சமூககலையும் அதன் உற்பத்தியைப் புரிதலும்
ராஜன்குறை, நந்தகோபால், யமுனா ராஜேந்திரன் ஆகியோருடனான உரையாடலுக்கான குறிப்புகள்.
1
அடிப்படை மார்க்சியக் கருத்துக்கள் பற்றிய உரையாடல்கள் நடைபெறாமல் தத்துவ உரையாடல்கள் எவ்வளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
ஏனென்றால் இடதுசாரியச் சிந்தனைப் பாரம்பரியத்தில் மார்க்ஸ் ஒரு மலை. அந்த மலையில் ஏறி இறங்காமல் புதிய நுணுக்கங்களை நாம் லாவகப்படுத்த முடியாதென்றே சொல்லவேண்டும்.
கலை உற்பத்தி பற்றி ஏற்கனவே பல்வேறு உரையாடல்கள் நிகழ்ந்துள்ளது அறிவோம். பொருள் உற்பத்திக்கும் கலை உற்பத்திக்குமான வேறுபாடுகள் பற்றி நிறையப் பேசப்பட்டிருக்கிறது. இந்த விவாதத்திற்குள் நுளையும் நோக்கு தற்போதில்லை. மாறாக பண்ட உற்பத்தியால் உருவாகும் சமூக உறவுகளுக்கும் கலைக்குமான தொடர்பு என்ன மற்றும் அதைப் புரிந்து கொள்ளவேண்டிய தளம் என்ன எனச் சிந்திப்பதன் குறிப்புகளோடு இங்கே நிறுத்திக்கொள்வோம். ராஜன்குறை முதலீட்டியம் என்ற சொல்லைப் பாவித்து வருவது பற்றிய உரையாடலையும் இங்கு தவிர்ப்போம். அவர் சினிமா முதலீட்டிய கலை இல்லை என்றும் தமிழ் திரைத் துறையில் முதலீட்டியம் நடைமுறையில் இல்லை எனவும் வாதிட்டு வருகிறார். சினிமா உற்பத்தி முதலாலித்துவ பண்;ட உற்பத்தியல்ல என அவர் வாதிடுவதாக இதைப் பார்க்கவேண்டியிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை தமிழ் சினிமா ‘உபரி அழிப்பு’ சார்ந்த நடவடிக்கையாக இருக்கிறது. அவர் மேலும் பின்வருமாறு எழுதுகிறார்.
“என்னைப் பொறுத்தவரை கலையை முதலீட்டியம் கையிலெடுக்கும்போது இயந்திரப்பிரதியாக்கத்தில் கலைந்து போகும் பிரபையை வேறு வடிவங்களில் மாயத் தொடர்பாக்கமாக ((Fetish)) உருவாக்க வேண்டும். கதையாடல் வகைமாதிரி(Genre), நட்சத்திரங்கள் (Stars), கதாநாயகன் (Heroes) போன்றவற்றை ஊதிப்பெருக்க வேண்டும்.”
