கவர்ச்சி அரசியலைக் கவிழ்க்கப் பயமேன்?

2008ல் எழுதியது

1. அரசியற் குறியீட்டின் அரசியல்

ஜெ.ஜென்னியின் ‘உள்ளாடை அரசியல்’ கட்டுரை தொடர்பாக மேலும் சில விசயங்கள் பேசவேண்டியுள்ளன. ஆதலின் இக்கட்டுரையை ஜெ.ஜென்னியின் கட்டுரையின் தொடர்ச்சியாகப் படிக்கவும்.

உடை அரசியல் உலகெங்கும் பெண்களுக்கு எதிரான அரசியலாக இருந்து வருகிறது. இதில் தமிழ்ப் பெண்கள் கவனத்துக்கு கொண்டுவரும் உள்ளாடை அரசியலும் முக்கியமானது.

மொக்குத்தனமான ஆணாதிக்க கலாச்சாரத்துக்குள் வாழும் பெரும்பான்மை மக்களை உரையாடலுக்கு இழுத்து அவர்கள் காக்கும் புனித மையங்களை உடைத்து ஆனாதிக்கமற்ற மாற்று சமுதாயத்தை உருவாக்குவது கட்டாயத் தேவை. இதற்கான உத்தியாக பிராவை தொங்கவிட்டு கூட்டம் போடுவது அல்லது அதுபோன்ற அதிரடி உத்திகள் மூலம் பெண்ணியம் சார் கருத்துக்களை–விவாதத்தை பரந்துபட்ட பெண்கள் மத்தியில் எடுத்து செல்வது வரவேற்கப்படவேண்டியதே. இதுபற்றிய உரையாடலைத் தவிர்ப்பது –அல்லது நாம் தெளிவான பெண்ணியவாதிகளுடன் மட்டும்தான் புத்திஜீவித முறையில் உரையாடுவோம் என்பது- மிகவும் முட்டாள் தனமானது. மொக்குதனமாக ஒருவன்-ஒருத்தி கேள்விகேட்கும் போது –எழுதும்போது அதை எதிர்கொள்வது பல பெண்களின் வளர்ச்சிக்கு உதவும். இதையே ஜென்னியும் கோரியுள்ளார்.

பெண்கள் சந்திப்பில் தொங்க விடப்பட்ட பிராக்கள் உபயோகிக்கப்பட்டவையா என்ற கேள்வியை எழுப்பிய பின்னூட்டமே இன்று சர்சைக்குரிய பின்னூட்டமாக மாறியுள்ளது.
தேசம்நெற்றில் இந்த பின்னூட்டம் இட்டவர் ஆணா ?பெண்ணா? என்று இன்றுவரைக்கும் யாருக்கும் தெரியாது. இருப்பினும் இது தோற்றுவிக்ககூடிய சிக்கலான வாதப்பரப்பு பின்னூட்டத்தில் சாத்தியமில்லை மாறாக அது கட்டுரையிலேயே நிகழ்த்தப்படவேண்டும் என்று ஒரு அவசர முடிவெடுத்து அப்பின்னூட்டம் வெட்டப்பட்டது தேசம் ஆசிரியர் என்ற முறையில் எனக்கு தெரியும். அதன்பிறகு தேசம் நெற்றுக்கு எதிராக வந்த அறிக்கை வெட்டப்பட்ட இப்பின்னூட்டத்தை முதன்மைப்படுத்தியிருப்பது மீண்டும் இவ்விவாதம் நடக்க வழியேற்படுத்தியுள்ளது.
பிராவுக்கான விளம்பரங்கள் மற்றும் பெண்களின் மார்பகங்களுடன் சம்மந்தப்படாத பல்வேறு பொருட்களுக்கான விளம்பரங்களுக்கு பெண்களின் மார்பகங்களை பாவிக்கும் ஆணா திக்க அரசியலை உடையின் அரசியலாகக் குறுக்கமுடியாது. இருப்பினும் பெண் ஒடுக்குமுறையில் உடையின் அரசியல் மிக முக்கியபங்கு வகிக்கிறது என்பதையும் நாம் கவனத்திற்கொண்டேயாக வேண்டும்.

முதல் ஒடுக்குமுறை குடும்பத்தில் ஆண் பெண்ணை ஒடுக்கத் தொடங்கியதில் இருந்து தொடங்குகிறது என்பார் ஏங்கல்ஸ். காலம் காலமாக பெண்கள் மேல் நடக்கும் ஒடுக்குமுறையானது பல்வேறு கலாச்சாரங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சகஜமான வாழ்முறையாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த கலாச்சார விழுமியங்களை உடைத்தெறியாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.

இன்று ஆபிரிக்கரையோ ஆசியரையோ பார்த்து துவேசச் சொற்கள் பாவித்து திட்டினால் அதை எதிர்க்கத் துணையாகச் சட்டங்கள்கூட இயற்றப்பட்டுள்ளன. ஆனால் பெண்ணுறுப்புகளைக் குறிக்கும் சொற்களை கீழான முறையில் பாவித்து திட்டினாலோ அல்லது பெண்களை நோக்கி ஆணாதிக்க முறையில் சொற்களை பாவித்தாலோ அது சாதாரண விசயமாகப பார்க்கப்படுகிறது. பெரும்பான்மை ஆண்களுக்கு இந்த மொழியாடல் நீண்டகால பெண்ணொடுக்குமுறையில் இருந்து வருகிறது என்பது விளங்குவதில்லை. பல பெண்களுக்குகூட அவர்தம் உணர்தல் நிலையில் இது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ‘ஒடுக்குமுறையின் சகஜத்தனம்’-அது கலாச்சார பண்பாட்டு தளங்களில் இறுகியிருக்கும் நிலை- ஒடுக்குதலை தொடர்ந்து நியாயப்படுத்தவும் ஒடுக்கப்படுபவர்கள் எதிர்க்காமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால்தான் பெண்ணியவாதிகள் கலாச்சார பண்பாட்டு மையங்களை குறிவைத்துத் தாக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

