவது நாமறிவோம். சட்டப்படி அதிகாரத்தில் பங்குபெறாத மதத் தலைவர்கள் தொடர்ந்து அரசியலை மோசமான வலதுசாரி இனவாதம் நோக்கித் தள்ளி காலங்காலமாகப் பிளவுகளுக்கு அடிகோலியதையும் நாமறிவோம். அவர்கள் தமது இனவாதப் பிரச்சாரம் செய்ய சட்டரீதியான அனுமதி வழங்குவதன்மூலம் அதிகார சக்திகள் -ஆளும் சக்திகள் இனவாத சக்திகளாக இருப்பதற்கான அடிப்படை ஏற்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் மோசமான இனவாதிகளாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சிக்குள்ளேயே இனவாத சக்திகள் பலமடைந்திருப்பதை இந்த தேர்தல் வெளிக்காட்டியுள்ளது. ஆழும் கட்சியில் பெரும் வெற்றி பெற்றவர்களில் அனேகமானவர்கள் ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர்களும் மோசமான இனவாதிகளுமாவர். இலங்கை வரலாற்றில் முதற்தடவையாகக் கூர்மையடைந்த இனவாதம் எதிர்ப்பின்றி அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. ஜே.வி.பி யில் இருந்து பிரிந்து அரசோடு இருக்கும் இன்னுமொரு மோசமான இனவாதியான விமல் வீரவன்ச கொழும்பில் அமோக வெற்றியடைந்துள்ளார். விமலுடன் பிரிந்து சென்ற ஜே.வி.பியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களில் விமலும் இன்னுமொருவரும் மட்டுமே இம்முறை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலின்போது ரராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர்கள் கட்சிக்குள் ஏனையோரை அடித்து நொருக்கித் தம் கையைப் பலப்படுத்தியதை நாமறிவோம். தற்போது அவர்கள் அதிகாரம் கேட்பாரற்று ஓங்கியுள்ளது.
ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருக்க அவரது நெருக்கமான ஆதரவாளர்கள் அவர்களைச் சூழ்ந்திருக்க மோசமான பேரினவாதம் ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் தேசிய பிரச்சினைக்கு அரசியற் தீர்வு பற்றிக் கதைப்பது வெறும் கனவுக்கதையே. தீர்வுக்கான அனைத்துக் கட்சிக் குழு என்ற பெயரில் திசவிதரனவை அலைக்கழித்து நாட்டுமக்களை வருசக்கணக்கில் பேய்க்காட்டி வருகிறது அரசு. சிங்களத் தேசியவாத சக்திகள் ஏற்றுக்கொள்ள முடியாத எந்தத் தீர்வைப் பற்றியும் அரசு அக்கறை கொள்ளாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தமிழ் முஸ்லிம் மக்களின் தேசிய அபிலாசைகளை நிவர்த்திசெய்யும் ஒரு தீர்வு அல்லது அதிகார பகிர்வு என்பது இன்று பகிடிக்கதையாகப் போய்விட்டது. வெற்றிபெறும் தமிழ் நாடாளுமன்ற .உறுப்பினர்கள் உடனடியாக என்னிடம் வந்து தீர்வு பற்றி உரையாடவேண்டும் என்று தேர்தலுக்கு முன்பே சனாதிபதி கட்டளையிட்டுவிட்டார்! தமிழ் நா.உ என் சொல்வழி கேட்காமல் அசையமுடியாது என்ற எச்சரிக்கையது. கடந்த சனாதிபதித் தேர்தலைப் போலவே இத்தேர்தலிலும் பங்குபற்றாமல் பெரும்பான்மைத் தமிழ்பேசும் மக்கள் தேர்தலைப் புறக்கணித்திருப்பது ஆச்சரியமான விடயமில்லை.