“இப்படி மாயத் தொடர்பாக்கம்(fethishism) பண்டமாக்கலில் (commodification)செயல்படச் செய்யத்தான் சந்தையை கட்டமைக்கவேண்டும். இப்படி நான் சொல்லும்போது யார் யாரை மேற்கோள் காட்டி எழுதுவது என்றெல்லாம் கையில் எதுவும் குறிப்புகள் இல்லை”
Fetish -என்ற சொல்லுக்கு மாயம் என்ற அர்த்தத்தில் பழக்கத்தில் இருக்கும் மொழிபெயர்ப்பு ஏற்புடயதல்ல. இதை மாயமாலம் என்று மூலதனத்தை மொழிபெயர்த்தவர்கள் எழுதியிருப்பர். அதுவும் தவறான கருத்துக்கே இட்டுச் செல்லும். மூடபக்தி என்ற சொல் அர்த்தத்துக்கு நெருக்கமாக இருக்கலாம். இதன் அர்த்தத்தைச் சரியானபடி பிரதிபலிக்கும் வேறு சொற்கள் இருப்பதாக தெரியவில்லை- இதை அடையாளப்பொருள் கவர்ச்சி என்றும் சொல்லலாம். பண்டமாற்று முதன்மைப்பட்ட சமூகத்தில் எவ்வாறு பண்ட மூடபக்தி இயங்குகிறது. அது எப்படி அடிப்படை உறவுகளை மறைக்கும் ஒன்றாகவும் இருக்கிறது என்று மார்க்ஸ் விளக்கியிருப்பார். இது சந்தைக்கு அப்பாற்பட்டதல்ல. ராஜன் குறை சுட்டுவதுபோல் இதற்காக சந்தை உருவாகவில்லை. மாறாக சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து இது உருவாகிறது. இது எவ்வாறு கலைத் தளத்தில் இயங்குகிறது என்பது நல்ல கேள்விதான். அதுபற்றி ராஜன்குறை உரையாடவில்லை. மாறாக ஒரு முரன்நிலையில் அவர் வாதம் இயங்குகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை மூடபக்தி பற்றி பேசும் அதே வேளை சினிமாத் துறை முதலீட்டியம் சார்ந்ததல்ல என்றும் வாதிடுகிறார். இந்த முரன் மட்டுமின்றி பரிமாற்றம் பற்றியும் குழம்பிய நிலையை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. சந்தையில் பண்டத்தின் விலை நிர்ணயிக்கப் படுவதற்கு பல்வேறு புறக்காரணிகள் இயங்குகின்றன என்பதை நந்தகோபால் சரியாகச் சுட்டிக் காட்டியிருந்தார். கலையின் விலை உட்பட அனைத்துப் பண்டங்களின் விலையும் சந்தையில் நிர்னயிக்கப்படுகிறது. ஒரு எழுத்தாளன் ஒரு நாவலை எழுதும் பொழுது அந்த நாவலின் ஒட்டுமொத்த பரிவர்த்தனையையும் தீர்மானித்து விட முடியாது. ஒரு படத்தின் விலை அந்த பட உருவாக்கத்தில் ஈடு படுபவர்களின் அகக்காரணிகள் சார்ந்தது மட்டுமல்ல.
இது தவிர சினிமா உற்பத்தி முதலாளித்துவ பண்ட உற்பத்தி முறை சாராதது என ராஜன்குறை கருதுவாராயின் அதற்கான முழு விளக்கத்தை எழுதவேண்டும். சந்தையின்றி பண்ட உருவாக்கல் இல்லை என்றும் பண்டம் என்பதே புதிய சமூக உறவுமுறை சம்மந்தப்பட்டது என்றும் மார்க்ஸ் விளக்கியிருப்பார். இந்திய கம்யூனிஸ்டுகள் பலர் மார்க்சைக் கொலை செய்துள்ளனர் என்பது உண்மையே. அதற்காக அந்த அளவுகோளை வைத்து மார்க்சை தாவிச் செல்ல வேண்டிய தேவையில்லைத்தானே. பொருள் உற்பத்திக்கும் பண்ட உற்பத்திக்குமான வேறுபாட்டை மார்க்ஸ் எழுதியிருக்கிறார். சீனி என்ற பண்டம் சந்தையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி மேற்கில் ஏராளமாக எழுதப்பட்டுள்ளன – மார்க்ஸ் கூட எழுதியிருக்கிறார். ராஜன்குறை அவற்றைக் கவணத்தில் எடுக்கவேண்டும்.
சுpனிமா என்பது முதலீட்டிய கலையா என்ற கேள்வியிலேயே சிக்கல் உள்ளது. இன்று உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் உற்பத்தி முறை தாண்டிய உறவுகள் -மற்றும் வேறுபட்ட உற்பத்தி முறைகள் சாத்தியமா? வௌ;வேறு உற்பத்தி முறைகளில் உருவாகும் பண்டங்கள் முதலாளித்துவ சந்தைக்குள் வந்தியங்குவதன் விதிகள் என்ன ? என்ற பல்வேறு உபகேள்விகள் இங்கு எழும்.