கலாசாரத்தை கட்டிக்காப்பதில் ஆண்களின் பங்கு பெண்களைவிட முக்கியமானது. அதன் மூலம் கூடுதல் பயன்பெறுபவர்களும் ஆண்கள்தான். கலாச்சாரத்தை காப்பபற்ற கதைப்பதும் ஆணாதிக்கமாக மருவுவது அதனால்தான். பெண்கள் விழுமியங்களை உடைக்க முற்படும் ஒவ்வொரு பொழுதிலும் கலாச்சாரத்தின் பேரால் ஆண்கள் கூக்குரலிடுவதும் இதனால்தான். பெண்கள் பிராவைத் தொங்கப்போட்டு கூட்டம் வைத்தால் ஐயோ எங்கட தமிழ்க் கலாச்சாரம் சாகுதே என்று முதலில் துடித்து பதைப்பது ஆண்கள்தான். இதனால்தான் இந்த பின்னூட்டம் விட்டவர் ஆணாக இருக்கலாம் என்ற ஊகம் நியாயமாகிறது. இந்த கூட்டத்தில் ஈடுபட்டவர்களை ‘பாலியற் கதையாளர்களாக’ ஒதுக்கி மற்றைய பெண்கள் இதனால் பாதிக்கப்படாமல் இருக்க ஆவன செய்ய அவதிப்படும் ஆண்கள் தம் வக்கிர புத்தியை வசனமாக்குகிறார்கள். இதை எதிர்ப்பது சுலபமல்ல. ஒரு தனி ஆணை எதிர்ப்பது அவனுடன் இருக்கும் வரலாற்று கலாச்சாரத்தையும் எதிர்ப்பதாகும். அப்படியிருக்க ஆணாதிக்க கூட்டத்தை எதிர்ப்பது எவ்வளவு கடினம் என்று எண்ணிப்பாருங்கள். இருப்பினும் எதிர்ப்பது கடினம் என்பதற்காக ஓடி ஒழித்துவிடுதல் சரியல்ல. எதிர்ப்பை பலப்படுத்தல் ழூலம் மட்டுமே ஆணாதிக்க அடாவடித்தனத்தை கட்டுப்படுத்தமுடியும். எதிர்ப்பை பலப்படுத்த சிந்தனை தெளிவான பெண் போராளிகள் ஆணாதிக்கத்துடன் அடிதடியில் இறங்கித்தான் ஆகவேண்டும். தடாலடி உத்திகளை நாடித்தான் ஆகவேண்டும். கதைச்சு வெல்லுவம் என்று மத்தியதர வர்க்கப் பெண்ணியமாக- கலாச்சார-மேலாதிக்க சூட்டில் இளைப்பாறும் பெண்கள் கடிவாளத்தை இறுக்கப்பிடித்து தாம் சொல்லும் வழியில் குதிரை ஓடவேண்டும் என்பர். இவர்களையும் உடைத்துத்தான் பெண்விடுதலைப் போர் முன்செல்ல வேண்டியிருக்கிறது.

இத்தருணத்தில் ஒரு முக்கிய புள்ளியை நாம் மீண்டும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. ஆணாதிக்கத்தை எதிர்ப்பது கருத்து சுதந்திரத்தில் கைவைப்பதாக இருக்ககூடாது. இங்கிலாந்து துவேச கட்சியான பி.என்.பி யை இல்லாதொழிக்க நாம் கடும்போராட்டம் நடத்தி வருகிறோம். இருப்பினும் அரசு அவர்களை –அவர்களது பத்திரிகையை- அவர்களது இணைய தளத்தை தடை செய்ய எடுக்கும் முயற்சிக்கு நாம் உடன்பட மாட்டோம். அரசு இந்த நடவடிக்கையில் இறங்குவதற்கு முக்கிய காரணம் மக்களின் உரிமையை காக்க வேண்டுமென்பதல்ல. நிறுவனமயப்பட்ட துவேசத்துக்கு எதிராக- துவேச கொள்கைகளுக்கு எதிராக – துவேசத்தனமான வெளியுறவு அமைச்சுக்கெதிராக இயங்க மறுக்கும் அரசு ‘தடை’ என்றதும் பாய்ந்து விழுந்து நடைமுறைப்படுத்த வருவதற்கு வர்க்க காரனங்கள் உண்டு. அவர்கள் இந்த உத்தியை பலரையும் நோக்கி பாவித்து தமது வர்க்கத்தை பலப்படுத்த முடியும் என்பதே அதன் முக்கிய காரணம். இதே தடை விரைவில் விலங்குகளுக்காக போராடுபவர்களுக்கு எதிராக- இயற்கை அழிவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிராக- அணு சக்தி உற்பத்திக்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிராக – சோசலிஸ்டுகளுக்கு எதிராக என்று பல்வேறு போராட்டங்களுக்கு எதிராக விரைவில் நீட்சி செய்யப்படும் என்பது எமக்கு தெரியும். இதே போல்தான் ஆணாதிக்க கருத்தை தடை செய்வோம் என்று பாயும் வேகத்தில் நாம் பேச்சுரிமையை நழுவ விட்டுவிடுவோம். இதே தடையை வெவ்வேறு கருத்துகள் சார்ந்து நீட்டச்சொல்லி கோரிக்கைகள் வரும். அதனால்தான் ‘தடை’ என்பதை மிகக்கடைசியான ஆயுதமாக பாவித்தல் அவசியமாகிறது. எழுத்து மற்றும் கருத்து வல்லமையுள்ள எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். ஒரு பின்னூட்டத்தை பிளந்து கட்ட அவர்களுக்கு முடியாததில்லை.

