சண்ணின் விசுவாசங்கள்
1 அழைப்பிற்கு நன்றி
‘ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்’ என்ற என்.சண்முகதாசன் அவர்களின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமற் போனதற்கு மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட காலத்தின் பின் முதற் தடவையாக பொது வேலை நிறுத்தக்கோரிக்கையை முன்வைத்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து வாழ் தொழிலாளர்கள் இன்று லண்டனில் அணிவகுப்புச் செய்கின்றனர். இங்கிலாந்து இடதுசாரிய வரலாற்றில் இது ஒரு முக்கிய வரலாற்றுத் திருப்புமுனை. இந்த அணிவகுப்பிற் கலந்துகொள்ள வேண்டியிருப்பதாலும் – பொது வேலை நிறுத்தக் கோரிக்கையை தலைமையேற்றுச் செல்லும் குழுவில் பங்குபற்றுவதாலும் இக்கூட்டத்திற் கலந்துகொள்ள முடியவில்லை.
இத்தகைய மீள் பதிப்புகளும் உரையாடல்களும் மிகவும் வரவேற்கப்படவேண்டியவையே. இலங்கையில் மிகவும் பலமான மற்றும் தெளிவான போராட்டத்தைக் கட்டும் வேலை அவசியத்தேவையாக இருக்கும் இன்றைய நிலையில் இதுபோன்ற உரையாடல்களும் வரலாற்றை நுணுகி ஆய்வதும் அத்தியாவசியமானதே. ஒடுக்கப்படும் மக்களின் – தொழிலாளர்களின் போராட்டத்தைக் கட்டுவது எப்படி என்ற மார்க்சிய அறிதல் பற்றி இக்கூட்டத்திற் கலந்து கொள்பவர்கள் திறந்த மனத்துடனும் சனநாயக முறையிலும் உரையாடுவார்கள் என்ற நம்பிக்கையில் எனது கருத்துகளையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். விமர்சனத்துக்காகப் புத்தகத்தை தந்துதவிய தோழர் பாலனுக்கு மிக்க நன்றி.
2 கட்சித் தலைமை பற்றி
சண்முகதாசன் தலைமையில் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டங்கள் – முக்கியமாகச் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் பிரதானமானவை. தமிழ் பேசும் மக்களின் மத்தியில் கம்யூனிசக் கட்சியின் செல்வாக்கைப் பரப்பியதில் சண்முகதாசனின் பங்கு முக்கியமானது. ஆனால் அவரது மார்க்சிய அறிதல் மற்றும் செயன்முறை சரியானதா? என்ற அடிப்படைக் கேள்விளை நாம் எழுப்பவேண்டியுள்ளது.
அவரது மார்க்சியம் ஒருவித ‘விசுவாச’அரசியலாகவும் இருந்திருக்கிறது. ஸ்டாலின் மேலான -மாவோ மேலான உருப்படியான விமர்சனங்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் தனது ஆதரவுச் சக்திகளின் கேள்விக்கிடமற்ற விசுவாசியாகவும் எதிர்ப்புச் சக்திகளினை துரோகிகள்-திரிபு வாதிகள்- மனிதகுல எதிரிகள் என்று துடைத்து எறிபவராகவும் இருந்திருக்கிறார்.
ஒன்றுக்கொன்று நேரெதிரான முரண்கள் எவ்வாறு முட்டி மோதுகின்றன – அதிலிருந்து எவ்வாறு மேலீட்டு மாற்றம் உருவாகிறது என்பது பற்றி இயங்கியல் பேசுகிறது. தொழிலாளி – முதலாளி வர்க்கங்கள் – அவற்றின் நலன்கள் – நேரெதிரானவை என்பதை மார்க்ஸ் மூலதனத்தில் விளக்கியிருப்பார். ஆனால் இதை இலகுபடுத்திப் புரிந்துகொண்டு கட்சித்தலைமை நலன் சமன் கட்சி நலன் – அதன் நேரெதிர் எதிராளிகள் மற்றும் முதலாளிகள் என்று சுருக்கிப் பார்ப்பது பல்வேறு குறுங்குழுவாதக் கட்சிகளின் நடவடிக்கைகளாக இருந்துவருவதை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
இம்முறையிற் கட்சியின் நலனும் – பல சமயங்களில் தலைமைகளின் சொந்த நலன்களும் வர்க்க நலன்களைத் தாண்டி முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. இந்நிலையில் எப்படி மேற்சொன்ன முரண்நிலை பொருத்திப் பார்க்க முடியும்? தவிர முரண்நிலை இயக்கம் பற்றிய மரபுவழி-ஸ்டாலினிய விளக்கம் முற்றிலும் தவறான ஒன்று. முரண்களின் கூட்டு மற்றும் அவற்றின் வளர்ச்சி பற்றி மேலதிக உரையாடல்கள் நிகழ்த்தப்படவேண்டும்.
சண்முகதாசன் பற்றிய தனிப்பட்ட விமர்சனத்தை வைப்பது இங்கு எமது நோக்கமில்லை. அவர் விசுவாசத்தின் பெயரில் கண்டபாட்டுக்குத் தன் எதிரிகளாக நினைத்தவர்கள் மேலெல்லாம் அள்ளி எறிந்துள்ள குற்றச் சாட்டுகளுக்குப் பதில் சொல்லும் நோக்கமும் இங்கில்லை. ட்ரொட்ஸ்கியின் காரியதரிசியின் காதலன் பொறாமையில் ட்ரொட்ஸ்கியைக் கொலை செய்தான் என்றோ அல்லது ஸ்டாலின் எவ்வாறு கெட்டிக்காரத்தனமாக கிட்லருடன் சமாதான ஒப்பந்தம் போட்டார் என்றோ – சண்முகதாசன் பூசி மெழுகி விளாசியிருக்கும் குற்றச்சாட்டுகளை அலசுவது வீண்வேலை. ஆனால் சண்முகதாசன் ஒடுக்கப்பட்டோர் போராட்டங்களுக்கும் விசுவாசமாக இருந்தார் என்ற அர்த்தத்தில் அவர் எதிர்கொண்ட சிக்கல்களைப் பற்றி ஆய்வது அவசியம். ஏனெனில் நாம் இன்றும் அவற்றை எதிர்கொள்கிறோம்.
3 பிரபல முன்னணி – எதிர் – ஐக்கிய முன்னணி
இரண்டாம் உலக யுத்தத்தின் போது சோவியத் நலனை மற்றும் முதன்மைப்படுத்திய – ஸ்டாலின் முன்வைத்த பிரபல முன்னணி (Popular Front) இன்றும் நம்மை ஆட்டிப்படைக்கிறது. அதன் ஒரு தொடர்ச்சியாகவே மாவோவின் ‘வர்க்கங்களுக்கிடையிலான இணக்கம்’ – ‘முரண்களைப் பயன்படுத்தி எதிரிகளை அடித்தல்’ போன்ற கருத்துகள் வாதிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி போன்ற அப்பட்டமான முதலாளித்துவக் கட்சிகளுடன் தேர்தற்கூட்டு வைப்பதை விக்கிரமபாகு கருணாரத்தின போன்ற “இடதுசாரிகள்” முன் மொழிவதும் – கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சம சமாஜ கட்சி (எல்.எஸ்.எஸ். பி) மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்ற ‘இடதுசாரிகள்’ கொலைகார அரசாங்கத்தின் நிழலில் குளிர்காய்வதும் இன்று இலங்கையின் இடதுசாரிய வரலாற்றின் பகுதிகளாக இருக்கின்றன. இடதுசாரிகள் பிரபல முன்னணியை ஆகர்சிக்கத் தொடங்கியதன் தொடர்ச்சியே இது.
‘சோசலிச’சோவியத் ரஸ்யாவைக் காப்பாற்ற உங்கள் உங்கள் நாடுகளின் முதலாளிகளுடன் ஒன்றிணையுங்கள் என்று ஸ்டாலினிஸ்டுகள் மிக முட்டாள்தனமான வாதத்தை இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் வளர்த்தெடுத்தார்கள். பாசிசத்துக்கு எதிராக அனைத்துச் சக்திகளும் திரளுங்கள் என்று பிரபல முன்னணிக் கருத்து மூன்றாம் அகிலத்தில் இருந்த அனைத்துப் பிரிவினருக்கும் போதிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தை ‘ஏகாதிபத்திய யுத்தம் என்று கணிப்பீடு செய்ததால் இலங்கைக் கம்யூனிஸ்டுகள் எந்தத் தவறையும் இழைக்கவில்லை’ என்கிறார் சண்முகதாசன். பின்பு சொல்கிறார் ‘1941ம் ஆண்டு யூன் 22ம் திகதி கிட்லர் சோவியத் யூனியனைத் தாக்கிய பின்னர் தான் மக்கள் யுத்தம் என்று இந்த யுத்தத்தை கணிப்பீடு செய்யும் பிரச்சினை எழுந்தது’ என. கிட்லர் – ஸ்டாலின் ஒப்பந்தத்தைப் பாசிஸ்டுகள் காப்பாற்றுவார்கள் என்ற கனவில் ஏகாதிபத்திய யுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட யுத்தம் ஒப்பந்தம் கிழிக்கப்பட்டதும் மக்கள் யுத்தமாக மாறிவிட்டது! பாசிஸ்டுகளின் கையில் மில்லியன் கணக்கான மக்கள் – தொழிலாளர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்ததை விட ரஸ்ய அரசின் நலன் முதன்மைப்படுத்தப்பட்டு விவாதிக்கப்படுவதை அவதானிக்க. மூன்றாம் அகிலத்தின் முடிவைப் பறைசாற்றிய நிகழ்விது.
சோவியத்தை தாக்கியதால் மக்கள் யுத்தம் -இல்லாவிட்டால் ஏகாதிபத்தியம் என்ற போக்கில் வளர்க்கப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பின் எச்ச சொச்சங்களாக கியூபா போன்ற நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு சுருங்கிப்போய்க்கிடப்பதையும் நாம் இன்று பார்க்கிறோம்.