தமிழ் மக்களின் உரிமைக்காக பேசுபவர்கள் என்ற ‘தலைமையை’ தானாக வரிவித்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் பேசுவது என்பது இனி இலகுவான காரியமில்லை. கடந்த தேர்தலில் வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் ஆளும் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் முக்கியமான வெற்றிகளைப் பெற்றுள்ளன. வடக்கில் ஆளும் கட்சி 5 ஆசனங்களையும் ஐ.தே.க 2 ஆசனங்களையும் வென்றுள்ளன. தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பில் ஆளும் கட்சியிலும் பார்க்க 4000க்கும் சற்று அதிகமான வாக்குகளை மட்டுமே த.தே.கூ வென்றுள்ளது. புலிகளின் கட்டுபாட்டில் இருந்த வன்னியிலும் இதே கதைதான். யாழ்ப்பாணத்தில் வெற்றியடைந்த த.தே.கூ உறுப்பினர் ஆளும் கட்சிக்கும் ஜ.தே.க க்கும் பின்னால் மூன்றாவது இடத்தில் வந்தே வெற்றி பெற்றிருப்பதும் கவனிக்கப்படவேண்டியதே. யாழ் மாவட்ட விருப்பு வாக்குகளை அதிகளவில் பெற்று முதலாமிடத்தில் ஆளும் கட்சிக் கூட்டில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தா வெற்றி பெற்றுள்ளார். தேர்தலின் போது சாவகச்சேரியில் சாகடிக்கப்பட்ட சிறுவனின் கொலைக்கு டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டின் மத்தியிலும் இந்த ஆளுங்கட்சி அமைச்சர் அமோக வெற்றிபெற்றுள்ளார்.
கிழக்கின் முதலமைச்சர் ‘பிள்ளையான்’ என்றழைக்கப்படும் சிவநேசன் சந்திரகாந்தனும் அவரது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் கூட பெரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். முன்பு அவர்கள் செய்த வன்முறை நடவடிக்கைகள் காரணமாக அவர்களுக்கு மக்கள் மத்தியில் எதுவித ஆதரவும் இல்லை. தற்போது பிள்ளையானின் முன்னாள் தலைவரான கருணாவுடன் நெருக்கமாக இருக்கும் அரசு, பிள்ளையானைக் கைவிட்டு விட்டது. அரசு கிழக்கு முதலமைச்சரையும் அவரது நிர்வாகத்தையும் ஒரு பொம்மையாகவே ஆட்டிப்படைத்து வந்தது . அவர்களுக்கு எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. சிறு சிறு அதிகாரங்களுக்கான அவர்களது அனைத்துக் கோரிக்கைகளும் மத்திய அரசால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதியும் புகழ்பெற்ற உள்ளுர்த் தாதாவுமான கிழக்கின் கவர்னரை மாற்றக்கோரி முதலமைச்சர் பல தடவைகள் கெஞ்சிக் கூத்தாடியும் கவர்னரை மாற்ற அரசு மறுத்துவிட்டது. இதுதான் கிழக்கின் அதிகாரப் பரவலின் இலட்சணம். இந்த இலட்சணத்தில் ‘கிழக்கின் உதயம்’ கொள்கைகள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் நாம் அதே பாணியில் ‘வடக்கின் வசந்தம்’ கொள்கையை வடக்கில் அமுல்படுத்துவோம் என்று ‘மகிந்த சிந்தனய’ புலம்பித்தள்ளுகிறது. வடக்கின் வசந்தத்துக்காக வடக்கு மக்கள் ஏதோ ஆவலுடன் காத்திருப்பதுபோல் அரசு காட்டும் சினிமாவில் எடுபட்டு வடக்கில் யாரும் புல்லரிப்புக் கொள்ளவில்லை. இந்தப் பேய்காட்டும் சொல்லாடல்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதம் தாங்கிய அரச ஆதரவுக் குழு. தற்போது இவர்கள் ஒரங்கட்டப்படும் விதம் அவர்கள் தமது ஆயுதத்தை அரசுக்கெதிராக திருப்பப் பணிக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். அதே போல் ஜே.வி.பி யும் தமது வழமையான ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு நோக்கி திரும்பலாம் என்றும் பேசப்படுகிறது. வளர்ந்து வரும் வெறுப்பும் கோபமும் இதற்கான அடிப்படைகளை ஏற்படுத்திவருவது மறுக்கப்பட முடியாததே. இருப்பினும் மிகக் கோரமாகப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட விதம் ஆயுதம் தாங்கிய அரச எதிர்ப்பை பின்தள்ளிப் போட்டுள்ளது. அரச அதிகாரம் – பலத்த இராணுவபலம் கொடிகட்டி பறக்கும் இத்தருணத்தில் அரச எதிர்ப்பு என்பது மிகவும் குறைந்தளவில் நிகழவே வாய்ப்புள்ளது.