இங்கு இன்னுமொரு கருத்தை அழுத்தம் திருத்தமாக வைக்கவேண்டியுள்ளது. எம்மில் சிலர் தம்மை தாமே பெரிய ‘உருப்படி’களாக கற்பனை செய்து கொண்டு தாம் இன்னொருவரை பற்றி எழுதுவது பேசுவது அவர்களை பெரிது படுத்துவதாகி விடும். ஆதனால் கண்டுகொள்ளாமல் விட்டால் கதை அடிபட்டுபோய்விடும். என்ற போக்கிரித்தனமான கருத்தோடிருக்கிறார்கள். பெரியார் இந்த உத்தியை மேலாதிக்கத்தின் ‘ஒதுக்குதல் ஒதுங்குதல்’ உத்தி என்று வர்ணிக்கிறார். அது மிகச்சரி. மேல்தட்டு மக்கள்தான் தாம் ‘பெரிது’ என்ற அகங்காரம் கொண்டவர்கள். (பெரும்பாலும் அந்த அகங்காரம் அர்த்தமற்றதாகவே இருக்கிறது. அகங்காரத்தை தவிர வேறு எந்த கெட்டித்தனங்களும் அவர்களிடம் இருப்பதில்லை). இந்த மேலாதிக்க போக்கின் வரலாற்று தேவைகூட இன்றைய நவீன இணைய உலகில் அடிபட்டு போய்விட்டது. சரியான நபர்களை தேர்ந்தெடுத்தல் – குறிப்பிட்ட மேலிடங்களில் மட்டும் தொடர்புகளை வைத்தல் என்று தமது ஆதிக்க இருப்பை வரையறுக்கும் போக்கு காலம் காலமாக எல்லா இடங்களிலும் இருந்து வந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்து ‘படித்த’ மக்களிடம் இந்த ஆக்கினையை அனேகமாக காணலாம். இஞ்சினியர்கள் பெரும்பாலும் இஞ்சினியர்மாரோடான் பழகுவினம் தண்ணி ‘சாப்பிடுவினம்’. அதேபோல் டாக்குத்தர் கூட்டங்கள். வக்கீல்கள். பெரிய பட்டியலிடலாம். புத்திஜீவிகளான இவர்கள் மற்றையவர்களை எறும்பை பார்ப்பதுபோல் பார்த்து அவர்களிடம் தன்னிச்சையான மரியாதையை வேண்டி நிற்பதுண்டு. யாழ்ப்பாணத்தில் இது ஒரு தனிக் கலாச்சாரமாகவே கட்டியமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம் போகாதவன் என்னதான் கெட்டித்தனமான கருத்து வைத்தாலும் ‘உமக்கு அவையின்ற படிப்பு தெரியுமோ’ என்று கலாச்சார தூண்கள் தட்டிக்கழித்துவிடும். இது உலகெங்கும் நடப்பதுதான். பள்ளிக்கூடம் போகாத கணிதமேதை இராமானுஜம் இன்னுமொரு ஆங்கிலேய கணிதமேதை கவனத்திற்கு வராமற் போயிருந்தால் அம்பேல்தான். ‘படிப்பு’ அல்லது ‘பல்கலைக்கழக’ அறிவு என்பதை அளவுகோலாக வைத்து இயங்குவதன் முட்டாள்தனத்தை முழுமையாக பேச இங்கு இடமில்லை. நாம் இங்கு கவனத்திற்கு கொண்டுவர விரும்பும் புள்ளி ‘தகுதி’ கருதி ஒதுக்குதல் மேலாதிக்கத்தில் இருந்து பிறப்பது என்பதே. அதிகாரம் கைமாறும் போது எவ்வாறு மேலாதிக்கத்தை எதிர்த்து நின்றவர்களும் அதன் வாலாகுகிறார்கள் என்பதற்கு கீழே சில உதாரண்ங்களை தந்துள்ளேன். தயவுசெய்து இந்த பிரமையில் இருந்து வெளியே வாருங்கள். எழுதுங்கள், கத்துங்கள், கதையுங்கள். அதனால் பலரும் பயனடைவர். அடுத்தவனை பெரிசாக்ககூடாது என்று பம்மிக்கொண்டிருக்காதீர்கள். உங்கள் பம்மல் எதிர்ப்பை பலவீனப்படுத்துகிறது. இந்த தெளிவான தைரியம் இருந்திருந்தால் முக்கி முனகி குறுக்கு வழிகள் தேடும் நிலை வராது. எழுத ,பேச ,செய்ய நேரம் காலம் கிடைப்பது சுலபமில்லைதான். அதற்காக குறுக்குவழியை சுயநலத்துடன் நாடுவதை விட்டு வெளிப்படையாக பின்னூட்டமாவது விடலாம்!!!

பின்னூட்டத்தில் வராவிட்டாலும் இதே ஆணாதிக்கவாதி எமக்கு மத்தியில் நடமாடிக்கொண்டிருக்கத்தான் போகிறார். இவர்கள் தமது முட்டாள் மூளைகளை காவிக்கொண்டு வாதிக்க வரும்போதுதான் அவர்தம் குட்டி அறிவை உலகுக்கு காட்ட வாய்ப்பேற்படுகிறது. பெண்கள் மேலான தூற்றல்களை வரவேற்க வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. மாறாக அவ்வாறு நடக்கும் தருணங்களில் கண்டும் காணாமல் இருப்பதற்கு பதிலாக- தடை வெட்டு கொத்து என்று இறங்குவதற்கு பதிலாக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உரிமை அரசியலை உரக்க-உறைக்க கதைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.

நாம் கண்ணை ழூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று பூனை பால் குடிப்பதுபோல் கனவுக்குள் கத்தாமல் எமது சண்டையை உரிமை அத்தியாவசிய தேவையாக இருக்கும் மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று அவர்களை எதிர்ப்பில் இனைக்க பாடுபடும் செயல்களே முக்கியமானவை.

இவ்வகையில் உடை அரசியல் பற்றிய சத்தமான உரையாடல் அவசியமானதே. இதை நாம் மத்தியதர வர்க்க பூச்சாண்டி காட்டிகளிடம் இருந்து மீட்டெடுப்பதும் அவசியமானது.

2. ‘உத்தி’களின் மேலான அதிமயக்கம் மாற்றத்தின் தேவையை மறக்கடிக்கும்.