பாசிசம் அடித்து நொருக்கப்படவேண்டியது என்பதில் இருவேறு கருத்தில்லை. ஸ்டாலின்-கிட்லர் ஒப்பந்தம் இரகசியமாக நிறைவேற்றப்பட்ட காலத்திலேயே பாசிசத்தை சரியானபடி எதிர்த்தல் என்ற உரையாடல் மார்க்சியர் மத்தியில் (சோவியத் யூனியனுக்கு வெளியே) பலமாக நிகழத் தொடங்கிவிட்டது. முதலாளித்துவ சக்திகளைப் பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே பாசிசத்தை எதிர்க்கலாம் என்று அந்த வர்க்கத்தின் “பலத்தில்” அதிகூடிய பிரமிப்பை ஏற்படுத்தியதற்கு மாறாக பலம் பொருந்திய தொழிலாளர்கள் மற்றும் முற்போக்கு சக்திகளின் ஒன்றிணைவில் – ஐக்கிய முன்னணியால் பாசிசத்தின் முதுகெலும்பை உடையுங்கள் அதன் உடைவு முதலாளித்துவத்தின் உடைவையையும் தொடக்கி வைத்து இத்தகைய போக்குகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை அடைவதை நோக்கி நகரும் என்று அக்காலத்தில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வாதிட்டனர்.
இலங்கை அரசியலில் இது ஒரு முக்கிய கால கட்டம். இந்த உரையாடலே இந்திய இலங்கை இடதுசாரிகளை வேறு வேறு திசைகளில் பயணிக்கச் செய்தது. இந்தியக் கம்யூனிஸ்டுகள் மூன்றாம் அகிலத்தின் கோரிக்கைப் படி காங்கிரசில் கரைந்தார்கள் – மறுத்தவர்கள் சூறையாடப்பட்டார்கள் தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கட்சியில் இருந்து விலத்தப்பட்டார்கள். இலங்கையில் எல் .எஸ். எஸ் .பி ஐக்கிய முன்னணியை முன்வைத்து ஆங்கிலேய ஆட்சியையும் யுத்தத்தையும் கடுமையாக எதிர்த்தது. இவ்வாறுதான் இலங்கையின் முக்கிய இடதுசாரியக் கட்சியின் தோற்றம் உருப்பெற்றது. ஆரம்பகாலத்தில் சமசமாஜ கட்சியில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை சண்முகதாசன் மூடி மறைக்க முயல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அக்காலத்தில் அவர் மாவோவைப் படித்திருந்தாரா என்று தெரியவில்லை. அதற்கான சந்தர்ப்பம் அன்று இலங்கையில் இருந்ததாகத் தெரியவில்லை. அக்காலத்தில் ஏகாதிபத்திய ஆதரவும் – மக்கள் யுத்தம் என்று வர்ணனையும் செய்துவந்த கம்யூனிஸ்டுகளுடன் தான் சண் தொடர்பில் இருந்தார். அந்த நேரம் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ஆங்கிலேய அரசு வேட்டையாடிய போது கம்யூனிஸ்டுகள் அரசுக்கு ஆதரவு நிலையில் இருந்தனர். இதன்பிறகு வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து எழுதும் பொழுது அவர் மாவோவின் மேற்கோள்கள் ஊடாகத் தனது வாதத்தை நகர்த்திச் செல்வது உண்மைத் தன்மையற்ற செயற்பாடு. மாவோவின் கருத்தின் படி கம்யூனிஸ்டுகளோ அல்லது சண்ணோ அன்று இயங்கியிருந்தால் அவர்தம் கட்சி பலப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கலாம். ஆனால் அன்றைக்கு அவர்கள் அதன் நேரெதிர் நிலையில் இருந்தார்கள். இக்காலத்தில் ரஸ்யாவுக்கும் சீனாவுக்கும் இருந்த முரண்பாடுகள் இன்னுமொரு தனி விவாதம்.
‘பொது எதிரிக்கெதிராக அனைவருடனும் ஒன்றுபடுங்கள்’ என்ற வாதம் மிகவும் பிற்போக்குத்தனமானது. இதற்கும் தற்கால ஜோர்ஜ் புஷ் வாதத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. வர்க்கங்களுக்கிடையிலான முரண்களைப் பூசி மெழுகி ஒரு முன்னணி கட்டுவதன் மூலம் சாதிக்கக்கூடியது என்ன ? இத்தகைய பிரபல முன்னணியால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சிகள் போரட்டத்தை மற்றும் போராட்ட வரலாற்றை மறுத்தன. பல்வேறு புரட்சிகள் தடைப்பட்டன. இக்கட்சிகள் தாமிருந்த நாடுகளில் தம் அரசுகளுக்கு ஆதரவு கொடுக்காத நிலைப்பாடு எடுத்திருந்தால் சோவியத் யூனியன் தோற்கடிக்கப்பட்டிருக்குமா? ‘இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு ஆதரவில்லை அதனால் நான் ரஸ்யாவுடன் சேரமுடியாது கிட்லருடன் அடி வாங்கிச் சாகிறேன்’ என சேர்ச்சில் சொல்லியிருப்பாரா? இவைபற்றி மேலும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். மூன்றாம் அகிலத்தை உடைத்ததைத் தவிர இக்கொள்கையால் எப்பயனுமில்லை!
இந்தியக் கம்யூனிஸ்டுகளைப் பாருங்கள்! இன்றும் காங்கிரசுக்கு ஏதோ ஒரு முறையில் ஊதுகுழலாகப் பணி செய்து கிடப்பதே தம் கடன் என்று அவர்கள் பணிவோடிருக்கிறார்கள். எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்க முடியும் – எத்தனை உரிமைகளை வென்றெடுத்திருக்க முடியும். அரசையும் ஏகாதிபத்தியத்தையும் ஒட்டுமொத்தமாக எதிர்த்த சமசமாஜிகளின் போராட்டத்தால் இலங்கையில் இலவசக் கல்வி – இலவசச் சுகாதாரம் என்று சில சலுகைகளையாவது தொழிலாளர்கள் பெற முடிந்துள்ளது. இது பற்றி சண்ணிடம் ஒரு வரிகூட இல்லை. அவரின் பார்வையில் சமசமாஜிகள் என்றும் குற்றவாளிக்கூண்டிலேயே நின்றார்கள். 1960 களில் அவர்கள் பிரபல முன்னணிக்குத் தாவியதை மட்டும் வைத்து சமசமாஜ வரலாற்றை பார்க்கும் தவறை அனைத்துக் குறுங்குழுவாதிகளும் செய்கிறார்கள். இது ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தாலும் – இது சமசமாஜிகளின் முடிவை தீர்மானித்த நிகழ்வாக இருந்தாலும் – இதுவே சமசமாஜிகளின் சாரம் என்று பார்ப்பது மிகத்தவறான வரலாற்றுப் பார்வை.
இந்த விவாதம் இன்றும் முக்கியமானது. ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை எடுத்துச் செல்வது எவ்வாறு என்ற கேள்விக்கு ‘தமிழர்களின் ஒடுக்குமுறைக்கு சார்பாக குரல் கொடுக்கும் அனைத்துச் சக்திகளுடனும் இணைவோம் என்பதைப் பதிலாக நாம் முன்வைக்க முடியாது. போராட்டச் சக்திகளின் – முற்போக்குச் சக்திகளின் ஒன்றிணைந்த போராட்டத்தை நாம் முன்வைக்க வேண்டுமே தவிர ‘பொது எதிர்ப்பை’ கட்டுவது என்ற கனவு ஆபத்தானது.
4 நிரந்தரப் புரட்சி பற்றி
‘ ‘நிரந்தரப் புரட்சி” என்பதை ட்ரொட்ஸ்கியே ஏற்றுக்கொண்டார்”என்று எழுதக்கூடியவர் சண்முகதாசன் ஒருவராகத்தான் இருக்கமுடியும். ட்ரொட்ஸ்கிசம் ஆட்டிப்படைத்த இலங்கைவகை மவோயிசம் இது என்று சொல்லத்தோன்றுகிறது! இதை அவர் ஸ்டாலின் விசுவாசியாக இருந்துகொண்டு எழுதுவது இன்னும் விசித்திரமானது. எவ்வளவு தூரத்துக்கு மார்க்சிய விவாதங்களைச் சண் கவனித்து வந்தார் என்ற கேள்வியை இது எழுப்புகிறது. நிரந்தரப் புரட்சி என்பது ஒரு எதிர்ப்புரட்சி என்று ஸ்டாலினிஸ்டுகள் 1920களின் பிற்பகுதியிலும் 30 களிலும் குத்தி முறிந்து எழுதியவை அளவுகணக்கற்றவை. அன்று நடந்த விவாதங்கள் பல்வேறு கட்சிகளின் உடைவுக்கும் பல புதிய கட்சிகளின் ஆரம்பத்துக்கும் காரணமாக இருந்தது வரலாறு.
மாவோ சொன்ன தொடர் புரட்சிக்கும் ட்ரொட்ஸ்கி வைத்த நிரந்தரப் புரட்சிக்குமான வித்தியாசம் தெளிவற்ற காரணத்தால் இப்படி ஒரு அடிதடி முடிவுக்கு தாவிவிட்டார் சண்முகதாசன் என்று தோன்றுகிறது. சனநாயகப்புரட்சி இன்றி சோசலிசப்புரட்சி சாத்தியமில்லை என்பதைக் கடைசிவரை ‘விசுவாசித்தவர் ‘ஸ்டாலின். இதற்கு நேரெதிரான கருத்துடயது லெனின் எழுதியது ஏப்பிரல் அறிக்கை. புரட்சிக்கான வேலைத்திட்டமான இவ்வறிக்கையை அரைகுறை மனதோடு ஏற்றுக்கொள்வதற்குத் தனக்கு இரண்டு கிழமைகளுக்கு மேல் பிடித்தது என்பதை ஸ்டாலினே எழுதியுள்ளார்.