இருப்பினும், வாக்களித்தவர்களில் பெரும்பான்மையான தமிழ்பேசும் மக்கள் ஆளும் கட்சியைத் திட்டவட்டமாக நிராகரித்திருப்பதைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. 14 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்களைவிடக் குறைவாகப் பெற்றிருப்பினும் அவர்களுக்கு இதுவொரு முக்கிய வெற்றி. தமிழ்த் தேசியக கூட்டமைப்பை உடைத்து தனிக்கட்சிகள் கட்டிய சிவாஜிலிங்கம், கஜேந்திரன், போன்றோர் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளனர். த.தே.கூட்டமைப்பை விட வித்தியாசமாகத் தாம் எப்படித் தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காகப் போராடப் போகிறார்கள் என்பதை இவர்கள் யாரும் பேசவில்லை. கொடிய ராஜபக்ச அரசைத் தாக்கியதைவிட த.தே.கூட்டமைப்பைத் தாக்குவதிலேயே குறியாக இருந்தது இவர்களது பெரும்பான்மை தேர்தல் பிரச்சாரங்கள். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு என்பதைத் தவிர வேறு எந்தக் கொள்கைகளைப் பற்றியும் பேச இவர்கள் தயாரில்லை. தேசிய விடுதலையை எப்படி வென்றெடுக்கப் போகிறார்கள் என்பதைக் கூட இவர்கள் மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. ஆதரவு திரட்டத் தேசியவாத சொல்லாடல் மட்டும் போதும் என்ற மொக்குக் கணிப்பீட்டின் மீது மக்கள் மண்ணள்ளிப் போட்டுள்ளதை இவர்கள் இனியாவது புரிந்துகொள்வார்களா என்பது சந்தேகமே.
புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் தாம் “தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியே” என்ற மாயையை உருவாக்கி மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறது. அவர்கள் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகத் திரும்புகிறார்கள் என்று பல வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டபோது, தாம் என்றும் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவு என்று த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் வாள் வாள் என்று கத்தியதை நாமறிவோம். அதேதருணத்தில் ஐக்கிய இலங்கையைத் தாண்டிய எந்தத் தீர்வு பற்றியும் தாம் அக்கறைகொள்ளப் போவதில்லை என்ற வாக்குறுதியையும் அவர்கள் அரசுக்கு வழங்கியுள்ளனர்.