எந்த ஆடையும் அணியும் உரிமையும் அணியாத உரிமையும் அவரவர் சார் முடிபு. ஆனாலும் பெண்கள் கலாச்சாரம்-கண்ணியம் சார் உடைகளை நோக்கி ஆண்களால் தள்ளப்படுகிறார்கள். பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் கூட்டு படத்தை பாருங்கள். அவர்கள் அணிந்துள்ள உடை எவ்விதத்தில் ஆணாதிக்கமற்றது என்று பின்னூட்டத்தில் ஒருவர் கேட்கலாம். அல்லது இவர்களில் யார் தம் உடையை தொங்க விட்டார் அல்லது இவர்களின் உடையில்லாத பட்சத்தில் யாருடயதோ உடையை தொங்கவிட இவர்களுக்கு என்ன அதிகாரம் உண்டு என்று பின்னூட்டவாதிகள் வசனங்களை எறியலாம். இது வக்கிர புத்தியோ இல்லையோ பெண்களின் விடுதலை வரலாறு அறியாத புத்தியில் பிறக்கும் கேள்விகள் தாம். இதை குறிவைத்து தாக்கி கூரான வாதங்களை அவர்தம் மண்டைகளில் செருகித் தான் மாற்றங்களை கொண்டுவர முடியும். குறிப்பிட்ட பெண்கள் கூடிக்கதைப்பதால் மட்டும் அல்லது யககசைஅயவiஎந யஉவழைn மூலமாக மட்டும் மாற்றங்களை கொண்டுவந்து விட முடியாது என்பது எமக்கெல்லோருக்கும் தெரியும்.

சில நவீன உடை விற்கும் கடைகள் தமது கடைகளில் மெல்லிய பெண்களுக்கு மட்டுமே உடை விற்பதையும் மெலிந்த உடல் மாடல்கள் மூலம் அழகு பற்றிய போலி விம்பம் ஆணாதிக்கவாதிகளால் கட்டமைக்க படுவது பற்றியும் என்று பல்வேறு பிரச்சினைகளை உலகெங்கும் பெண்ணியவாதிகள் எதிர்த்து வருகிறார்கள். புதிதாகத் தோன்றியுள்ள … கலாச்சாரம் பெண்களுக்கு புதிய தடைக்கல்லாக உருவாகி வருகிறது. உடை அரசியல் ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறையில் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது மற்றும் நிகாப் அணியும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக மேற்கத்தேய கிறித்தவ ஆளும் வர்க்கம் கடும் நடவடிக்கைகள் எடுத்துவருவது பலருக்கும் தெரியும்.

சவுதி அரேபியாவில் இருக்கும் பெண்ணை மேலாடையின்றி உலாவச்சொல்வதும் பிரான்சில் இருக்கும் பெண்ணொருத்தியை தலைமூடி நிகாப் அணிய வேண்டாம் என்பதும் பெண்ணுரிமைக்கெதிரான கருத்துக்களே. அதேபோல் பெண் தன் உடையை பொதுக்கூட்டத்தில் தொங்க விட்டு எதிர்ப்பு செய்வது அவர்தம் உரிமையே. ஆனால் இதையே உலகமயப்படுத்தி சவுதி ஆரேபிய பெண்கள் தமது உள்ளாடைகளை தொங்க விட்டு ஏன் கூட்டம் போடக்கூடாது என்பது அரசியல் முட்டாள் தனம். ஐரோப்பா வாழ் மத்தியதர வர்க்க பெண்ணியவாதிகளால் மட்டும் சாத்தியமாககூடிய தடாலடிகள் உலகெங்கும் பல தளங்களில் ஒடுக்கப்படும் பெண்களுக்கு வாலாயமாகப்போவதில்லை.

மத்தியதர வர்க்க –மேட்டுக்குடி பெண்ணியத்தின் தேவை உணரப்படினும் அவர்கள் சாதிக்க கூடிய பெண் விடுதலை சிறு சலுகைகளாக குறுகிய எல்லை கொண்டதாகவே இருக்கிறது. இதற்கு உலகெங்கும் உதாரனங்கள் உண்டு.

பிரபலமான பெண் கலைஞர் ட்ரேசி எமின் தனது சொந்த கட்டிலைக் றேற் மொடர்னில் காட்சிக்கு வைத்தது போல் பல உதாரணங்களை சொல்லலாம். இக் கட்டில் ரேசியின் சொந்தக் கட்டில். உள்ளாடைகள் ஆணுறைகள் உட்பட பாவனை அடையாளங்களுடன் இக் கட்டில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஊடகங்கள் எங்கும் புழுகப்பட்ட இந்தக் கலை காட்சியை ஏராளமான மக்கள் சென்று பார்த்து வந்தனர். இதற்கான ஆதரவும் எதிர்ப்பும் எல்லா பக்கங்களில் இருந்து வந்தாலும் இது எவ்வளவு தூரம் பெண்விடுதலை சார்ந்தது என்பதற்கு இன்று வரை பதிலில்லை.

பின்பு இக்கட்டிலில் இரண்டு ஆண்கள் பாய்ந்து வோட்கா குடித்ததும் இக்கட்டிலை தொடுவதன் மூலமும் மணப்பதன் மூலமும் இக்கலையை அடுத்த தளத்துக்கு தாம் நகர்த்த முயன்றதாக அவர்கள் அறிவித்ததும் பலருக்கு தெரியும். ‘ட்ரேசியின் கட்டிலில் இரண்டு நிர்வாண ஆண்கள் பாய்ந்தனர்’ என்று தம் செய்கலைக்கு பெயர் வைத்துள்ளதாக கூறிய அவர்களை தவிர்த்து ‘டிரேசியின் கட்டில்’ தற்போது கதைக்கப்படுவதில்லை. பக்கா பணக்காரன் சார்ள்ஸ் சாட்சி இக் கட்டிலை 150 000 பவுன்சுகளுக்கு வாங்கி தனது பெரிய மாளிகையில் தனியாக ஒரு அறையில் பூட்டி வைத்திருக்கிறார். இளம் பிரித்தானிய கலைஞர்கள் என்ற முக்கிய அமைப்பு இந்த பணக்காரரின் பெயரின் கீழ் இயங்குகிறது. இந்த அமைப்புக்கு எதிராக இயங்கும் டிரேசியின் முன்னாள் காதலன் டிரேசி படுத்த இன்னுமொரு கட்டில் தனது பழைய சாமான்களோடு கிடக்கிறது தான் அதை 20 000க்கு விற்க தயார் என்று அறிவித்ததும் தெரிந்ததே. இவ்வாறு ஒரு பணக்கார விளையாட்டாகிப்போன இக்கட்டில் இன்று ஒரு மிக மோசமான ஆணாதிக்க- ஆளும்வர்க்க முதலாளியின் அந்தப்புரத்தில் நித்திரை கொள்கிறது.