புரட்சிக் காலத்தில் வர்க்கங்களின் குணாம்சங்கள் மாற்றமடைவதை வரலாற்றில் அவதானிக்கலாம். ஆழும் வர்க்கத்தில் உடைவுகள் ஏற்படுவதை புரட்சிக்கான அறிகுறிகளில் ஒன்றாகச் சுட்டிக்காட்டுவார் லெனின். புரட்சிக் காலத்தில் பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் உடைபட்டுத் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் சேரும் சாத்தியம் நிகழும் என பேசுவர் மார்க்சியர். சீனப்புரட்சியின் போது பல வர்க்கங்கள் தொழிலாளர் தலைமையில் ஒன்றிணைவதைப் பார்க்க முடியும். இதை நான்கு வர்க்கங்களுடனான ஒன்றிணைவு என்று எக்காலத்துக்குமான தத்துவமாக மாவோயிஸ்டுகள் முன்வைப்பது தவறு. லெனின் -ட்ரொட்ஸ்கி- மாவோ ஆகியோரின் கருத்தின் படி அவர்கள் தாம் புரட்சிகரக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்களாகக் கருதியதைப் பார்க்கலாம். முதலாளித்துவம் இவ்வளவு காலத்துக்குத் தப்பிப் பிழைக்கும் என்று அவர்கள் நம்பியிருக்கவில்லை. புரட்சிகர மாற்றத்தை முதலாளித்துவம் எதிர்நோக்கி நிற்கிறது என்பதை அவர்கள் சுட்டியது சரி என்ற போதும் அவர்கள் அனுமானித்த கால வரையறை அவர்களின் எதிர்பார்ப்பையும் மீறி அதிகமாகிச் செல்வதை இன்று யாரும் மறுக்க முடியாது. முதலாளித்துவம் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுக்கும் ‘முற்போக்கு’காலகட்டத்தை எப்பவோ தாண்டிவிட்டது. இருப்பினும் அதன் முடிவுக்கட்டம் வந்துவிட்டது என்று நேரம் குறிக்கும் விளையாட்டில் குதிப்பது பிழையான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்லும். மவோ புரட்சிக்கால திட்டமிடலை எக்காலத்துக்குமான திட்டமிடலாக முன்வைப்பது தவறு. ஆனால் விசுவாசிகள் இதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். மாவோ ஸ்டாலினின் தொடர்ச்சியே. இதை மறுத்தது நிரந்தரப்புரட்சி. முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி என்ற மார்க்சிய கருத்துக்கு முதலிடம் கொடுக்கிறது அது. லெனினின் ஏப்பிரல் அறிக்கையை அப்படியே பின்பற்றி ரஸ்யாவிலோ அல்லது உலகின் எந்த நாட்டிலும் ஒரு புரட்சியை இன்று நடத்திவிட முடியாது. முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வேலைதிட்டங்களை முன்னெடுக்கவேண்டியதை நிர்ப்பந்திக்கிறது. அதேவேளை உலகளாவிய முதலாளித்துவ வளர்ச்சியையும் – உலகளாவிய தொழிலாளர் பிரக்ஞையையும் கவனத்திற் கொள்ளாது புரட்சிக்கான திட்டமிடலை ஒரு நாட்டின் சூழ்நிலைக்குள் குறுக்கிப்பார்ப்பது – ஒரு நாட்டில் சோசலிசத்தை நிறுவலாம் என்று பேசுவது தவறு என்ற சரியான மார்க்சிய அரசியற் பொருளாதாரத்தைப் பேசுவதே நிரந்தரப் புரட்சி.
முதலாளித்துவச் சனநாயகத்தை நிறுவுதல் என்ற பெயரில் கம்யூனிசக்கட்சி உள்நாட்டுப் பூர்சுவாக்களில் ‘முற்போக்கை’ கண்டு பிடித்தது. அதன் தொடர்ச்சி தான் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் சீரழிவும். இத்தகைய தத்துவார்த்த பிழை எவ்வாறு இலங்கைக் கம்யூனிசக் கட்சியினை முடக்கியது என்பதற்கு ஏராளமான வரலாற்று உதாரணங்களை வழங்க முடியும். இலங்கைக் கம்யூனிசக் கட்சியோ அல்லது அதிலிருந்து பிரிந்த பீக்கிங் பிரிவோ ஒருபோதும் பெரும் கட்சியாகப் பரிணமிக்க முடியவில்லை.
சண்முகதாசன் ஒரு தொழிற்சங்கவாதியாக கட்சிக்குள் முக்கியமானவராக இருந்தார். கட்சித் தலைமைகளுடன் தத்துவார்த்த மற்றும் தனிப்பட்ட முரண்கள் இருந்தபோதும் அவர் ஒரு கட்சி விசுவாசியாகவே தொடர்ந்து செயற்பட்டு வந்திருக்கிறார். சி .டி. யு .எப் தொழிற்சங்கத் தலைவராக இருந்தமையால் இந்த முரண்நிலையைப் பேணுவது அவருக்குச் சாத்தியமாகவிருந்தது. அப்படியிருக்க குருஷ்சேவ் அதிகாரத்தை எடுக்கும்வரையும் ஒரு கம்யூனிச் கட்சிகளும் பிழைவிடவில்லை என்ற பாணியில் வாதிப்பது தவறு. குருஷ்சேவிற்குப் பிறகு தான் கட்சி ‘சோவியத் திரிபுவாத எஜமான்களின் விசுவாசமான கருவியாகியது” என்று இவர் சாடுவது அபத்தம். குருஷ்சேவின் புகழ்பெற்ற 1956ம் ஆண்டு இரகசிய சொற்பொழிவு ஸ்டாலினிய விசுவாசத்தை உடைத்தது. சோவியத்துடனான உறவைப் பேணுவதை முக்கியத்துவப்படுத்தி பல கம்யூனிஸ்ட் கட்சிகள் சோவியத்துடன் உடைத்துக்கொள்ளாத போதும் அவர்கள் ஸ்டாலினியத்தில் இருந்து முற்றாக உடைத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஸ்டாலினின் முரட்டு விசுவாசிகள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள் – அல்லது வெளியேற்றப்பட்டார்கள். சண்முகதாசனும் இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து வெளியேற்றப்பட்டார்.
சண்ணின் அசைக்கமுடியாத முரட்டுத்தனமான ஸ்டாலின் விசுவாசமே அவரைக் கட்சியில் இருந்து அந்நியப்படுத்தியது. பிரித்தானியக் கம்யூனிச கட்சி ஆட்சேர்க்கும் முறை அக்கட்சிக்குள் ‘திரிபுவாத வேலைமுறை’ ஊடுருவியிருந்ததற்குச் சாட்சி என்று கூறும் சண்முகதாசன் அந்த ஆய்வை ஏன் குருஷ்சேவுக்கு முன் செய்யவில்லை. குருஷ்சேவுக்கு முன் பின் என்று கம்யூனிசக் கட்சிகளை ஆய்வு செய்பவர்களுக்குத் தெரியும் என்ன என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்று. குருச்சேவ் ஸ்டாலினை விமர்சித்தார். அவர் செய்த தவறுகளை வரிசைப்படுத்தினார். ஆனால் அவர் அத்தவறுகளின் தொடர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதையேதான் உலகெங்கும் கம்யூனிசக்கட்சிகளும் செய்தன.
1948களிலேயே கம்யூனிசக் கட்சிக்குள் ‘அரை ட்ரொட்ஸ்கியத்துக்கு’ தாவும் போக்கிருந்தது என்றும் பின்பு எவ்வாறு ஐரோப்பியத் தோழர்கள் சீனத்தோழர்கள் முன்வைத்த கருத்துகளை எதிர்த்தார்கள் (சீன சோவியத் உடைவு) என்றும் கூறும் சண் தான் பிளவுக்கு முன் எது சார்பாக வாதிட்டார் என்று கூறவில்லை. அக்காலத்தில் நான் ‘தத்துவார்த்த ரீதியில் அறிவுடையவனாய் இருக்கவில்லை’ என்பதை சண் ஒத்துக்கொள்கிறார். இது சீனத்தோழர்களின் ‘திரிபுவாதத்தை’ தான் தெரிந்துகொள்ள முடியாமற் போனதற்குக் காரணம் என்று கூறுகிறார். இருப்பினும் கம்யூனிசக் கட்சியின் வரலாற்றுப் பிழைகளையோ அல்லது சீனச்சார்ப்புக் கட்சிகளின் வரலாற்றுப் பிழைகளையோ அவர் ‘ஏற்றுக்கொண்டு’ ஆராயவில்லை. அவற்றைத் ‘தரிபுவாதிகளின்’ சதி என்ற பாணியில் அவர் எடுத்தெறிந்து செல்வதை அவதானிக்கலாம். இதல்ல சுயவிமர்சனம். ஒரு பிழையை ஒத்துக்கொண்டு அடுத்த பிழைநோக்கி நகர்வதை நியாயப்படுத்துவதற்குப் பெயரா சுயவிமர்சனம்? திரிபுவாதத்தின் சதி என்று பிழைகளைச் சுமக்க ஒரு ‘துரோகிக் கும்பலை’ உருவாக்குவதா சுயவிமர்சனம்? அதுதான் சுயவிமர்சனம் என்றால் அது மிகவும் ஆபத்தானது. சனநாயகரீதியில் வரலாற்றை நாம் ஆராய்வது போராட்டத்தை தெளிவான திசை நோக்கி நகர்த்தும்.
5 சீன விசுவாசம்
சண்முகதாசனின் சீன விசுவாசம் அரசியற் குருட்டுத்தனத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது. பண்டாரநாயக்காவுடன் கூட்டுச் சேர்ந்ததற்கு சமசமாஜிகளை விளாசித் தள்ளும் அதேவேளை இலங்கை-சீன பொருளாதார உறவை ‘நற்செய்தி’ என்று வர்ணிக்கிறார். பண்டாரநாயக்கா சிங்கள இனத்துவேசத்துக்கு அடிபணியும் சிங்களத் தேசிய நடைமுறைகளைக் கடைப்பிடித்ததை ‘மன்னிக்கக்கூடிய சந்தர்ப்பவாதம்’ என்கிறார். பண்டாரநாயக்காவின் சிங்கள் மகாசபை ‘பச்சை வகுப்புவாத’ இயக்கம் என்பதைத் தெரிந்தும் இதைச் சொல்கிறார். பின்பு இதே பண்டாரநாயக்கா தான் ‘தமிழர் பிரச்சினைக்கு பரிகாரம் ஒன்றை அமுல் படுத்தக்கூடியளவிற்கு போதிய தேசிய அந்தஸ்தும் மக்கள் ஆதரவுமுடய ஓரேயொரு சிங்களத் தலைவர்’ என்பதை தமிழ் தலைமைகள் புரிந்துகொள்ளவில்லை என்று சாடுகிறார். பண்டிட் நேருவிலும் பார்க்க பண்டாரநாயக்கா இடதுசாரியதன்மை கொண்டவராக இருந்தார் என்று வர்ணிக்கிறார்.