தங்களை யதார்த்தவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் த.தே. கூட்டமைப்பினர் ‘தற்போது சுயநிர்ணய உரிமை, தமிழீழம் என்று கதைப்பதில் அர்த்தமில்லை, நாம் இலங்கை அரசுடன் பேச வேண்டுமானால் ஐக்கிய இலங்கையின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் வென்றெடுப்பது பற்றிப் பேசவேண்டும்’ என்று புலுடா விட்டு வருகின்றனர். இந்தக்கதை புளித்துப் போன கூட்டணிக்கதை என்பதைத் தமிழ்பேசும் மக்கள் அறிவர். முன்பு ஒவ்வொருமுறையும் UNPயுடன் கூட்டணி, கூட்டு சேர்ந்தபொழுது இதே கதை பேசித்தான் அவர்கள் தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வந்தனர். கூட்டணிப் பாரம்பரியம் விட்ட இடத்தில் இருந்து தொடர்வதையே த.தே.கூட்டமைப்பு செய்கிறது, வியாபாரம் பெருகுவதை மட்டும் குறிக்கோளாக மாற்றிக் கொண்டுள்ள தமிழ் ஊடகங்களும் அவர்களுக்கு ஆதரவே. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன், சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் சொந்தக்காரர் த.தே.கூக்காக இத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சரவணபவன் தமது ஊடகங்களை த.தே.கூ பிரச்சாரங்களுக்காக முழுமையாக பயன்படுத்தி ஏனைய கட்சிகள் சார் வதந்திகளை பரப்பி வந்தமை பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை. ஏனைய தமிழ் ஊடகங்களும் அரசு சார்ந்து அல்லது ஐ.தே.க சார்ந்து இயங்கியமையால் சிறு கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் தமது கருத்துக்களை எடுத்துச் செல்ல வசதியிருக்கவில்லை. சப்ரா என்ற பைனான்ஸ் கம்பனி ஊழல் சம்மந்தமாக நிறையக் காசைச் சுருட்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டு சரவணபவன் மேல் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. போதாக்குறைக்குத் தமது பத்திரிகையில் வேலை செய்பவர்களுக்குச் சரியாக அவர் ஊதியம் வழங்குவதில்லை என்றும், பல்கலைக்கழக மாணவர்களைப் பிடித்து ட்ரெயினிங் என்று இலவசமாக வேலை வாங்குகிறார் என்றும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. ஏனைய த.தே.கூ வேட்பாளர்களும் ஒன்றும் புனித வரலாறு கொண்டவர்களல்ல. தேர்தலுக்கு முன்னர் புலி ஆதரவு சக்திகளைத் தமது கட்சியிலிருந்து வெளியேற்றிய த.தே.கூ தலைமைகள் கூடவே எஞ்சியிருந்த ‘புரட்சிகர’ சக்திகளையும் ஓரங்கட்டின. பின்பு பிரமுகர்களை அவர்கள் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுத்தனர். இந்துசமய ஆர்வலர்கள், வியாபாரப் பிரமுகர்கள், பேராசிரியர்கள் என்று விரிந்த அவர்கள் பட்டியலில் மக்கள் சேவை சார்ந்தவர்களுக்கு எந்த இடமும் இருக்கவில்லை. புலிப்பயம் காட்டி இனிமேலும் அவர்கள் எந்தப் புரட்சிகர சக்திகளையும் ஆதரிக்கப்போவதில்லை என்பது நிச்சயம்.
சிதிலமடைந்திருந்த தமிழ்க் குட்டி முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதிகளாக தம்மை நிலைநாட்டி அவர்களை பலப்படுத்தும் தமது வரலாற்று கடமையில் கண்ணுங் கருத்துமாக இருக்கும் த.தே.கூனருக்கு அவர்கள் கண்முன்னால் நடக்கும் அநீதிகள் தெரியப்போவதில்லை. துன்புறும் தமிழ்பேசும் மக்களுக்கு தம்மைத் தவிர வாக்களிக்க வேறு தமிழ்க் கட்சியில்லை என்ற தெனாவட்டில் மீண்டும் தமிழத் தேசியத்தை தேர்தல் பகடைக்காயாகப் பயன்படுத்தி வருகின்றனர். வியாபாரக் கட்சியாக மாறிவிட்ட த.தே.கூ. இந்திய மூலதனமிடுபவர்களை நோக்கி ஆர்வத்துடன் கைநீட்டும் முயற்சியில் ‘எப்பனைக்’ கூட முகாம்களில் துன்புறும் மக்களுக்காகச் செலவிடத் தயாரில்லை.
ஒடுக்கப்படும் தமிழ்பேசும் மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் எந்தத் தமிழ் கட்சியும் இத்தேர்தலில் பங்குபற்றவில்லை என்பதே உண்மை. தெற்கின் இனவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் கேவலத்தில் இருந்து தப்பும் வழியை த.தே.கூ வழங்கியது என்பதைத் தவிர அவர்களது பங்கு வேறில்லை. த.தே.கூல் இருந்து பிரிந்தவர்கள் தோல்வி கண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி மக்கள் தமது ‘கொள்கைகளுக்கு’ ஆதரவளித்திருப்பதாக போக்கு காட்டுவது விசர்த்தனமானது. த.தே.கூ வெற்றி அவர்தம் கொள்கைகளுக்கான வெற்றியல்ல.