இந்தப் பணக்கார கலைஞர்கள் தமது வசதிக்கேற்றபடி ஆடும் ‘கலை’ ஆட்டங்கள் மூலம் முடிவான மாற்றங்கள் கொண்டுவர முடிவதில்லை. ரோசா லக்சம்பேர்க் காலம் தொட்டு இன்றுவரை பல்வேறு வெற்றிகளுக்கு காரணமானவர்கள் பெண் விடுதலைப் போராட்டத்தை மக்கள் மத்தியில் எடுத்து சென்றவர்களே. அறுபதுகளில் பிராவை தெருக்களில் போட்டு எரித்த மேற்கத்தேய பெண்கள் சாதித்ததில் ஒற்பனைகூட தற்சமய மேல்தட்டு பெண்ணியவாதிகளால் சாதிக்க முடிவதில்லை. அறுபதுகளின் பிற்பகுதியிலும் எழுபதுகளிலும் உருவான பெண்ணியவாதிகள் முதலாளித்துவ எழுச்சியின் பின் புகுத்தப்பட்ட ஆணாதிக்க ஒடுக்குமுறை உடை அடையாளமாக பிராவை பார்த்தனர். ‘கவர்ச்சி’ சார்ந்த அடையாளமாக தொடர்ந்தும் பிரா பாவிக்கப்பட்டு வருவதால் அழகைத் தீர்மானிக்கும் உரிமையை அதிகாரத்திடம் இருந்து பறிக்கும் நோக்குடன் எழுபதுகளில் பெண் கள் நடத்திய பல புரட்சிகர நடவடிக்கைகளின் மரபு நிச்சயமாக மீட்கப்படவேண்டும். அந்த அர்த்தத்தில் தமிழ்ப் பெண்கள் சந்திப்பின் முயற்சி மிக மிகப் பாராட்டப்படவேண்டியதே. ஆனால் இது பேசப்பட்டு விடுதலைத் தீ பரவவேண்டும் என்பதே எமது அக்கறை. அத்தீ பிரா எரித்தலுடன் அணைந்து போய்விடாமல் விழுமியங்களை வர்க்கத்தை உடைத்து மாற்று சமுதாயத்தை நோக்கி பரவவேண்டும் என்பதே எமது அவா.

உடை உட்பட உலகின் பெரும்பான்மை கலாச்சார நடவடிக்கைகளில் ஆணாதிக்கம் ஊறிப்போய் கிடக்கிறது. உதாரணமாக சில மொழிகள் ஆணாதிக்க சொல்லாடல் இன்றி பேச முடியாது. ஐரிஸ் மொழியில் மதம் கலக்காமல் வணக்கம் சொல்ல முடியாது போல் பல மொழி முறைகள் ஆண்களின் மொழி முறைகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் தெரிந்தும் தெரியாமலும்கூட பெண்கள் மீதான ஒடுக்குதல் நிகழும் வாய்புகள் அதிகம். ஒரு தனியொருவரின் தலையில் ஒடுக்குதலை சுலபமாக போட்டு தப்பிவிட முயலும் மத்தியதரவர்க்க பெண்கள் இதை கவனிக்க வேண்டும். மாற்றம் தனிநபர்களை மாற்றுவதால் ஏற்படப்போவதில்லை.

3. தமிழ் மொழி (ஒ தாய்) தகப்பன் மொழி

உலக இலக்கியங்களை போலவே இந்திய இலங்கை இலக்கியத்திலும் குறிப்பாக தமிழ் இலக்கியத்தில் ஆணாதிக்க சொல்லாடல்கள் கருத்தாடல்கள் மலிந்து கிடப்பதை காணமுடியும். தேவாரங்களில் மலிந்து கிடக்கும் அதிகாரம் சொல்லி மாளாது. ‘குற மாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா’ என்று சத்தமாக கோயிலில் தேவாரம் படிப்பவர்களை என்ன சொல்வது. இதை ‘குறைமாதை புணர்வோனே’ என்று படிப்பபதையும் கேட்டுள்ளேன். ‘விலை நிகர் நுதலிய மயிற்குற மகளும் விரும்பி புணர்வோனே’ என்று புணர்தல் பற்றி நாயன்மார் ஏராளமாக எழுதி தள்ளியுள்ளனர். ‘நாய்க்குண்டு தொண்டு நமக்குண்டு பிச்சை’ என்றிருந்த பட்டினத்தார் கூட ‘எத்தனை பேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்’ என்று பெண்கள் மேல் வாரிக்கொட்டியதை இன்றும் பலர் பொது இடங்களில் சத்தமாக பக்தியுடன் பாடுவதைக் காதாரக் கேட்டுள்ளேன். பதினாறு வயசுக்குள் செத்துப்போன ரீனேஜர் சம்பந்தர் பார்வதியின் மார்பகங்களை வர்ணித்து பாடிய பாடல்கள் இன்றும் பொப்புலராக பாடப்பட்டு வருகின்றன! இந்த கலாச்சாரத்துக்குள்தான் கேள்விகள் இன்றி பலரும் வாழ்ந்துவருகிறார்கள். சில மத்தியதரவர்க்க ‘கருசணையாளர்’கள் மட்டும் இடைக்கிடை ஆக்கிரோசமாகத் தமக்குள் கத்திக்கொள்கிறார்கள். அந்த கத்தல் வெளியில் கேட்டுவிடாமல் இருப்பதிலும் அவர்கள் கருசணையோடிருக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின் ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட புனிதகங்களை கேள்விக்குட்படுத்தும் பொதுசன நடவடிக்கைகள் போல் வேறெப்பொழுதும் நவீன தமிழ் வரலாற்றில் நடக்கவில்லை. அப்போதுகூட பெரியார் முதலாக சரியான வழியில் சிந்தித்தவர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டன.