இந்தியாவில் இருப்பது முதலாளித்துவம்தான் என்பதை அங்கிருக்கும் சில கட்சிகள் இப்பொழுதுதான் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. சந்தைப் பொருளாதாரம் – அதன் பாதிப்புகள் – நகரத் தொழிலாளர்களின் முக்கியத்துவம் என நிறுவப்பட்ட பல மார்க்சிய அறிதல்களை இப்பொழுதுதான் பல இந்திய ‘மார்க்சிய’ கட்சிகள் தழுவத் தொடங்கியிருக்கின்றன. மத்தியதர வர்க்கத்தின் வளர்ச்சி அவர்கள் முகத்திலறைந்து சிந்திக்கச் செய்திருக்கிறது. ராஜன்குறையும் இந்தச் சிக்கலுக்குள்ளிருந்து மீள முயற்சிப்பதாகத் தெரிகிறது. மாற்றம் பற்றி – சமூக மாற்றம் பற்றி நாம் சிந்திக்கிறோம். அதன் பொதுப் பண்புகள் சிலவற்றை நாம் அவதானிக்க வேண்டும். ஆதிக்க உற்பத்தி முறைக்கும் பொது சமூக உறவுக்குமான தொடர்பு பற்றிய அறிதலுடன் -அதன் தொடர்ச்சியாகத் தான் ஏனைய சிந்தனைகளை நாம் நகர்த்த முடியும்.
மார்க்ஸ் இந்த -சமூக கட்ட மாற்றங்களை- வரலாறு ரீதியாக விளக்கியிருப்பாரேயன்றி அவற்றை திட்டவட்டமான மனித வளர்ச்சிக் கட்டங்களாக முன்வைக்கவில்லை. முதலாளித்துவ சமுதாயத்தில் நடைமுறைக்கு வரும் சமூக உறவு மனித வரலாற்றின் இறுதிக்கட்டமில்லை. முதலாளித்துவ சமுதாய உறவுமுறையிற்கூட நிலப்பிரபுத்துவ (சில இடங்களில் அதற்கும் முந்திய) பல்வேறு பிற்போக்குத்தனமான உறவுமுறைகளும்கூட தொடர்ந்து தங்கி நிற்கிறது. முதலாளித்துவ உற்பத்திமுறை உலகெங்கும் ஒரே சமயத்தில் திடீரென உதிக்கவில்லை. உலகின் பல்வேறு பாகங்களில் அதன் வளர்ச்சி வௌ;வேறு விதமான வேகத்தில் நிகழ்கிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறை நிலப்பிரபுத்துவ காலத்திற் கூட நிகழ்ந்திருக்கலாம் – ஒரு அபூர்வ நிகழ்வாக. ஒரு விதிவிலக்கான நிகழ்வாக அது நிகழ்ந்திருக்கலாம். ஆனால் விதி விலக்காக இன்றி இந்த உற்பத்தி முறை தலையாய உற்பத்தி முறையாக தன்னை உலகளவில் நிறுவிக்கொள்ளும் பொழுது – உலகெங்கும் பரவிய உறவுமுறையை இது ஸ்தாபிக்கிறது. முதலாளித்துவ முறையின் உளகளவிய தன்மையை மார்க்ஸ் திரும்பத்திரும்ப விளக்கியிருப்பார். பண்ட மாற்று என்பதும் அதில் மதிப்பு வெளியாவதும் கணிக்கப்படுவதற்கு உலகத்தொழிலாளர்களின் ஒட்டுமொத்த உழைப்பை கவனத்திற் எடுத்துக்கொள்ளாமல் சாத்தியமில்லை என்பது மார்க்சிய அடிப்படை. உலகம் திடீரென ஒரு மாற்றத்தைக் கண்டு புதிய சமுதாய முறை உருவாகி விட்டது என்று நாம் சுருக்கிப்பார்க்கக் கூடாது. முதலாளித்துவத்தின் தோற்றமும் அது தன்னை தலையாய உற்பத்தி முறையாக நிறுவுவதும் – அதன் வளர்ச்சிப்போக்கும் வௌ;வேறானவை. தன்னை தலையாய உற்பத்தி முறையாக நிறுவிய முதலாளித்துவத்தின் வளர்ச்சி உலகின் பல்வேறு