தமிழ்த் தலைமைகளின் தூரப்பார்வைக் கோளாறு பற்றி அவர் குறிப்பிடுவது நியாயமான கருத்தே. இருப்பினும் பண்டாரநாயக்காவின் சந்தர்ப்பவாதத்தை – அவர்தம் அரசியலின் இனவாதத் தன்மை பற்றி சண் குறைத்து மதிப்பிடுவதாகவே சொல்லவேண்டியுள்ளது. 50களிலும் 60களிலும் இடதுசாரியக் கருத்துகளுக்குச் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு சமசமாஜிகளால் கட்டி எழுப்பப்பட்டது. 53 பொது வேலை நிறுத்தம் முதலாளித்துவ கட்சிகளினையும் அதன் தலைவர்களையும் ஆட்டங்காண செய்திருந்தது. இந்நிலையில் சில இடதுசாரியக் கருத்துகளை உள்வாங்காமல் பொப்புலரிச கட்சியை கட்டுவதோ அல்லது பண்டாரநாயக்கா போன்ற பொப்புலரிச தலைவர்களோ உருவாகுவது கடினம். சிங்கள இனவாதத்தையும் இடதுசாரிய கருத்துகள் சிலதையும் இணைத்த பொப்புலரிசத்தின் தோற்றத்தின் அடிப்படை இதுதான். பண்டாரநாயக்கா அதன் முக்கிய பிரதிநிதி.
6. ‘சண்ணிண் தமிழ் அடையாளமும் தேசியமும்
சண்முகதாசனின் வரலாறு இன்னுமொரு முக்கிய படிப்பினையையும் எமக்குக் கற்றுத்தருகிறது. ஒருவர் தன்னை மார்க்சியர் என்று அடையாளப்படுத்திக்கொள்வதன் மூலம் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் அடையாளத்தைத் தெரிவு செய்துகொள்கிறார். அது பல்வேறு இன-மொழி-மத அடையாளங்களைக் கொண்ட வறிய மக்கள் கூட்டத்தையும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இருப்பினும் மார்க்சிய அடையாளம் ஒருவரின் ஏனைய அடையாளங்களை இல்லாமற் செய்துவிடுவதில்லை. மார்க்சிஸ்டுகளுக்கு இன-மொழி-மத அடையாளங்கள் கிடையாது என்கிறோம். அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரணியில் நிற்பவர்கள் அவர்கள். ஆனால் அதற்காக அவர்கள் தம்மை அடையாளங்களைத் தாண்டியவர்களாக தம்மை நினைத்துக் கொள்வது தவறு. அடையாளங்களில் இருந்து விலத்தல் அகக்காரணிகளால் மட்டும் நிகழ்வதில்லை. புறக்காரணிகளையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
சண்முகதாசனின் தமிழ் அடையாளம் கடைசிவரை அவரைத் துரத்திப்பிடித்தவண்ணமே இருந்தது. ஒட்டுமொத்த இலங்கைத் தொழிலாளர்களுக்கும் தலைமைத்துவத்தை கொடுக்க அவரது ‘தமிழ்’அடையாளம் தடையாக உருவாகிக்கொண்டிருந்ததை அவர் தனது சமகாலத்தில் அவதானித்து அந்தப் பிரக்ஞையுடன் நடந்ததாகத் தெரியவில்லை. தமிழ்-சிங்கள் சமூகங்களுக்கிடையே தேசியவாதத்தை வளர்ப்பதில் தமிழ்-சிங்கள முதலாளித்துவ கட்சிகள் மும்முரமாக இருந்தன. இக்காலத்தில் ‘இலங்கைத் தேசியம்’ என்ற அடிப்படையில் சோசலிசப் புரட்சியைப் பேசித்திரிந்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களில் ஒருவராக இருந்திருக்கிறாரவர். அவர் தனது சமகாலத் தேசியம் சார் சமூக அசைவுகளை நுணுக்கமாக அவதானிக்கத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை நாம் வைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது.
‘நான் தமிழ் அல்லாது சிங்களத்தில் பேசியதைக் கண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாத தலைவர்கள் பட்ட அவஸ்தையை நான் இன்னும் நினைவு கூறுகிறேன்’ என்று மே தினப் பேரணியில் நடந்த சம்பவத்தைப் பற்றி சண்முகதாசன் எழுதியிருப்பதை மனவருத்தத்துடன்தான் படிக்க முடிகிறது. தமிழ் கம்யூனிஸ்டின் தலைமையில் எவ்வாறு சிங்கள தொழிலாளர்களை ஒன்றிணைவென்பது பற்றி சண்முகதாசன் அக்காலத்தில் சிந்தித்ததாக தெரியவில்லை. பிற்காலத்தில் அந்த ஞான உதயம் வந்தபொழுது திருத்துவதற்கான காலம் கடந்துவிட்டது. அவர் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்கள் எவ்வாறு குறிப்பிட்ட காலப்பகுதிகளில் கூடிக்குறையும் என்ற முழுமையான அறிவுடன் இயங்கியதாக தெரியவில்லை. ஒரு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதும் சோசலிஸ்டுகளின் கடமை என்றும் – அந்த நாடு சீனச் சார்பு அல்லது ரஸ்ய சார்பு எடுப்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றும் மாவோயிஸ்டுகளும் ஸ்டாலினிஸ்டுகளும் போதித்து வருவது தேசிய இனங்களின் எழுச்சி பற்றிய அவர்தம் புரிதலைப் பாதிக்கிறது.
சண் சரியாகச் சிங்களம் பேச முடியாதவர் அவருக்குச் சிங்கள இளைஞர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை என சிலர் குற்றம் சாட்டுவர். அவருக்குக் கீழிருந்த சிங்கள இளைஞர்கள் பிரிந்து சென்று ஜே.வி.பியை உருவாக்குவதற்குப் பின்னாலும் சண்ணின் தமிழ் அடையாளம் இருப்பதாகவும் சிலர் சொல்வர். சிங்கள – தமிழ் துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்படும் தொகை பற்றிய முரண்பாட்டில் இருந்து இது ஆரம்பிப்பதாக சொல்வதில் நியாயம் இருக்கிறது. சண்ணின் தலைமையில் மலையகத்திலும் வடக்கிலும் நடந்தளவு கட்சி வேலைகள் சிங்களக் கிராமப் பகுதிகளில் நடக்கவில்லை. ரோகண விஜயவீர போன்று துடிப்புள்ள கிராமத்து இளையோரை வென்றெடுக்கக்கூடிய தரிசனம் உள்ள சிங்கள் இளைஞர்களை சண் உள்வாங்க முடியாமற் போனதற்கு அவரதும் அவரது கட்சியினதும் கோட்பாட்டு பலவீனத்தையே நாம் குற்றம் சாட்டவேண்டும். சண்ணின் கோட்பாடு சார்ந்த முரண்நிலைகளை அவரது ஜே.வி.பி பற்றிய அணுகுமுறையில் அவதானிக்கலாம். ஜே.வி.பி யின் தேசியவாதம் மோசமான இனவாதமாக உருவெடுத்தது. இதில் சண்முகதாசன் கட்சியும் கோட்பாட்ட பலத்தை வழங்கியது என்ற குற்றச் சாட்டை நாம் இன்று வைக்கவேண்டியுள்ளது.
7.தேசிய சோசலிசம்
ஒரு நாட்டில் சோசலிசம் என்று ஒரு சோசலிசமும் கிடையாது. சோவியத் ரஸ்யாவிலும் சீனாவிலும் உருவான சமூகம் சோசலிச சமூகம் என்பதை சண் திட்டவட்டமாக நம்பியிருக்கிறார். மாவோவை படித்த பின்பு தான் சோசலிச நாட்டுக்குள் வர்க்கப்புரட்சி என்று வளர்ச்சியடைந்தபோதும் சோசலிசக் கட்டுமானம் பற்றிய அவரது அடிப்படைக் கருத்தில் மாற்றம் இருக்கவில்லை. எவ்வாறு சோசலிச கட்டுமானத்துக்குள் முதலாளித்துவ எதிர்ப்புரட்சி உருவாகும் என்பதைப் பொருளாதார ரீதியாக அவர் பேசியதில்லை.
இந்நாடுகளில் நடந்தவை மகத்தான புரட்சிகள் என்பதில் கருத்துவேற்றுமை கிடையாது. புரட்சியின் தொடர்ச்சியாகத் திட்டமிட்ட பொருளாதார முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சோசலிச உற்பத்திமுறை உருவானது என்று சொல்வது தவறு. எவ்வாறு முதலாளித்துவ உற்பத்திமுறை முதன்மைப்படுவதால் – உழைப்பு மதிப்பாகும் உற்பத்தி முறையால் – எவ்வாறு முதலாளித்துவ சமூக உறவுகள் தோன்றுகின்றன என்பது பற்றி மார்க்ஸ் தெளிவாக விளக்கியிருப்பார். நிலப்பிரபுத்துவக் காலத்திலும்கூட முதலாளித்துவ உற்பத்திமுறை இருந்திருக்கலாம். ஆனால் உலகளாவிய முதன்மை உற்பத்திமுறையாக இருக்கவில்லை என்பது மார்க்சின் கருத்து. அதேபோல் சோசலிசத்தை நோக்கி நகர்வதற்கான செயற்பாடானது உலகளாவிய அளவில் சோசலிச உற்பத்தி முறை முதன்மைப்படுவதால் மட்டுமே சாத்தியம்.