கம்பராமாயனத்தின் பாலகாண்டம் காமவக்கிரம் கொண்டது என்று அண்ணாத்துரை கம்பரசம் என்ற புத்தகம் எழுதியிதும் அதை எரிக்க அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி முதற்கொண்டு பல திராவிட முக்கியஸ்தர்கள் கோரியதும் எரிக்கப்படாமல் பிரமணரான ராஜாஜி தடுத்ததும் வரலாறு. காமத்துக்கெதிரான அண்ணாவின் போக்கு காதலுக்கும் எதிராககூட திராவிட கட்சியரால் பேசப்பட்ட காலமது. இதுபோல் கம்பரசம் எழுதப்பட்ட காலத்தில் நடந்த விவாதங்கள் சுவையானவை. இப்புத்தகத்தை பெரியாரின் தூண்டுதலில் தான் எழுதியதாக அண்ணா சொல்லியிருப்பினும் இதற்குள் பெரியாரின் பங்கு எத்தகையது என்பது தனி ஆய்வு. வலதுசாரித்தனத்துடன் இயங்கிய அண்ணாவின் பார்வையில் இருந்து மாறுபட்ட பார்வை கொண்டவர் பெரியார். எதிர்ப்பில் கடவுளையும் இந்துத்துவ அதிகாரத்தையும் இணைக்க பெரியார் முயன்ற அளவு மற்றய திராவிட கட்சி தலைவர்கள் முயலவில்லை என்பது இங்கு அவதானிக்கப்படவேண்டியதே. திராவிட இளம்தலைவர்கள் இதை பிரச்சார நடவடிக்கையாக ஆக்கி திராவிடம் ஒழுக்கமானது பிராமணியம் ஒழுக்கமற்றது என்பதை நிறுவுவதில் ஓடித்திரிந்தனர். ஒழுக்க கலாச்சாரத்திற்குள் வாழ்ந்தவர்களுக்கு கலாச்சார காத்தடித்த திசையில் ஒடுவது சுலபமாகவும் இருந்தது. பெரியார் எழுப்பிய எதிர்குரலின் மங்குதலின் ஆரம்பங்களில் ஒன்றாக இதையும் பார்க்கலாம். அக்காலத்தில் இடதுசாரிகள் இந்த போக்குக்கு எதிராகவே இயங்கினர். இது சம்மந்தமாக கருணாநிதிக்கு எதிராக கம்யுனிஸ்ட் கட்சி ஜீவா பேசியவைகளை தான் ஒழித்திருந்து கேட்டதாக பின்பு கருணாநிதி எழுதியுள்ளார். இதே கருணாநிதியை ‘கருணாநிதி என் காதலன்’ என்று விழித்த கண்ணதாசன், அவருடன் விலைமாதர் விடுதிக்கு சென்றதையும் இவர்கள் தமக்குள் சண்டை பிடிப்பதாக பாவனை செய்து காசு கொடுக்காமல் ஓடிவந்ததையும் பற்றி எழுதியுள்ளார். இதே விளையாட்டை-ஊருக்கு மட்டும் உபதேசத்தை – மக்கள் சாரா அரசியல் வாதிகள் மக்களை வெல்லும் உத்தியாக இன்றும் செய்துவருகின்றனர்.
சுந்தர காண்டம் மட்டுமே கம்பராமாயனத்தின் உச்சம் -அது இலங்கையின் அழகை பேசுகிறது-அது அற்புத அழகியற் கவி வரிகள் என்று புழுகி பாடப்புத்தகங்களில் கம்பரின் சுந்தர காண்டம் மட்டுமே படிப்பிக்கப்படுகிறது. இதற்கு பார்ப்பனரும் திராவிட கட்சியினரும் எதிர்ப்பு செய்வதில்லை.

திராவிட இயக்கத்தின் தாக்கம் மிக சொற்ப அளவிலேயே இலங்கைக்கு கசிந்தது. எஸ் பொவின் முதலாவது நாவல் ‘தீ ‘ யை கூச்சத்தால் படிக்கவில்லை என்று சில இலக்கியகாரர் வெளிப்படையாக பேசும் மோசமான நிலைதான் அங்கிருந்தது. அக்கால தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் இலங்கை எழுத்தாளர்களை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு ‘கதை’ அளந்துகொண்டிருந்தார்கள். ஆனால் பின்பு எஸ்.பொ ‘நனவிடை தோய்தல்’ என்ற நினைவு தொகுப்பில் யாழ்ப்பாண சின்னக்கடையில் மீன்விற்கும் பெண்களின் மார்பகங்களை வர்ணித்து எழுதியிருந்தது அந்த புத்தகத்தை இலக்கிய பீடாதிபதிகள் புழுகித்தள்ளுவதற்கு தடையாக இருக்கவில்லை. அதிகார மையம் மாறின வேகத்தைப் பார்த்தீர்களா?

புலம்பெயர் இலக்கியச் சந்திப்புக்களின் கதாநாயகனாக நா.கண்ணண் உலாவி வந்த காலத்தில் அவரது எழுத்துகள் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. பெண்ள் களின் மார்பின் அளவை வைத்து அழகியலை படைத்துக்கொண்டிருந்த கண்ணன் கதை ஒன்றைச் சுட்டிக்காட்டி வின்சன்ட் தலைமையில் ஷோபாசக்தி உட்பட பலரும் சேர்ந்து விட்ட கண்டனத்தில் நானும் கையெழுத்திட்டதாக ஞாபகம். ‘சவால்களை சர்க்கரைக் கட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று முன்பு அம்மாவில் எழுதிய நா.க இதன்பிறகு புலம்பெயர் இலக்கியத்தில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார்! அத்தருணம், மு சச்சிதானந்தம் என்பவர் பதிப்பித்த தொகுப்பொன்றில் கச்சைகளின் அளவுக்கும்(அவர் ஒரு தமிழ் விரும்பி) பெண்களின் பின்னணிக்குமான தொடர்புகள் பற்றி அழகுக் குறிப்புகள் பதிப்பித்ததை அம்மா இதழில் கண்டித்ததாக ஞாபகம்.