இடங்களில் பலவிதமாக வளர்ச்சியடைவதை -சமமானதும் சமச்சீரற்றதுமான வளர்ச்சி- (Uneven and combined development) என்பர். மேற்கின் சில நாடுகளில் முதலாளித்துவம் நிறுவப்பட்டிருப்பது போன்று இந்தியாவிலோ பல ஆபிரிக்க நாடுகளிலோ நிறுவப்படவில்லை. இந்த சமச்சீரற்ற வளர்ச்சி மேலும் சிக்கலான சமூக உறவுகளைத் தோற்றுவிக்கிறது. நிலப்பிரபுத்துவத்தின் பல்வேறு பிற்போக்குத் தன்மைகள் முற்று முழுதாக உடைக்கப்படாமல் இருப்பதற்கும் இதுவே காரணம். தவிர மேற்கில் வேகமாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவம் பின்தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்குத் தடையாக மாறும் நிலையும் ஏற்படுகிறது. நிலப்பிரபுத்துவ முறை காலனியாதிக்க முறை இல்லாமல் போனாலும் -வளர்ச்சியடைந்து முதலாளித்துவத்தின் கட்டுப்பாடும் சுரண்டலும் பின்தங்கிய நாடுகளிற் திணிக்கப்படுவதை அவதானிக்க முடியும். அதனாற்தான் இந்த நாடுகளை நவ காலனித்துவ நாடுகள் என்றழைப்பர் மார்க்சியர்.
முதலாளித்துவ வளர்ச்சியினை மனித குலத்தின் பரினாம வளர்ச்சியின் உச்சக்கட்டமாக காட்டி பூர்சுவா பொருளாதார வாதிகள் பேசுவதும் மார்க்ஸ் காலம் தொடங்கி இன்றுவரை நிகழ்கிறது. இதையே மூடபக்தி தன்மை என்பதன் மூலம் மார்க்ஸ் விளக்கியிருப்பார். ரோபின்சன் குரசோவின் கதையை உதாரனமாக காட்டி எவ்வாறு தனி ஒரு தீவில் விடப்படும் மனிதன் தானாக முதலாளித்துவ முறைக்குத் தாவுகிறான் – அதனால் முதலாளித்துவ முறைக்கு மனித குலம் செல்வது தவிர்க்க முடியாத பரினாம வளர்ச்சி என்பதாக பூர்சுவா பொருளாதார வாதிகள் பேசுவதுண்டு. இதை மார்க்சும் எங்கல்சும் மிகக் கேலி செய்து எழுதியிருப்பார்கள். முதலாளித்துவ உற்பத்தியில் உருவான பண்டங்களை ரோபின்சன் குருசோ கப்பலில் இருந்து ஏன் தன்னோடு எடுத்துச் சென்றார் என்று மார்கஸ் கிண்டலாக கேட்டிருப்பார். இதேபோல் எங்கல்சும் இதை நிறைய கிண்டலடித்திருப்பார். இது எவ்வளவு முட்டாள்தனமான வாதம் என்பதைச் சுட்டிக் காட்டவே அவர்கள் அவ்வாறு செய்திருப்பார்கள்.
ஆதி காலத்திலும் பண்டம் இருந்தது என்று செல்லி – முதலாளித்துவ பண்ட உற்பத்தியானது அந்த ஆதி கால பண்டத்தின் கடைசி வளர்ச்சி என்று காட்டுவதாகவே முதலாளித்துவ ஆய்வுகளும் பொருளாதார தத்துவங்களும் இயங்குகின்றன. உற்பத்திச் சக்திகளில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மதிப்பு உருவாகும் முறை பற்றி – பணத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றி அவர்களால் முற்றாக விளக்க முடியாமல் இருக்கிறது. பொருள் உற்பத்தியைப் பிரிக்க முயலும் ராஜன் குறை இதை கவணிக்க வே;ணடும்.