தேசிய இறையாண்மையைப் பேசிக்கொண்டு சோசலிசத்துக்கான யுத்தத்தை வெறும் ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு என்று குறுக்கிச் செயற்படும் வழக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் உலகெங்கும் பின்பற்றியதை நாம் பார்க்க முடிகிறது. சோவியத்- சீனா- கியூபா தற்போது வெனிசுவேலா போன்ற நாடுகளின் இறையாண்மையைக் காப்பாற்றுதல் அங்குள்ள ‘சோசலிசத்தை’ காப்பாற்றுதலுக்கு அவசியம் என்று எமக்குப் புகட்டப்பட்டது. அதைக் காப்பாற்றுதல் என்றால் அவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தல் என்று எமது நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டன. இன்றும் கூட கியூபா புரட்சிகர அரசு- சோசலிச நாடு அதனால் அதன் இறையாண்மையைப் பேணிக்காப்பது புரட்சிகர மார்க்சியரின் கடமை என்று பகிடி விடும் இடதுசாரிகளும் வாழ்கிறார்கள். இதையே ஒரு தந்திரோபயமாகப் பாவித்து கியூபா – இலங்கை போன்ற நாடுகள் குழுச்சேர்த்து ஆளுக்காள் முதுகுசொறிந்து விடுவதையும் நாம் பார்க்கிறோம்.
மார்க்சியர் பேசும் சர்வதேசியம் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை வெறும் வெற்று வார்த்தையாடலாகத்தான் இருந்து வந்திருக்கிறது. சர்வதேச அளவில் வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருத்தல் என்ற அளவில் அது குறுகிப்போயிருக்கிறது. ஆண்டுக்கு ஒரு தடவையாவது சர்வதேச கூட்டங்களிற் கலந்துகொள்ளவென்று பயணித்திருக்கிறார் சண்முகதாசன். ஆனால் சர்வதேச நிலமைகள் பற்றியோ தொழிலாளர் மத்தியில் இருந்த சர்வதேச பிரக்ஞை பற்றியோ முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. சர்வதேச நிலமைகளை நுணுக்கமாக ஆராயாமல் தேசியப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்வதோ அல்லது தொழிலாளர் பிரக்ஞை எத்திசையில் நகரும் என்று அனுமானிப்பதோ கடினம். தேசியவாதத்தின் தோளிற்தான் இனவாதம் பயணம் செய்யத் தொடங்கியது. தேசியத்தை ஏதோ வகையில் ஏற்றுக்கொண்ட சண்முகதாசன் போன்றோரால் இதைக் கண்டுகொள்ள முடியவில்லை. தமிழ்த் தலைமைகளைக் கடுமையாக கண்டித்த அதே வேளை தமிழ்த் தேசியம் ஏன் வளர்ச்சியடைகிறது என்பதை அவர் அனுமானிக்கவில்லை.
அவருக்குத் தமிழ்த் தலைமகள் பற்றிய வரலாற்று ரீதியான பார்வையிலும் குழப்பங்கள் இருந்ததை நாம் கவனிக்க முடிகிறது. பொன்னம்பலம் இராமநாதன் ‘சர்வஜன வாக்குரிமையை’ எதிர்த்ததை சண்முகதாநன் வக்காலத்து வாங்கி எழுதியிருப்பது மோசமான விடயம். அவர் எழுதுகிறார்
‘ஒன்று கல்வியற்றவர்களுக்கு வாக்குரிமையை அளிப்பதன் மூலம் காடைக்கூட்டத்தின் ஆட்சி ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. மறுபுறத்தில் பெரும்பான்மை ஆட்சி என்றால் சிங்களவரின் ஆட்சி என்பது அவருக்குத் தெரியும்’
இது ஒரு மிக மோசமான புரிதல். தமிழர்களுக்கு சம உரிமை பெறுவது பொன்னம்பலம் இராமநாதனின் குறிக்கோளாக இருக்கவில்லை. ஆதிக்கசாதி – ஆதிக்கவர்க்க இராமநாதன் தனது சொந்தப் பதவி பற்றியும் தமது செல்வாக்குப் பற்றியும் பட்ட கவலையை தமிழர்களின் கவலையாக மாற்றினார் என்று குறுக்கிச் சொல்வது மிகையல்ல. தமிழர்கள் மத்தியில் இருந்த பயத்தை அவர் தனது சொந்த நலனுக்குப் பயன்படுத்தினார். தமிழ் ‘உணர்வு’ அவரது சொந்தச் செல்வாக்கைப் பரப்பத்ததான் பயன்பட்டது. ‘நான் மட்டக்களப்பு” என்று சொல்லிப் பிள்ளையான் கிழக்கு மக்களின் வாக்குரிமையை தனதாக்கிக்கொள்ளத் துடிப்பதுபோல்தான் ராமநாதன் தான் தமிழ் என்பதைப் பாவித்தார்.
கல்வி அறிவற்றவர்கள் வாக்களிக்கக்கூடாது என்பதைத் தமிழ் தலைமகள் மட்டுமல்ல இலங்கை காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த பல சிங்களத் தலைவர்களும்கூட கோரியிருந்தார்கள். இது அவர்தம் வர்க்கம் சார்ந்த கோரிக்கை – இனம் மட்டும் சார்ந்ததல்ல. இது அரசியல் அதிகாரத்தை கல்விசார் சிறுபான்மைக்குள் முடக்கும் மிகக்கேவலமான கோரிக்கை. அவரவர் தமது இன அடையாளத்தை தமது செல்வாக்கு பெருக்கும் நோக்கத்துக்காக பாவித்தனர். பின்னாளில் ஏற்பட்ட அரசியற் சிக்கலின் கண்கொண்டு சண்முகதாசன் பழைய வரலாற்றைப் பார்க்கிறார். சமகால வரலாற்றை வைத்துக் கடந்தகாலம் பற்றிய முடிவுகளுக்குத் தாவாதீர்கள் என்று வெளிநாட்டு இளையோருக்குத் தான் அறிவுறுத்தியதாகச் சொல்லும் சண்முகதாசன் அதே தவறை தானும் செய்கிறார் என்றே தோன்றுகிறது.
பண்டா- செல்வா ஒப்பந்தம் ‘மிகச் சிறந்த சமரசம்’ என்று சண்முகதாசன் வர்ணிப்பதன் பின்னணியையும் நாம் மேற்சொன்னபடியே நோக்கவேண்டியிருக்கிறது. பெடரல் கட்சி செய்துவந்த சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதும் தமிழ் வாக்காளர்களைத் தன் பக்கம் இழுப்பதும் பண்டாரநாயக்கா செய்துகொண்ட ‘சமரசத்தின்’பின்னால் இருக்கிறது. பிராந்திய மன்றங்கள் அமைப்பதற்கான பரிந்துரை தவிர இந்த ஒப்பந்தம்
எந்தவித விசேச அதிகாரத்தையும் வழங்கவில்லை. சமஉரிமை கோரிச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த நவரத்தினம் போன்ற பல பிடரல் கட்சி உறுப்பினர்களுக்கு இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இருக்கவில்லை. மொழி உரிமை பற்றி எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என்பது அவர்களின் கவலைகளில் ஒன்றாக இருந்தது. இப்படியிருக்க இந்த ஒப்பந்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வாரிக் கொட்டுகிறது என்ற பொய்ப் பிரச்சாரத்துடன் இனவெறியை சிங்கள இனவாதிகளும் யு.என்.பி யும் தூண்டிவிடத் தொடங்கின. சிங்களத்தில் சிறி எழுதப்பட்ட இலக்கங்களுடன் பேருந்துகளும் கார்களும் வடக்குக்கு அனுப்பப்பட்டன. இதுதான் சிங்கள சிறிக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டியது. சண்முகதாசன் எழுதுகிறார் சமஸ்டி கட்சி தலைவர்கள் அவருக்கு (பண்டாரநாயக்காவுக்கு) உதவி செய்வதற்குப் பதிலாக முட்டாள்தனமான சிறீ எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்தார்கள்’என்று. பண்டாரநாயக்கா தமிழ் மக்களுக்கு ‘பரிகாரம்’ தேடித்தருவதைக் குறிக்கோளாக கொண்டிருக்கவில்லை. சிங்களம் தெரியாத அவர் தம் செல்வாக்கை பரப்ப இனவாத ‘சிங்கள மட்டும்” மொழிச் சட்டத்தைக் கொண்டுவர நின்ற முன்னணிஅரசியல்வாதியவர்.
தமிழ்த் தலைமகள் தொடர்ந்து வலதுசாரிகள் பக்கம் சரிந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் போக்குக்காக மட்டும் இடதுசாரிகளுடன் பேசினார்கள். பெடரல் கட்சித் தலைமைக்குள் திட்டவட்டமான இடதுசாரிய எதிர்ப்பு இருந்தது என்பது உண்மை. ஆனால் இடதுசாரிகளும் தமிழ் தலைமைகளும் நிபந்தனையற்ற ஆதரவைப் பொப்புலரிசத் தலைமைக்கு வழங்குவதன் மூலம் உயிர்ப்பிச்சை உரிமைப்பிச்சை எடுத்துவிடலாம் என்பதுபோல் பேசுவது தவறு.
அவர்கள் பண்டாரநாயக்காவுடன் சேர்ந்து தொடர்ந்து பேச்சுவார்த்தை செய்திருக்கவேண்டும். பின்பும் எல்.எஸ்.எஸ்.பி யுடன் நெருக்கத்தைப் பேணியிருந்தால் தமிழ்த் தலைமைகள் பலதை வென்றிருக்க முடியும் என்று சண்முகதாசன் சொல்லவருகிறாரென்றால் அதில் ஓரளவு உண்மையுண்டு. குறிப்பாக இலங்கைச் சட்டம்மாற்றப்பட்ட காலத்தில் தமிழ் தலைமைகள் முற்றிலும் வலது சாரிய நலன்களுக்காக ஒட்டுமொத்த தமிழர்களினதும் உரிமைகளை விற்றதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம்.
இருப்பினும் இனவாதங்களுக்கிடையிலான மோதல் – குறிப்பாக அகோர வடிவம் கொள்ளத்தொடங்கியிருந்த சிங்கள இனத்துவேசம் பற்றி நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதன் பிரதிபலிப்பாகத் தமிழ் இளைஞர்கள் பெடரல் கட்சித் தலைமைகளுக்கு வழங்கிய அழுத்தம் பற்றியும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
தேசிய அபிலாசைகளுக்கு ஒரு மாற்றும் வைக்காமல் தமிழ்த் தலைமைகளை மட்டும் குறுங்குழுவாதப்போக்கில் தாக்குவதால் சண்முகதாசன் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாகிக்கொண்டிருந்த ‘தேசிய அபிலாசைகளில்’ இருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டார். சாதியத்துக்கு எதிரான போராட்டம் இன்றி அவரது கட்சியின் செல்வாக்கு அங்கு எழுந்திருக்க முடியாது. சமசமாஜிகள் உட்பட அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் பெரும்பான்மைத் தமிழர்களால் அன்று தொட்டு இன்றுவரைச் ‘சிங்களக் கட்சிகளாகவே’ பார்க்கப்பட்டு வந்திருக்கிறது.
8.சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம்
தமிழ் மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு அவர்கள் மீது வலதுசாரியத் தமிழ் தலைமைகளின் அழுங்குப்பிடி தடையாக இருக்கிறது என்பதைச் சமசமாஜிகள் அவதானிக்காமல் இல்லை. ஆனால் அந்த அழுங்குப்பிடிக்கான அடிப்படை எங்கிருந்து வருகிறது என்பதை அவர்கள் சிந்திக்கவில்லை. தேசிய ஒடுக்குமுறை என்பது ஒடுக்கப்படும் தேசியம் சார்ந்த வலதுசாரிகளை எவ்வாறு பலப்படுத்துகிறது என்ற சமூக இயக்கத்தை இடதுசாரிகளிற் பெரும்பாலானோர் புறக்கணித்தே வந்திருக்கின்றனர்.
தமிழ் வலதுசாரிகள் ஆதிக்க சாதியினர். இவர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சாதி கிளர்ந்தெழும். அதன்மூலம் இடதுசாரியம் வளரும் எனக் கருதினர் சமசமாஜிகள். அந்த வாதத்தின் தொடர்ச்சியாகத்தான் சண்முகதாசனும் தமிழ்த் தலைமையை உடைக்க சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் உதவும் எனக் கனவு கண்டார்.
சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில் சண்ணின் பெயர் அழிக்கமுடியாததது. கம்யூனிஸ்ட் கட்சி உடைந்து பீக்கிங் பிரிவுக்கு சண்முகதாசன் தலைமை ஏற்றதன் பின்தான் சாதிய ஒடுக்குமுறை சார்ந்து ஒரு இடதுசாரியக் கட்சி உக்கிரமான பணி செய்ய முற்பட்டது நிகழ்ந்தது. சண்முகதாசன் யாழ்ப்பாண ஆதிக்க சாதிய மேலாதிக்கத்தின் கொடுமையையும் அதிலிருந்து உருவாகியிருந்த தமிழ்த் தலைமைகளின் பிற்போக்குத் தனத்தையும் நன்கறிந்தவர். இந்த நுட்ப அறிவு அக்காலத்தில் வேறு எந்த இடதுசாரிக் கட்சிகளின் தலைமைகளுக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. சண்முகதாசனின் தமிழ் அடையாளம் இந்த நுட்ப அறிவை வழங்கியதென்று சொல்வதும் மிகையல்ல.
இலங்கையில் ஒடுக்கப்பட்ட சாதியோர் சிறுபான்மையர் என்பதையும் ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்களையும் வென்றெடுக்காமல் இந்தப் போராட்டம் வெற்றி நோக்கி நகரமுடியாது என்பதையும்கூட சண்முகதாசன் அறிந்திருந்தார்.
‘எமது கட்சியின் யாழ்ப்பாணக் கிளையின் தலைமைத் தோழர்களிற் சிலர் உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இந்தப் போராட்டத்துக்கு அவர்கள் அளித்த தலைமையினால் இந்த இயக்கத்தின் நோக்கங்கள் சகல பகுதி மக்களுக்கும் பரவலாயிற்று’ என்று குறிப்பிடுவார் அவர். ஓடுக்கப்படும் சாதியினரின் தலைமைத்துவத்தின் கீழ் சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படும் அனைத்துச் சாதியினரும் ஒருங்கமைய வேண்டுமென்று நாம் இன்று வாதிடுவோம். ஆனால் இங்கு இன்னுமொரு சிக்கலையும் நாம் அவதானிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் சாதியக் கட்டுமானத்துக்கு எதிராகத் திருப்பும் போராட்டம் சாதி காப்பாற்றும் நிறுவன மயப்பட்ட சமூக பொருளாதாரக் கட்டுமானங்களுக்கும் எதிரான போராட்டமே. அதை நோக்கி நகராத சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் கலாச்சாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி ஒருசில ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான சில உரிமைகளை வென்றெடுக்கலாம். ஆனால் சாதி ஒழிப்புக்கான நிரந்தரப் போராக அது பரிணமிக்க முடியாது போய்விடுகிறது.
இலங்கைக் கம்யூனிஸ்டுகள் இந்தியக் கமயூனிஸ்டுகளையும் விட இவ்விசயத்தில் முற்போக்குத் தன்மை கொண்டவர்கள். பெரும்பான்மை மக்கள் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்த ‘சுதந்திர” இந்தியாவில் காங்கிரசுடன் கபடி விளையாடிக்கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்டுகளின் வரலாறு மன்னிக்க முடியாதது. இலங்கைக் கம்யூனிஸ்டுகளின் வரலாறு முற்றிலும் மாறுபட்டது.சண்முகதாசன் எழுதுகிறார் ‘திரிபுவாதக் கட்சியின் மத்திய கமிட்டிக்குள்ளே நான் நடத்திய வாதங்கள் எனது நினைவுக்கு வருகின்றன. எமது கட்சியில் நாலு தமிழ்ப் பட்டதாரிகள் மத்திய கமிட்டி உறுப்பினர்களாக இருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய பாடசாலைகள் சிலவற்றில் ஆசிரியர்களாக இருந்த இவர்கள் யாழ்ப்பாணத்தில் கட்சி வேலைக்குப் பொறுப்பாக இருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் கட்சியைக் கட்டியமைப்பதென்றால் சமுதாயத்தின் மிகுதியும் சுரண்டப்படும் பகுதியினரான தாழ்த்தப்பட்ட சாதியினரை நாம் அடிப்படையாக கொள்ளவேண்டும் என்று வாதிட்டேன். ஆனால் எமது தோழர்கள் உயர்சாதியினரைப் புண்படுத்திவிடுவார்கள் என்று அஞ்சினதால் இந்த ஆசிரியத் தோழர்கள் மலை நாட்டுக்கு மாற்றம் பெற்று தமிழ்த் தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் வேலை செய்யவேண்டும் என்று நான் கூறினேன். அவர்கள் இரண்டில் எதனையும் செய்யவில்லை”
இங்கு பல்வேறு விசயங்களை நாம் கவனிக்க வேண்டும். சாதிய ஒடுக்குமுறையை ஒரு கட்சித் தலைமை முக்கிய போராட்டமாக ஏற்றுக்கொள்வதற்கும் -ஒடுக்கப்படும் சாதியினர் தமது உரிமைப்போராட்டத்தை ஆரம்பித்து வரட்டும் அதற்குப்பிறகு அவர்களைக் கட்சியில் சேர்க்கலாம் என்று காத்திருக்கும் கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. சாதியெதிர்ப்பு போராட்டத்தின் மூலம் சண்முகதாசன் கட்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்ததன் பின்னால் இருக்கும் மர்மம் அக்கட்சி இப்போரட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தமையே. ஆனால் ஒரு கட்சியைக் கட்டியமைக்க சாதிய ஒடுக்குமுறையை மட்டும் முன்வைத்துவரும் ஒரு ‘மார்க்சிய’ கட்சி சாதியத்துக்கு எதிரான சரியான போராட்டத்தை முன்னெடுக்க முடியுமா என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அடிதடிகள் மூலம் பிரேமையை உண்டுபண்ணலாம். ஆதிக்கசாதி முதலாளிகள் சிலர் இதனாற் இறந்துபோகலாம். ஆனால் சாதிய கட்டுமானம் அசைக்கப்படமுடியுமா? உடனடி விளைவுகள் சிலதின் மோகத்திற்காக நிரந்தர வெற்றி நொக்கி நகர்வதை சமரசம் செய்ய முடியுமா? அமெரிக்காவில் மிகவும் ஒடுக்கப்படும் இனமான இருக்கிறார்கள் அமெரிக்க- ஆபிரிக்க மக்கள். ஆனால் இனத்துவேசத்தை மட்டும் குறியாக வைத்து ‘கட்சியை கட்டியமைப்பதென்றால்” அது எவ்வாறு இனத்துவேசத்தை இல்லாதொழிக்கும் சக்தியை உருவாக்க முடியும்? மார்க்சியர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கும் கூர்மையான பிளவுகளுக்கு எதிராக கடுமையான போரட்ட வடிவங்களை முன்வைப்பவர்களாக இருக்க வேண்டும். சாதிய சமூகங்களில் சாதியம் கடுமையாக எதிர்க்கப்படவேண்டும் – கட்சியின் முக்கிய போராட்ட வடிவங்களில் அதுவும் ஒன்றாக இருக்கவேண்டும். இனத்துவேசம் அதிகரித்திருக்கும் இடங்களில் – அல்லது அதிகரித்து வரும் இடங்களில் அதற்கெதிரான முதன்மை யுத்தத்தை கட்டுவது மார்க்சியரின் முக்கிய கடமை. ஆனால் மார்க்சியர் முதலாளித்துவ பொருளாதாரம் அதன் அரசு என்பன எவ்வாறு இப்பிளவுகளைக் கையாள்கின்றன என்று அறிந்தவர்கள். உழைப்பைப் பண்டமாக்கும் உற்பத்தி முறையிருக்கும் வரையும் இந்த பிளவுகளுக்கு உயிர் இருக்கும் என்று அறிந்தவர்கள் அவர்கள். ஆகையால் இத்தகைய போராட்டங்களை வர்க்கப்போருடன் இணைக்காமல் நிரந்தர தீர்வு நோக்கி நகர்தலோ அல்லது காத்திரமான வெற்றிகளை அடைவதோ சாத்தியமில்லை என்பதை மார்க்சியர் அறிவர். அத்தகைய செயற்திட்டங்களை முன்வைப்பது ஒரு மார்க்சிய கட்சியின் கடமை. சாதிகாக்கும் இயந்திரத்தை உடைக்காமல் சாதியத்தை உடைக்க முடியாது. வர்க்கரீதியாக ஒன்றுபடுவபர்களை சாதியைக் காட்டிப் போராட்டத்தில் இருந்து ஒதுக்குவது மார்க்சிய அரசியலல்ல.