நீண்டகாலத்தின்பின் இடதுசாரிகள் வடக்கு கிழக்கு தேர்தல்களில் பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருப்பதும் ஒரு முக்கியமான விடயம். ஐக்கிய சோசலிசக் கட்சி நாட்டின் முக்கிய இடதுசாரிச் சக்தியாகத் தம்மை மீண்டும் நிறுவியுள்ளது. இடதுசாரி விடுதலை முன்னணி என்ற புதுப்பெயரை வைத்துத் தமிழ்த் தேசியவாத சக்திகளை உள்வாங்குவதன் மூலம் குறுக்கு வழியில் வாக்குகளைப் பெறக் கனவுகண்ட நவ சமசமாஜ கட்சியினருக்கும் அதன் தலைமை உறுப்பினர் விக்கிரமபாகு கருணாரத்தினவுக்கும் இத்தேர்தல் நல்ல படிப்பினையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்புதுப் பெயரின்கீழ் போட்டியிட்ட போதும் இக்கூட்டு பெரும் தோல்வியை அடைந்துள்ளது. ஏதோவொரு வகையில் தேசியவாதத்திற்கோ இனவாதத்திற்கோ விலைபோய் வறிய மற்றும் தொழிலாள மக்களின் எதிர்காலத்தைச் சீரழித்த இலங்கை ‘இடதுசாரிய’ கேவலப் பாரம்பரியத்தில் நவ சமசமாஜ கட்சியும் சேர்ந்துள்ளது வருத்தம் தரும் விடயமே.
ராஜபக்ச சர்வாதிகாரியாக அட்டகாசம் செய்யும் இத்தருணத்தில் தேர்தல் வாக்குகளை விட இடதுசாரிய மக்கள் எதிர்ப்பு சக்தியைக் கட்டி எழுப்புவது மிக முக்கியமானது என்பதைப் புரிந்து கொண்டு புரட்சிகர இடதுசாரிகள் ஒன்றுபடவேண்டும். ஆளும் கட்சியின் கோட்டையான அம்பாந்தோட்டையில் ராஜபக்சவின் மகன் நாமல் அமோக வெற்றிபெற்றிருப்பது எமது வயிற்றில் புளி கரைக்கிறது. அடுத்த வாரிசைத் தயார்படுத்தும் ராஜபக்ச குடும்பஅரசு நீண்ட காலத்துக்கு ஆட்சியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆவன செய்து வருகிறது. அத்தியாவசியமாக இருக்கும் எதிர்ப்பை வடிவமைக்ககூடிய பலமான சக்தியில்லாத நிலையில் மீண்டும் இளைஞர்கள் ஆத்திரத்துடன் வன்முறை நடவடிக்கைகளுக்கு தாவுவது தவிர்க்க முடியாதது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதாகப் படங்காட்டி, மீண்டும் அரசு அவர்களைக் கொடூரமாக ஒடுக்கும். அதனால்தான் தனிப்பட்ட எதிர்ப்பு சக்தியை – ஒடுக்கப்படும் வறிய மற்றும் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பலமான பொதுக் கட்சியை கட்டியமைப்பது மிக மிக அவசியமானது. இதற்காக அனைத்து முற்போக்கு சக்திகளும் முன்வர வேண்டும். ‘ஐக்கிய சோசலிசக் கட்சி’ இதற்கான தம்மாலான முயற்சிகளைச் செய்ய முன்வந்துள்ளது. எதிர்ப்பைக் கட்டமைக்க வேண்டும் என்ற நியாயமான அக்கறையுள்ளவர்கள் குறைந்தபட்சம் சேர்ந்து உரையாடி ஒன்றுபட்ட எதிர்ப்பியக்கம் நோக்கி நகர்தல் இன்றைய காலகட்டத்தில் மிக மிகத் தேவையான ஒன்று.