முதலாளித்துவத்துக்கு முன்புகூட வியாபாரம் இருந்தது. ஆனால் அவை முதலாளித்துவ வியாபார முறைபோல் சமூக உழைப்பை அரூபமாக்கி செயற்படும் சிக்கலான வியாபார முறை போன்றதல்ல. அதுபோல் முதலாளித்துவ முறையை தாண்டி வரலாறு செல்வதும் தவிர்க்க முடியாததே.
தம் செயல்களை மாற்றியமைக்கும் வல்லமை மனிதருக்கு உண்டு. எவ்வாறு தமது தேவைகளை நிவர்த்தி செய்யும் முறையில் அவர்கள் உற்பத்திச் செயற்பாடுகளை மாற்றி வந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு முழுக்க நாம் பார்க்க முடியும். உற்பத்திச் செயற்பாட்டை மனிதர் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக உற்பத்திச் செயற்பாடு மனிதரைக் கட்டுப்படுத்துகிறது என்று கருதுவதும் தவறு. உற்பத்திச் செயற்பாடுகள் மனிதரை கட்டுப்படுத்துவது இயற்கை வளர்ச்சி என்று காட்டி இயற்கையே உற்பத்தி உழைப்பாக வெளிப்படுகிறது போன்ற தவறான கருத்துக்களையும் முதலாளித்துவ புத்திஜீவிகள் பரப்பி வருகின்றனர். இத்தகைய பார்வையால் பரிமாற்ற மதிப்பு எவ்வாறு -இயற்கையாக- தீர்மானிக்கப்படுகிறது என்று மிகவும் போரடிக்கும் முறையில் நீண்ட ஆய்வுகளை அவர்கள் செய்து தள்ளியிருக்கிறார்கள். ஒரு பொருளில் இருக்கும் உழைப்பை சமூக ரீதியாக மனிதர் தீர்மானிக்கும் முறையை நாம் பரிமாற்ற மதிப்பில் பார்க்கலாமேயன்றி அதில் இயற்கைக்கு எந்தப் பங்குமில்லை என்பார் மார்க்ஸ். எவ்வாறு பரிமாற்ற வீதம் (சயவந ழக நஒஉhயபெந)மாறுவதை இயற்கை தீர்மானிப்பதில்லையோ அதேபோல்தான் பரிமாற்றத்திற்கும் இயற்கைக்கும் சம்மந்தமில்லை என்பார் அவர்.
மேற் சொன்னதை குறிப்பிடும் மார்க்சின் வசனம் ஆங்கில மொழி பெயர்ப்பில் தவறாக புரிந்துகொள்ளக்கூடிய நிலையுண்டு. பரிமாற்ற வீதத்தை (rate of exchange) என்பதை பரிமாற்றத்தின் பாதை (course of exchange) என்று தவறான கருத்துப்பட மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைக் கானலாம். ஜேர்மன் மொழியில் பரிமாற்றவீதத்தை குறிக்கும் சொல்லை நேரடியாக மொழி மாற்றம் செய்யும் பொழுது உழரசளந என்று பொருளாகிறது. ஆனால் அது தவறான புரிதலுக்கு இட்டுச் செல்ல வல்லது. இதனாற்தான் மார்க்சை படிப்பவர்கள் அவர் சொல்ல வரும் கருத்த்துக்களின் நீரோட்டத்திற் கவனம் செலுத்தி படிக்கவேண்டும். மதிப்பு என்பதன் ஜேர்மானிய மொழிச் சொல் அதன் அர்த்தத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதைப்போல் மற்ற பல மொழிகளில் இல்லை என்பதை மார்க்சே சுட்டிக்காட்டியிருப்பார்.