9. இனவாதம் மற்றும் வன்முறை பற்றி
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ‘விரக்தியிலும் ஏமாற்றத்திலும் ஏற்பட்ட கோஷம்’ என்று வர்ணிக்கிறார் சண்முகதாசன். எவ்வளவு தூரத்துக்குச் சண்முகதாசனும் அவரது கட்சியும் அப்போது நடந்துகொண்டிருந்த நிகழ்வுகளுக்கு அந்நியப்பட்டு நின்றிருந்தார்கள் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இன்றும் இதுபோன்று சில இடதுசாரிகள் தூரநின்று கூச்சலிடுவது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் சோசலிச தமிழீழக் கோரிக்கையை முதன்மைக் கோரிக்கையாக முன்வைப்பதற்குப் பின்னால் பெடரல் கட்சி சார்ந்து இயங்கிக்கொண்டிருந்த இளையோர் முக்கிய பங்களித்தனர். இதை சண் உட்பட பலர் அவதானிக்கத் தவறி விட்டனர். எவ்வளவு தூரம் தமிழ்த் தலைமைகள் இளையோரின் தமிழ் தேசியத்தின் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதையும் சுட்டி நிற்கிறது வட்டுக்கோட்டைத் தீர்மானம். இக்கட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் முற்போக்குவாதிகளின் பணி என்னவாக இருந்திருக்க வேண்டும்? தமிழ்த் தலைமைகளின் இயலாமையை வெளிக்காட்டும் அதேவேளை அவர்கள் தமிழ்த் தேசியத்துக்குப் பின்னால் திரளும் இளையோரை நோக்கிப் பேசியிருக்க வேண்டும். அவர்களை உள் வாங்குவதற்கு ஒரு போராட்ட அமைப்பை முன் வைத்திருக்க வேண்டும். அந்த அமைப்பின் தோற்றம் கூட்டணியுடன் செயற்படும் உறவுகளாலும் கூட ஏற்பட்டிருக்கலாம். சண் போன்றவர்கள் ஒரு பக்கம் கட்சித் தூய்மை வாதமும் மறு பக்கம் வர்க்கங்களின் கூட்டு பற்றியும் பேசிக்கொண்டிருக்க இவர்களுக்குப் பின்னால் வரலாறு தன் வேலையைச் செய்து கொண்டிருந்தது.
80களின் தொடக்கத்தில் தம்மை முற்போக்குவாதிகளாகக் கூறிக்கொண்டவர்கள் மற்றும் இடதுசாரிகள் பலர் சரியான வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை. சண் உட்படப் பலர் தமது சொந்த ஆளுமையை முன்வைத்து அரசியலுக்கு வந்துகொண்டிருந்த துடிப்புள்ள இளையோரின் ஆதரவைத் தேடினார்களே தவிர அமைப்பு ரீதியான தலைமையைக் கொடுக்கத் தவறி விட்டார்கள். சண் தன்னை முன்னிலைப்படுத்தும் அரசியலைச் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு பலராலும் வைக்கப்பட்டிருக்கிறது. இது இக்காலத்தில் கட்சியில் இருந்த தமிழ்த் தோழர்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தியது பற்றித் தோழர்கள் எழுத வேண்டும். தலைமை என்பது கேள்விக்கப்பாற் பட்டதல்ல. தலைமை தவறிழைக்கும் பொழுது – சரியான வழிகாட்டியாக இல்லாத போது கேள்விகள் எழுவது நியாயம். அத்தருணங்களில் அத்தலைமை மாற்றங்களை உள்வாங்க முடியாததாக விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்போது தூக்கி எறியப்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
இக்காலப் பகுதியில் தோன்றிய பல்வேறு குழுக்கள் ஆயுதம் தாங்கிய குழுக்களாக மாறியதும் சரியான போராட்டமுறை பற்றிய சனநாயக ரீதியான உரையாடலின் சாத்தியம் குறையத்தொடங்கி விட்டது. ஆயுதக்குழுக்களின் தோற்றம் குழுக்களை முன்னிலைப்படுத்திய குழு விசுவாச அரசியலை முன்வைத்தது. அது போராட்ட அரசியலை முடிவுக்குக் கொண்டுவந்தது. சண்முகதாசனின் அரசியல் முடிவுக்கும் அவரது கட்சியின் முடிவுக்கும்கூட இது காரணமாகியது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் ஆயுதக் குழுக்களின் தோற்றத்தைச் சண்முகதாசன் சரியான போராட்ட வடிவத்தின் தோற்றமாகப் பார்த்தார்.
இளைஞர்கள் ‘ஆயுதப் போராட்டம்தான் ஒரே விடிவு வழி என்று உணர்ந்து கொண்டார்கள்” என்று பெருமையுடன் எழுதுகிறார். அதற்குத் தாம் பங்களித்தது பற்றியும் மார்பு தட்டிக்கொள்கிறார்.சண்முகதாசன் எழுதுகிறார்.’குறிப்பாக எமது யாழ்ப்பாணக் கிளை இவை பற்றி (ஆயுதப் போராட்டம் பற்றி) உக்கிரமான இயக்கம் ஒன்றைக் குடாநாட்டில் நடத்தியது. இந்த இயக்கத்தின் போது பெரியதும் சிறியதுமான பல நூறு கூட்டங்களில் நான் உரையாற்றினேன். அப்போது தமிழ் இளைஞர்கள் எமது கொடியின் கீழ் ஸ்தாபன ரீதியாக ஒன்று திரளாத போதிலும் எமது செய்தி ஆழமாகச் சென்றது’.
இடதுசாரிய கொள்கையின் கீழ் திரளாத போராட்டம் ஆயுதமயப்படுவது என்ன விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பது ஓரளவாவது அவர் புரிந்திருந்ததால் அவர் பின்வருமாறு தமது விவாதத்தை நியாயப்படுத்துகிறார்.
‘தற்போதய ஆயுதப் போராட்டத்திற்கு தலைதாங்கும் பெருந்தொகையான ஸ்தாபனங்கள் மாக்சிய லெனினியத்தை தமது சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டுள்ளதும் இதனை நிரூபிக்கிறது. இதனை ஒட்டி நாம் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.’
வட்டுக்கோட்டையில் அறிவித்த சோசலிச ஈழத்துக்கான கோரிக்கை அடுத்த தேர்தல் வரமுதலே கூட்ட ணியால் கைவிடப்பட்டுவிட்டது. பல்வேறு இயக்கங்களில் பெயரளவில் மார்க்சிய ஆதரவுப் போக்குகள் இருந்தன. எனக்குத் தெரிந்தளவில் தெளிவான மாக்சிய சித்தாந்த முறைப்படி ஒரு இயக்கம்கூட ஒழுங்கமைக்கப்படவில்லை. சண் படும் சந்தோசத்துக்கு எந்த அர்த்தமும் கிடையாது. வலதுசாரியத்துக்கும் இடதுசாரியத்துக்கும் இடையில் ஓடித்திரிந்துகொண்டிருந்த இளையோரையும் இயக்கங்களின் தலைமைகளையும் ஆயுதப்போராட்டம் வெகுவிரைவில் அள்ளிச் சென்றுவிட்டது.
சண் ஆயுதப் போராட்டத்தில் மோகத்துடன் பேசுவது அவரது அவரது அடிப்படைக் கோட்பாட்டு பிழைகளில் ஒன்று. அவரது கருத்துகள் லெனினிய கருத்துக்கள் என்பதை விட லெனினின் சகோதரனின் கருத்துகள் என்று சொல்லலாம் போல் தோன்றுகிறது. தனது சகோதரன் ‘தீவிரவாத’ நடவடிக்கைக்காக ஜார் மன்னரால் கொல்லப்பட்ட போதும்கூட அரசியல் அற்ற ஆயுதப் போராட்டத்திற்கெதிராகத் தொடர்ந்து பேசி வந்தவர் லெனின். இது தெரியாதவரல்ல சண். இருப்பினும் தனிநபர் பயங்கரவாதம் பற்றிய அவரது அறிதல் செயற்பாடுகளில் பிரதிபிலக்கவில்லை.
மார்க்சியர் அகிம்சாவாதிகள் அல்லர். ஆனால் அவர்கள் வன்முறை மோகிகளுமல்ல. வன்முறை அவர்தம் செயன்முறையல்ல. அதிகாரத்தை அடித்து நொறுக்குவது என்பதன் அர்த்தம் அடிதடிக் கலாச்சாரத்தைத் தூண்டுவது என்பதல்ல. மாவோவின் ஆயுதப்போராட்டம் சார்ந்த கருத்துக்களையும் தாண்டிய ரோமான்டிசமாகச் செல்கிறது சண்ணின் பார்வை. மக்கள் போராட்டம் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தில் அதிகாரத்தால் நொருக்கித் தோற்கடிக்கப்படாமல் இருக்க ஆயுதமயப்படுவதும் அவசியம் என்று மார்க்சியர் பேசுவர். ஆனால் அவர்கள் ஒருபோதும் ஆயுதப்போராட்டத்தை போராட்ட வழிமுறையாக முன்வைத்ததில்லை. தொழிலாளர் புரட்சி என்பது அவர்களுக்கும் உற்பத்தி முறைக்குமான உறவை மாற்றி புதியதோர் உற்பத்தி முறையை ஸ்தாபிக்கும் சமூகமாற்ற வேட்கை சார்ந்தது. இந்தப் போராட்டம் ஆயுதப்போராட்டமாகத்தான் நிகழவேண்டும் என்று – ஆயதம் தாங்கிய மாவோயிச – சேகுவரா பாணி சிந்தனைக்கு சண் தள்ளப்பட்டது அவரைப் பல பிழையான வழிகளுக்கு இட்டுச்சென்றுள்ளது.
‘அரசு இயந்திரத்தை ஆயுதப் பலம் கொண்டு உடைத்தெறிய வேண்டும்’ என்கிறார். எவ்வளவு குறுகிய பார்வை அது? ஆயுத ரீதியாக மட்டும் எதிர்கொண்டு அரச இயந்திரத்தை எதிர்க்கலாம் என்றால் ஏன் மார்க்சியம்? இதன் தொடர்ச்சியாகத்தான் ‘முதலாளித்துவ சமுதாயத்தில் செயற்படும் எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியும் அடிப்படையில் இரகசியமானதாகவும் தலைமறைவானதாகவும் இருக்கவேண்டும் என்பது ஒரு நிச்சயமான விதியாகும்” என்கிறார் அவர். தமது சகோதர இயக்கமான பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாக அங்கத்தவர்களைசச் சேர்ப்பதைப் பார்த்துப் பிரமித்துப் போகிறார். அதன் காரணம் திரிபுவாதத்தின் ஊடுருவல் என்ற பிழையான முடிவுக்கு அவரைத் தாவ வைக்கிறது.
மலையகத்தில் ஒரு கடையை ஊர்வலமாகச் சென்ற தொழிலாளர்கள் அடித்து நொருக்குவதைப் பாராட்டுகிறார். ‘கடைக்காறன் சகலத்தையும் இழந்தான்” என்று இலகுவாகக் குறிப்பிடுகிறார். அம்பானி பாவம் – அந்த உள்ளூர் முதலாளியின் நலனை நாம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் காப்பாற்ற வேண்டும். ஆனால் அடித்து நொருக்கு தெரு முனையில் இருக்கும் காப்பிக் கடையை என்று மண்ணாங்கட்டி மார்க்சியம் பேசும் சில இந்தியக் குறுங்குழுவாத கட்சிகளின் கருத்துக்கும் சண்ணின் கருத்துக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
இது தவிர காவற்துறையயை அவர் மிகக் கேவலமாக வர்ணித்திருப்பார். ‘பொலிஸ் நாய்கள்’ என்பதற்கப்பால் நகரவில்லை அவர் பார்வை. காவற்துறையை- பெரும்பாலும் இராணுத்தை சீருடையணிந்த தொழிலாளர்கள் என்று வர்ணித்திருப்பார் லெனின். புரட்சிக் காலத்தில் இவர்களிற் பலர் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் பக்கம் திரும்பிவிடும் சாத்தியமிருப்பதை அவரும் ட்ரொட்ஸ்கியும் சுட்டிக் காட்டியிருப்பார்கள். அண்மைக் காலப் பகுதியில் அரேபிய வட ஆபிரிக்கப் புரட்சி பரவியபோது நிகழ்ந்த சம்பவங்கள் பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.
‘ஆகக்கூடுதலான மக்களைச் சுட்டுக்கொல்லக்கூடாது எனவும் கைது செய்யப்படுவோரின் தொகைக்கு ஒரு எல்லை இருக்கவேண்டும் எனவும்’ மாவோ கூறியதாக சண்முகதாசன் மாவோ பெருமை பாராட்டி எழுதுகிறார்! கொலைகளுக்குள்ளால் சனநாயகத்தை நிறுவ முடியாது. ஸ்டாலினிஸ்டுகளும் மாவோயிஸ்டுகளும் சனநாயக உரிமைகளைச் சூறையாடினார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கட்சித் தலைமைகளின் அதிகாரமாக நிலை நாட்டினார்கள். இந்தச் சனநாயக மறுப்பு மக்கள் மத்தியில் முதலாளித்துவ சனநாயகத்தின் மேலான காதலைத் தூண்டுவது இயற்கையானதே. சர்வாதிகாரத்தை – சனநாயக மறுப்பை மறுத்து மேலதிக சனநாயக உரிமைகளைக் கோரும் மக்களைச் சந்தர்ப்பவாதிகள் -திரிபுவாதிகள்- துரோகிகள்-ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கைது செய்வது சுட்டுத்தள்ளுவது காணாமற்போகச் செய்வது போன்ற செயற்பாட்டை மார்க்சியர் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மார்க்சியம் முன்வைக்கும் சோசலிச சனநாயகம் முதலாளித்துவ சனநாயகத்திலும் அதிகூடிய உரிமைகளை வழங்குவது.
புலிகள் அல்லாத இயக்கங்களை ‘திரிபுவாதிகள்’ என்று அழைக்கும் சண்முகதாசன் மேலும் ஒரு பயங்கரவாதக் கருத்தை முன்வைக்கிறார்.
‘வடக்கில் என்ன நடைபெறுகிறது என்பதை தெற்கிற்கு அறிவிக்கும் ஒரே வழியாக தமிழ் தீவிரவாதிகள் தமது நடவடிக்கைகளை தெற்கிற்கும் பரப்பினார்கள். இதனால் பல குற்றமறியாத சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள். உள்நாட்டு யுத்தம் தெற்கிற்கும் பரவலாம் சிங்களவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதைச் சடுதியாக அரசாங்கமும் சிங்கள் மக்களும் உணர்ந்து கொண்டனர்’ சண் இதை எழுதியிருக்கும் பாணி வடக்கு ‘தீவிரவாதிகளின்’ நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. ஒரு மார்க்சியராக இதன் ஆபத்தையும் இந்த நடவடிக்கை எவ்வாறு சிங்கள் போராட்ட சக்திகளை – முற்போக்குசக்திகளை போராட்டத்தில் இருந்து அந்நியப்படுத்தவல்லது என்பதையும் சண் குறிப்பிடத்தவறுவது தற்செயலானதல்ல. சண்முகதாசனின் போராட்ட வடிவம் பற்றிய அடிப்படைக் கோட்பாட்டுப் புரிதலின் போதாமையை இது சுட்டி நிற்கிறது. உணர்ச்சிவசப்பட்ட அடிதடி கலாச்சாரத்தை வளர்ப்பதல்ல மார்க்சியரின் நோக்கம். போலீஸ்காரனுக்கு அடிப்பது ஏதோ ஒரு வகையில் புரட்சிகர செயல் என்ற அடிப்படையில் ‘அநாக்கிச மார்க்சிசம்” பேசுவது தவறு. இலக்கியச் சந்திப்புக்களில் – கூட்டங்களில் அடிதடி அட்டாகசங்களைக் காட்டி தங்களை இலக்கியவாதிகளாகவும் முக்கியஸ்தர்கலாகவும் நிறுவ முயலும் இன்றை சில ‘புலம்’ பெயர் வாதிகள் நடவடிக்கை போன்றது இது.
10. இறுதியாக
ரஸ்யப் புரட்சி ஸ்டாலின் சாவோடு முடிவுக்கு வந்தது. 1976ல் தோழர் மாசேதுங் இறந்த பின்னர் சீனப்புரட்சி தோல்வி கண்டது என்று இலகுபடுத்திய புரிதல்களுடன் வரலாற்றைத் தனிநபர் விசுவாசம் சார்ந்து சிந்திக்கும் போக்கு இன்றும் சில இடதுசாரிகள் மத்தியிலுண்டு. சண்முகதாசன் தனது வாழ்க்கைக்காலத்தில் இடதுசாரிகளின் வெற்றி-தோல்விகள் – எழுச்சி- வீழச்சிகள் பலதைக் கண்டவர். அவர் நம்பிக்கை வைத்தää விசுவாசித்த ஸ்டாலினிஸ்டுகள் தலைகீழாக மாறியதை அனுபவித்தவர். ‘சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சர்வதேசியத்தில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை’ என்று உணர்ந்தவர். பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்டுகள் ஒன்றுகூடி சர்வதேசியத்தைக் கட்டமுடியாது குறுகி அழிந்துபோனதை அனுபவ ரீதியாகப் பார்த்தவர். இருப்பினும் இந்தப் அனுபவங்களில் இருந்து கோட்பாட்டு ரீதியான மாற்றங்களுக்கு தெளிவுகளுக்கு அவர் நகரவில்லை. மாறாறக லெனினையும் மாவோவையும் அவர்கள் சொன்னபடி புனித முறையில் பின்பற்றாமல் – அதிலிருந்து பிசகியதால் வந்த பிரச்சினைகளாக இடதுசாரிகளின் பிரச்சினைகளை அணுகுகிறார் சண். அதனால் ‘திரிபுவாதம்’அவர் அடிக்கடி பாவிக்கும் சொல்லாகிப் போயிற்று!
1956ம் ஆண்டு கங்கேரியப் புரட்சியை எதிர்ப்புரட்சி என்று வர்ணிப்பது போன்ற பெரும் தவறான கருத்துகளுக்கு அவர் இவ்வாறுதான் வந்து சேர்ந்தார். இந்தவகைக் குறுங்குழுவாதப் போக்கும் விசுவாசத்தை முதன்மைப் படுத்தி இயங்குவதும் மாற வேண்டும். இன்று எஞ்சியிருக்கும் பல ஸ்டாலினிய கட்சிகள் தொழிலாளர் நலன்களை முன்வைத்து இயங்குவதில்லை என்ற வரலாற்றை மறுத்து நாம் பேசமுடியாது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். இவர்களுக்கும் பூர்சுவா லிபரல் கட்சிகளுக்கும் பெயரளவிற்தான் வித்தியாசம் என்று சொல்லுமளவுக்கு இக்கட்சிகளின் கொள்கைகள் மருவிப் போய்விட்டன. ஏனைய சிறு கட்சிகளிற் பல வறட்டுத்தனமான மார்க்சியம் பேசுவனவாகவும் தனிநபர் வழிபாடுகளை முன்வைப்பனவாகவும் இருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும்.
உலகப் பொருளாதார நெருக்கடி முதலாளித்துவத்தின் பற்றாக்குறையை வெளிக்காட்டி மீண்டும் மார்க்சியத்தை நிறுவியுள்ள இக்காலப்பகுதியில் குறுங்குழுவாதத் தன்மையற்ற பரந்த மக்கள் கட்சிகளின் எழுச்சியும் – அதற்குச் சரியான முறையில் தலைமை தாங்கும் புரட்சிகர கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பதும் நிகழும் கால கட்டத்தில் நாம் நுழைந்துள்ளோம். அதனால் இத்தகைய விவாதங்கள் இன்று நடக்கவேண்டியிருப்பது மிகவும் பொருத்தமானதே.