இன்று கனடாவில் இருக்கும் ‘மற்றது’ சார் கற்சுறாவும் ஜெபாவும், கிழக்கிலங்கை ஜனநாயக முன்னணி சார்ந்த பிரான்ஸ்வாழ் விஜி, எம் ஆர் ஸ்டாலின் ஆகியோரும் ஆசிரியராக இருந்த எக்சில் ஏழாவது இதழில் வின்சன்ட் எழுதியிருந்த ‘கிரிமாஸ், படையப்பா, குறியியற் சதுரம்’ என்ற கட்டுரை ஒரு முக்கியமான கட்டுரை. அதில் ஆண், பெண் உறுப்புகளை சுட்டும் சொற்களை வின்சன்ட் சரளமாக பாவித்திருந்தார். அதோடு கட்டுரைக்கு உதவியாக கருணாநிதி மற்றும் ரஜனிகாந்த ஆணுறுப்புகளை வரைபடமாக்கி பெயர்போட்டு குறிப்பிட்டிருந்தார். அக்கட்டுரையை பிரசுரிக்கமாட்டோம் என்று வாதிடவோ பிரசுரித்த பின் அறிக்கை விடவோ யாருக்கும் அன்று தைரியம் இருக்கவில்லை.

அக்கால கட்டத்தில் சுகன் எழுதிய மதிப்பு மறுப்பறிக்கை என்ற கூட்டுக்கலவிக் கதையை பிரசுரிக்க தகுதியற்றது என்று கலைச்செல்வன் பிரசுரிக்க மறுத்துவிட்டார். இலக்கியத் தரத்துக்காக இல்லாவிட்டாலும் அது எழுப்பும் கலகத்துக்காகவேனும் இக்கதை பிரசுரிக்கப்படவேண்டும் என்று நாம் வாதாடியதும் பின்பு கலைச்செல்வன் அக்கதையை பிரசுரித்ததும் அதற்கெதிராக ஒழுக்க சீலர்கள் மத்தியில் பூகம்பம் கிளம்பியதும் அண்மைச் சம்பவங்களே. இக்கதை ஆணாதிக்க கதை என்று அன்று பெண்கள் சந்திப்பில் ஈடுபட்டவர்கள் வாதித்ததை நானறிவேன். உமா உட்பட அக்காலத்தில் பெண்கள் சந்திப்பில் ஈடுபட்டவர்கள் தயவுசெய்து தாம் சுகன் பற்றி -இக்கதை பற்றி தாம் கொண்டிருந்த கருத்தை எழுதவேண்டும். மதிப்பு மறுப்பறிக்கைக்கு எதிராக எந்த அறிக்கையும் வரவில்லை.

கதிரைக்கு சேலை கட்டிவைத்தால் சேரன் அதிலும் காமம் கொள்வான் என இலக்கிய நன்பர் ஒருவர் சேரனின் சொந்த வாழ்கையை பற்றி எம்மிடம் சொன்னார். அதே இலக்கியவாதி ‘நீங்கள் ஓரின சேர்க்கையாளரா?’ என்று சேரனை கேட்ட செவ்வி வெளிவருவதை விரும்பவில்லை. தலித் சழூக மேம்பாட்டு முன்னணி அ.தேவதாசன் வெளிக்கொண்டுவந்த புன்னகை இதழுக்கு எடுக்கப்பட்ட இச்செவ்வி பல இலக்கிய பீடாதிபதிகளால் தடுக்கப்பட்டதால் புன்னகையும் வரவில்லை பேட்டியும் வெளிவரவில்லை. பின்பு அது ஒதுக்கப்பட்ட எழுத்துகளின் தொகுப்பாக ‘நாட்டாமை’யில் வின்சன்ட்டால் பதிப்பிக்கப்பட்டது. ஷோபாசக்தி முதல்முதலாகத் தமிழ்நாட்டு எழுத்தாளர்களை சந்திக்கத் தொடங்கியிருந்த காலத்தில் இதை காப்பி எடுத்து அவர்களுக்கு வழங்க அவசர அவசரமாக சேரன் காலச்சுவட்டுக்கு ஒரு பேட்டி கொடுத்தது பலருக்கும் தெரியும்.

சேரனின் பேட்டி வெளிவர இருந்த புன்னகையின் முதல் இதழில் ‘கட்டற்ற சுதந்திரத்தை கோரும் பெண்ணியம் ஆணாதிக்கத்தை தக்கவைத்த விபச்சாரத்தை கோருவதே!’ என்று ஒரு கட்டுரை வந்திருந்தது. அதை எழுதியவர் றயாகரன். அதில் அவர் ஐரோப்பாவில் ஆண்- பெண் உறவில் விபச்சார கலாச்சாரம் நடைமுறையாக்கப்பட்டிருக்கிறது என்றும் ஓரின சேர்க்கையாளர் மேல் வக்கிரமான முறையிலும் ‘ஆதாரங்களின்றி’ எழுதியிருந்தார். இக்கட்டுரை சரிநிகரில் ‘பெண்ணியத்தின் ஒழுக்கம் என்ன’ என்ற தலைப்பில் சங்கமன் எழுதியிருந்த அரைகுறை கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டிருந்தது. இதுபோல் அவர் ஆசிரியராக இருந்த சமரில் றயாகரன் கக்கி கொண்டிருந்த ஆக்கினைகள் தாங்க முடியாமற்தான் அவருக்கு கல்வெட்டு அடிக்கப்பட்டது. றயாகரனுக்கு நடந்த சடங்குகளில் (விபரம் வேண்டாம்) உபயோகரமான சடங்கு இந்த கல்வெட்டு அடித்தல் மட்டுமே. இதை அன்றும் இன்றும் எதிர்ப்பவர்கள் இன்று பெண்ணியத்துக்காக களத்தில் இறங்கியிருப்பது விந்தையாக இருக்கிறது. இருப்பினும் அவர்கள் கதைக்கும் பென்னியம் தேர்ந்தெடுக்கப்பட்ட பென்களுக்கானதாவே குறுகி நிற்கிறது. ராஜேஸ் பாலாவுக்கு எதிராக றயாகரன் எழுதியுள்ள எழுத்துக்கள் மிகமிக மோசமானவை. அதைப்பற்றி கேட்பாரில்லை.