மனிதரின் அடிப்படைத் தேவைகளில் கலையையும் மார்க்ஸ் இணைத்திருப்பதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். கலையை புணிதப்படுத்தவில்லை. மாறாக அதன் சமூகத்தன்மையை அறிவுறுத்தியிருக்கிறார். உழைப்பின் விலை நிர்னயிக்கப்படுவதற்கு பேரம்பேசும் அடிப்படைத் தேவையில் கலையும் இணைகிறது. அதே போல் உணவு உடை உற்பட பல்வேறு அடிப்படைத் தேவைகளும் இதில் இணைகிறது. கலை உற்பத்தியும் அவசியப்படுத்தப்படுகிறது. கலையின் தரத்தை மட்டும் வைத்து இந்த நிகழ்வு செயற்படுவதில்லை. ஒரு பண்டத்தின் பண்புக்கும் மதிப்புக்கும் நேரடித் தொடர்பில்லை.
ஒரு பொருள் உபயோகமானதாகவும் உழைப்பால் உருவானதாகவும் இருக்கலாம் – அதேவேளை அது பண்டமாக இருக்கவேண்டியதில்லை. அதாவது பொருள் மதிப்பு இன்றி உபயோக மதிப்பு கொண்டதாக இருக்கலாம் (உபயோக மதிப்பு இன்றி மதிப்பு இருக்க முடியாது என்பதைக் கவனிக்க). பரிமாற்றம் பண்டத்தின் நோக்கில் நிகழ்வதல்ல – மாறாக மனித உறவு சம்மந்தப்பட்டது – மனிதரால் உருவாக்கப்பட்ட உறவு. சார்பு மதிப்பு பண்டத்தின் பௌதீக தன்மையுடன் சம்மந்தப் பட்டதல்ல என மார்க்ஸ் கூறுவதை அவதானிக்க. பரிமாற்றத்தில் வெளிப்படும் உழைப்பு அரூப மயப்படாமல் முழுமையான விரிவாக்கம் அடைய முடியாது.
இந்த மாற்றம் பற்றிய நுனுக்கமான அவதாணம் வேண்டும். இவ்வகை அரூப மாக்கல் பல்வேறு சமூக உறவுகளின் அடிப்படையாக இருப்பதை கலையும் உய்த்துணர்த்துகிறது.
எதிர்மறை நிகழ்வில் இருந்துதான் முரன்நிலை உற்பத்தி முறையில் தோண்றுகிறது. இந்த எதிர்மறை என்பது என்ன என்பது உப கேள்வி. உறவு அறுபடுதல் என்ற அர்த்தமா? அல்லது உடனிருத்தல் சாத்தியமில்லை என்ற பொருளா?
அரூபம் என்பது சமூகம் சார்ந்ததாக மட்டுமே வெளிப்பட முடியும். ஆரூபமயமாக்கல் சமூகம் சார்ந்த நிகழ்வு – அல்லது சமூக உறவு (பலப்படுதல்) சார்ந்த நிகழ்வு. குழு நிகழ்வுக்கும் அமூபமாக்கலுக்குமான வேறு இயற்கை நிகழ்வுகள் பற்றி ஆராயவேண்டும். சமூகமயப்படுதலில் அரூப நிகழ்வு தோண்றுதலே ஒரு முரன்நிலை என்று பார்க்கலாமா? ஆதலின் அந்த முரன்நிலையை துறத்தல் காரனத்தால் முரனுக்கு எதிரான நிலை தோண்றுகிறதா? சமூக மயப்படுதல் இயற்கைக்கு முரன்நிலை செயற்பாடா என்ற தொடர் கேள்விகள் எழலாம்.
ஆரூப மாக்கலில் தோற்றம் ஏற்படுகிறது – அது கலையாகவும் இருக்கலாம். ஆனால் அதுவே முற்றான யதார்த்தம் அல்ல. யதார்த்தம் அற்ற நிலையில் வெற்று மாயைகளுக்கான விஞ்ஞானத்தை சிந்திப்பது நேரம் விரயம் செய்யும் வேலை தானே.