இன்று இலங்கை தமிழ் உலகில் நீண்டகாலமாக தொடர்ந்து எழுதிவருவது மட்டுமின்றி தொடர்ந்து இலக்கிய/பெண்ணிய சந்திப்புகள் தொட்டு பல்வேறு புலம்பெயர் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருபவருமாக இருக்கும் ஓரே ஒரு பெண்மணி ராஜேஸ் பாலா மட்டுமே. தனது நீண்ட இலக்கிய வரலாற்றில் நிறைய திட்டுக்கள் தீர்மானங்களை அவர் பார்த்தவர். இன்றும் நானுட்பட பலராலும் அவரது அரசியல் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அவரது இலக்கிய பரப்பின் நியாயமும் நான் ஷோபாசக்தி முதலானவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுண்டு. இவற்றை எல்லாம் தாண்டி தான் சரியென்று பார்ப்பதை நேர்மையாக வெளிச்சத்தில் கதைக்கும் அவர்மேல் தற்போது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் மிகவும் கேவலமானவை. பெண் என்ற ஓரே காரனத்தால் அவர் வதைச் சொற்களில் இழிக்கப்படுகிறார்.

‘கிழக்கின் விடிவெள்ளி என்று சொல்லி பிள்ளையானுக்கு முந்தானை விரித்தவர்’ என்றும் இன்னும் பல கேவலமான அடைமொழிகளிலும் இராஜேஸ்பாலா பற்றி கேவலமாக திட்டிதீர்த்துள்ளார் றயாகரன். இவர் பெண் என்றபடியால் தானே முந்தானை விரிக்கும் வசனம் நுழைக்கப்பட்டுள்ளது என்பதை பெண்கள் சந்திப்பாளர்கள் கண்டுகொள்ளவில்லை. ‘விபச்சாரிகள்’ என்று திட்டி குறைந்தது 150 கட்டுரைகளாவது இவரது இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ளது. இவர் கணிப்பில் தேசமும் ‘விபச்சாரம்’செய்கிறது. மிகவும் அடிமட்ட தொழிலாளர் மேல் றயா செய்யும் தாக்குதல் போல் இன்று தமிழ் உலகில் யாரும் செய்வதில்லை. ஓரின சேர்க்கையாளர் மேல் றயா கொண்டுள்ள காழ்ப்புணர்வு கட்டுக்கடங்காதது. ஆண் எழுத்தாளர்களே அவரை அடுத்தமுறை சந்திக்கும் பொழுது கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க பாருங்கள். அப்படியாவது திருந்துகிறாரா பார்க்கலாம்.

இவருடன் கூட்டு சேர்ந்துள்ளார் சாத்திரி என்ற ‘ஒருபேப்பர்’ எழுத்தாளர்.
சாத்திரி போன்ற மொக்கு எழுத்தாளனை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. ஓருபேப்பர் என்ற விளம்பரங்கள் மட்டும் வரும் பத்திரிகையுடன் இயங்கும் சாத்திரி , இராஜேஸ் பாலாமேல் திட்டித்தீர்த்துக்கொண்டிருப்பதற்கு மனோவியாதி காரணமாக இருக்கலாம் என்று நபர்கள் கருதுகிறார்கள். ‘ஜ ஆம் சிக்ஸ்டி அன்ட் செக்ஸி வேணுமென்டா நம்பர் தாறன்’ என்று இராஜேஸ் பாலா இறுமாப்பாக அறிக்கை விட்டும் சாத்திரிக்கு பித்தம் தெளியவில்லை. இதே பேப்பரில் ஆசிரியப்பணியில் இருக்கும் அ. இரவி ‘படைப்பாற்றலுக்கு வலிமையற்றோர் அல்லது உள்மன விகாரம் கொண்டோரே இவ்வாறு எழுத முனைவர்’ என்று முன்பு அம்மாவில் எமுதியது ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு மன நோயாளியை வைத்து வேலை வாங்குவது பிழை மட்டுமல்ல ஆபத்தானதுமாகும் என்று இரவிக்கு இத்தருணத்தில் சுட்டுவது அவசியம். ‘ஒருபேப்பரை’ இராஜேஸ்பாலா வீட்டில் வைத்து எரித்து ஒரு ‘சடங்கு’ செய்ய நாம் தயார்….

இதே கேவலத்தில் தான் பல பத்திரிகைகள் வருகின்றன-வந்தன. கீரன் ஆசிரியராக இருந்து வெளிவந்த நிருபம்கூட ‘கரீனா கபூரின் முத்தம்…யுத்தம். ஆங்கிலப்டத்தில் ஜஸ்.’ என்று கிசுகிசுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகையாகவே வெளிவந்தது பலருக்கும் தெரியும். நிருபம் இதழ் 3ன் கொட்டை எழுத்து முதற்பக்க தலையங்கம் பின்வருமாறு: ‘குமுறும் குடும்ப தலைவிகள்:
கணவன்மாரின் கடிவாளம் இல்லாத குடிப்பழக்கம் -லண்டனில் கணிசமான தமிழ் குடும்பங்களை உலுக்கியெடுக்கும் ஒரு பிரச்சினை’! என்னே கரிசனை.

எவ்வாறு அதிகார மையங்கள் மாறுகின்றன என்பதற்கு இன்னும் இன்னும் உதாரணங்கள் தந்துகொண்டே போகலாம். ஆணாதிக்கத் தகப்பன் மொழி தமிழில் அதற்கு பஞ்சமிலலை. இருப்பினும் அனாவசிய நீட்சி கருதி இத்துடன் நிறுத்துவோம்.

அங்கத மொழியுடன் எதிர்அரசியலில் சங்கமிக்க துடித்தவர்கள் அந்த வெக்கை பிதுக்கிய சொகுசில் கரைந்துபோனார்கள். வெக்கை தந்த நெருப்போ அல்லது அதன் தேவையை உய்யும் ஒடுக்குதலோ அப்படியே இருக்கிறது. தயவுசெய்து சிந்தியுங்கள். சுயநலத்துக்கு அப்பால் சுயலாபங்களுக்கு அப்பால் இயங்கும் முயற்சி செய்யுங்கள். தெளிவு தானாய் வரும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *