பீட்டர் டாஃப் மறைவு -அழியா பங்களிப்புகள்
மார்க்சியர்கள் மனித நேயர்கள். தத்துவம், அரசியல், நடவடிக்கை ஆகிய அனைத்தும் இந்த அடிப்படை சமூக அக்கறை மற்றும் நேசத்தில் இருந்தே ஊற்றெடுக்கிறது. ஆனால் ஒரு வர்க்கத்தின் நலனில் இணைந்து நின்று அதன் வெற்றிக்காக அனைத்தையும் தியாகம் செய்வதற்கு மிகப்பெரும் மனத்திடம் வேண்டும். அக உணர்வுகளைத் தாண்டிய -கடின சூழலிலும் தன்முனைப்புத் தாண்டிய பார்வையை – செயற்பாட்டை அடைவது அனைவராலும் முடிவதில்லை. புறவய காரணிகளை உள்வாங்கி, வர்க்க நலனை முன்தள்ளும் அசைவோடு அசைவாக பயணிக்க வல்லமை உள்ளவர்கள் அசைக்க முடியாத வரலாற்றைப் படைத்துச் சென்றுவிடுகிறார்கள். அத்தகைய ஒருவர்தான் பீட்டர் டாஃப். இங்கிலாந்து இடது சாரிய வரலாற்றிலும் – சர்வதேச அமைப்பு கட்டும் வரலாற்றிலும் நிகரற்ற தனி இடம் பீட்டருக்கு உண்டு.
இன்று (23/04/2025) அவர் உயிர் பிரிந்தார்.
கியூப புரட்சி உலக இடதுசாரி அமைப்புக்களை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கிய கால கட்டத்தில், அரசியல்மயப்பட்ட பலரில் பீட்டரும் ஒருவர். அக்கால கட்ட நடவடிக்கைகள் , கடுமையான விவாதங்கள் ஒரு தலைமுறையையே அரசியல் படுத்தியது. பல ஆளுமைகள் எல்லா துறைகளிலும் எழுந்த காலமது. கியூப புரட்சி பற்றிய மார்க்சிய பார்வை நோக்கி நகர்ந்தது பீட்டர் டாஃப், ஜெரி கீலி, டேட் கிரான்ட் முதலானவர்களை அக்காலத்தில் தனிமைப்படுத்தியது. கிரான்டுடன் இணைந்து இயங்கத் தொடங்கிய கால கட்டத்தில் பீட்டரிடம் எந்த வசதிகளும் இருக்கவில்லை. அமைப்புக் கட்டுவதற்காக லண்டன் வந்த பொழுது படுப்பதற்கு கூட இடம் இருக்கவில்லை. தான் வேலை செய்த மேசையின் கீழேயே படுத்தெழும்பித்தான் வேலைகளை செய்தார். இவ்வாறு ஆரம்பித்த அமைப்புத்தான் இங்கிலாந்து அரசியலையே மாற்றும் வேலைகளை செய்தது. இரும்பு மனிதர் என வர்ணிக்கப்பட்ட மார்கிரட் தட்சரைத் தூக்கி எறிந்த பிரமாண்டமான ‘போல் வரிக்கு’ எதிரான போராட்டம் விரிவடையவும் உக்கிரம் அடையவும் பீட்டர் தலைமையில் இயங்கிய மிலிட்டன் அமைப்பு பின் இருந்தது என்பது மிகையில்லை. ஒட்டுமொத்த லிவர்பூல் கவுன்சிலின் கட்டுப்பாடு மிலிட்டன் கையில் வந்த பொழுது லிவர்பூலில் ஒரு குட்டி புரட்சியே நடந்து முடிந்தது. இன்று பட்ஜெட் குறைபாட்டோடு ஏராளமான கவுன்சில்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. அதன் தலைமையில் இருக்கும் வலதுசாரிகளுக்கு இன்றுவரை தலையிடியாக இருப்பது அன்று மிலிட்டன் முன்வைத்த திட்டமிடல்கள்தான். மிலிட்டன் இன்றும் ஒரு எதிர்ப்பின் குறிப்பு புள்ளி. ‘ஏழைகளை உடைப்பதை விட சட்டத்தை உடை’ என்ற கோரிக்கையை அன்று புகழ்படுத்தியது மிலிட்டன் அமைப்பு. இது லேபர் கட்சி தலைமையுடன் நேரடி மோதலை உருவாக்கியது. இது பற்றி நீண்ட ஆய்வு செய்து புத்தகம் வெளியிட்ட சனல் 4 ஊடகவியலாளர் மைக்கல் கிரிக் மிலிட்டன் பற்றி சொன்ன சுருக்கம் பீட்டருக்கு பிடித்த மேற்கோளில் ஓன்று.
‘மிலிட்டன் போராளிகள் அற்புதமாக ஒழுங்கமைக்கப்பட்டவர்கள் – புத்திசாலித்தனமான பேச்சாளர்கள் – அவர்கள் விசயங்களைத் திட்டமிடுகிறார்கள் – அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து அதைக் கடைப்பிடிக்கிறார்கள் – அவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள் – அவர்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள் – அவர்கள் ஒவ்வொரு இரவும் பகலும் கூட்டங்களுக்குச் செல்கிறார்கள் – மேலும் அவர்கள் தங்கள் தனிப்பட்ட வருமானத்திலும் வாழ்க்கையிலும் பெரும் பங்கை அமைப்புக்காக செலவிடுகிறார்கள்.’
ஒரு பலமான அமைப்பு வரலாறில் எவ்வாறு தோன்றுகிறது என்பதை விளக்கும் நல்ல சுருக்கம் இது. ஒரு போராட்ட அமைப்பை கட்டுவது என்பது இலகுவான ஒன்றல்ல என்பதை அத்தகைய முயற்சி எடுத்தோர் நன்கறிவர். சொகுசில் இருந்தபடி அலட்டும் வேலை செய்வோர் – தற்காலத்தில் வலைத்தளங்களில் எழுந்தமான அடிபிடிகளை செய்துவிட்டு தங்களை முதன்மைப்படுத்துவோர் போன்றவர்களுக்கு இதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. பீட்டரின் பங்களிப்பு நீண்டது. அவர் தலைமையில் மிலிட்டன் – பின் சோஷலிச கட்சியின் பங்களிப்புகள் – வெற்றிகள் பட்டியல் மிக நீண்டது. பிரித்தானிய இடதுசாரிய அரசியலில் ஈடுபடுபவர்கள் – அல்லது சர்வதேச அரசியல் அமைப்பை கட்டும் முயற்சியில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே அது. இத்தகைய ஒரு பலமான போராட்ட அமைப்பைக் கட்டி நிமித்தி – தொழிலாளர் போராட்டத்தில் ஒரு காரணியாக்கி விட்டுச் சென்றதுதான் பீட்டரின் மிகப் பெரிய பங்களிப்பு.
இதே சமயம் பீட்டரின் பங்களிப்பு ஒரு காலத்திலும் அவரது தனிப்பட்ட பங்களிப்பாக இருந்ததில்லை. அமைப்போடு பயணித்தவர் அவர். அமைப்பை விலத்தி – அமைப்புக் கட்டுவதை விலத்தி லெனினை வாசிக்க முடியாது – புரிந்துகொள்ள முடியாது. பீட்டரின் எழுத்துக்களையும் வாழ்க்கையையும்கூட அவ்வாறுதான் அணுகவேண்டும். இடதுசாரிகள் எதிர் கொண்ட ஒவ்வொரு நெருக்கடி கால கட்டத்திலும் பல்வேறு முன்னோக்கு கட்டுரைகளை பீட்டர் எழுதி உள்ளார். பல புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அடுத்த தலைமுறைக்குப் போராட்ட வரலாறை எடுத்துச் செல்ல தனது நோய் காலத்திலும் கடுமையாக உழைத்து ‘மிலிட்டன்’ வரலாறு பற்றி பெரும் புத்தகத்தை அவர் எழுதி முடித்தார். பிரஞ்சு புரட்சி பற்றிய அவரது புத்தகம் அனைவரும் படிக்கவேண்டிய மிக மிக முக்கியமான புத்தகம். தான் எழுதியவைகளில் இதுவே மிக முக்கியமான புத்தகம் என அவரே ஒருமுறை என்னிடம் சொல்லி இருக்கிறார்.
லிவர்பூலில் ஒரு வறிய பகுதியில் பிறந்து வளர்ந்த – தொழிலாளர் பிரக்ஞ்சையுடன் வளர்ந்த – பீட்டர் ஒருபோதும் தன்னை புத்தி ஜீவியாக காட்டிக் கொண்டதில்லை. ஆனால் ஒரு விவாதத்துக்கும் அவர் பின் நின்றதில்லை. அக்ஸ்போர்ட் யூனியன் விவாத மேடையில் இருந்து சர்வதேச புகழ் அரசியல் பொருளாதார நிபுணர்கள் ஈறாக பலர் விவாதம் செய்துள்ளனர். உலக பொருளாதார நெருக்கடி 2008 ல் ஆரம்பித்த பொழுது மார்க்சியர் அதை எவ்வாறு அணுகுவது என்பது உலகளவில் பெரும் விவாதத்தை தொடங்கி வைத்தது. மார்க்சின் ‘லாப வீத வீழ்சியின் போக்கு’ பற்றிய அடிப்படையில்தான் அணுக வேண்டும் என்பது பலரது நிலைப்பாடாக இருந்தது. குறிப்பாக ‘புத்தி ஜீவிகள்’ எனக் கருதப்பட்ட பல பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இந்த நிலைப்பாட்டையே முன்னெடுத்தனர். பெரும்பாலான இடதுசாரிய அமைப்புக்கள் தடுமாறி நின்றன – பல பேராசிரியர்களை பின்பறின – பல அமைப்புக்கள் இத்தகைய ஆய்வை முற்றாக புறக்கணித்து விட்டு வழமைபோல ஒதுங்கி நின்று வெற்றுக் காற்றில் குத்தும் வேலையை தொடர்ந்தன. இந்த விவாதத்தில் சோஷலிச கட்சியின் பங்களிப்பு மார்க்சிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது. இந்த நிலைப்பாட்டை இன்று பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள் – ஆனால் ஆரம்பத்தில் நிறைய குளறுபடிகள் மற்றும் கருத்துக் குழப்பங்கள் இருந்த காலத்தில் பலராலும் தெளிவாக பார்க்க முடியவில்லை. குழப்பங்களை தாண்டி பார்ப்பது பீட்டரின் – அவரது சக பயணிகளின் தனிப்பட்ட பலமாக இருந்து வந்திருக்கிறது.
சோவியத் உடைவினை அணுகிய முறை இன்னுமொரு முக்கிய உதாரணம். ஒன்றியம் உடைந்த பொழுதும் இடதுசாரிய கட்சிகள் – சிந்தனையாளர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகினர். துரோகம் மற்றும் முதாளித்துவ சதி என்பதற்கு அப்பால் எந்த ஒரு ஸ்டாலினிச கட்சியும் நகரவில்லை. முதலாளித்துவம் வென்றுவிட்டது என்பதற்கு அப்பால் நகரவில்லை பலரது ஆய்வுகள். வரலாறு முடிந்துவிட்டது என்றார் பூக்கயாமா. முதாளித்துவ மாற்றம் முற்றாக நடக்கவில்லை என விடாப்பிடியாக நின்றனர் பல இடதுசாரிகள். பீட்டருடன் நீண்ட காலமாக இயங்கிய டேட் கிராண்ட் உட்பட பலர் தவறான நிலைப்பாட்டை எடுத்தனர். எவ்வாறு முதலாளித்துவ மாற்றம் நிகழ்நந்தது என்பது மட்டுமின்றி – இது சோஷலிச பிரங்க்சையில் எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தியது என்பது ஈறாக பல முக்கிய ஆய்வை பீட்டரும் சோஷலிச கட்சியும் முன்வைத்தது. இன்று பலரும் இந்த நிலைப்பட்டை சகஜமாக பயன்படுத்துகிறார்கள் – எழுதுகிறார்கள் – பேசுகிறார்கள். யாரும் பீட்டருக்கோ சோஷலிச கட்சிக்கோ நன்றி குறிப்பிடுவதில்லை. ஆனால் இந்த புரிதல் – பங்களிக்கு எங்கு தோன்றியது என்பதை ஆய்பவர்களுக்கு உண்மை தெரியும்.
இதுபோல் ஒவ்வொரு கால கட்டத்திலும் மார்ச்சிய பார்வையில் முன்னோக்கை நகர்த்த பாடுபட்டவர் பீட்டர். அவர் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் – எல்லாக்காலத்திலும் சரி என சொல்லவில்லை. ஆனால் தனது தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பண்பும் – சக தோழர்களின் கருத்துக்களை உள்வாங்கும் கெட்டித்தனமும் அவருக்கு இருந்தது. சக தோழர்கள் பல தடவை அவருடன் விவாதம் செய்து பல விசயங்களை மாற்றி இருக்கிறார்கள். சோசலிச கட்சிக்குள் விவாதங்கள் – கருத்து முரண்கள் எழுவது புதிதல்ல. சீன அரசு எத்தகைய அரசியற் பண்புள்ளது என்ற கேள்வி பற்றி பத்தாண்டுகளுக்கு மேலாக விவாதம் நடத்திய கட்சி இது. பல புத்தகங்களாக தொகுக்க வேண்டிய அளவு ஏராளமான எழுத்துக்கள் உண்டு. செழுமையான சனநாயக பண்பாடை உள்வாங்கிய அமைப்பு இது. குறைந்தது கிழமைக்கு ஒருதடவையாவது சந்தித்திக் கொள்ளும் தலைமை செயற்குழுவில் பேசப்படாத முரண் வெளியில் இருக்க வாய்ப்பில்லை என்ற அளவில்தான் பல கருத்துக்கள் முன்னெடுக்கப்படும். சுதந்திரமாக தமது கருத்தை சொல்ல எந்த தோழர்களும் தயங்கியதில்லை. இதனல்லும்தான் அமைப்பு பலமாக இயங்கி வருகிறது.
பீட்டரின் மிக மிக முக்கிய பங்களிப்பு அவரது தேசியக் கோரிக்கை சார்ந்த பங்களிப்பு என்றே சொல்ல வேண்டும். மார்க்சியர் என சொல்லிக் கொள்வோர் – தம்மைத் தாமே இடதுசாரிகள் என காட்டிக் கொள்வோர் பலர் தேசிய கோரிக்கை சார்பில் மிக மோசமான நிலைப்பாட்டையே முன்வைக்கிறார்கள். இலங்கை – பாலஸ்தீனம், அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்கொட்லாந்து என தேசிய கோரிக்கை முன்வைக்கப்படும் பல இடங்களில் அமைப்பு கட்டிய ஆழமான அனுபவம் பீட்டருக்கும் – CWI- க்கும் உண்டு. ஸ்டாலினிஸ்டுகள் தேசிய எல்லையை தாண்டி சிந்திப்பதை இன்றுவரை தவிர்த்தே வருகிறார்கள். ஒன்றுபட்ட இலங்கை – இந்திய அரசை பாதுகாத்தல் – தாண்டி அவர்கள் கொள்கை நகராது. இலங்கையில் இயங்கும் CWI மட்டுமே தமிழ் பேசும் மக்கள் தேசிய கோரிக்கை சார்பாக லெனினிச கொள்கையில் இயங்கும் அமைப்பாக இருந்து வருகிறது. எல்லோரும் லெனினை மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்ற பாவனையில் பேசுகிறார்களே தவிர தமது வாசிப்பு என்ன என இன்றுவரை பேசியது எழுதியது கிடையாது. புள்ளியை சுற்றி சுற்றி புலம்பிய எழுத்துக்களைத்தான் நீங்கள் பார்க்க முடியும். அடக்குமுறைக்கு எதிரான சரியான நிலைப்பாட்டை எடுத்தது மட்டும் இன்றி இது பற்றிய விவாதத்திற்கு தொடர்ந்து அழைப்பு விட்டு வருகிறது CWI. பல கட்டுரைகள் ஆங்கிலம் தமிழ் சிங்களம் என மூன்று மொழிகளிலும் பதிவாகி உள்ளது. தேசிய அடக்குமுறை உட்பட அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக நிற்கும் அதே வேளை எவ்வாறு ஒன்றுபட்ட தொழிலாளர் அமைப்பைக் கட்டுவது என்பது இன்றும் பலருக்கும் புதிரான ஒன்றாக இருக்கிறது. பல தமிழ் சிங்கள முஸ்லிம் இளையோர் ஒன்றாக போராட்ட அரசியலில் ஈடுபட்டுவரும் இலங்கையில் இருக்கும் ஒரே ஒரு அமைப்பு CWI என்பது மிகையான கூற்றில்லை. ஒற்றுமை பற்றி வாயளவில் பேசுவோர் தமிழ் சிங்கள கட்சி என பிரிந்து நின்றுகொண்டு ஒன்றுபட்ட இலங்கை என கூவுகிறார்கள். பாலஸ்தீனியர்களையும் இஸ்ரேலிய யூதர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பை சரியான மார்க்சிய அணுகுமுறை உள்ள ஒரு அமைப்பு மட்டுமே கட்ட முடியும். அத்தகைய வேலைய செய்த – இஸ்ரேலில் இடதுசாரிய அமைப்பை இன்றும் கட்டி வரும் மார்க்சிய சர்வதேச அமைப்பு CWI மட்டுமே. இந்த பங்களிப்பின் ஆழத்தை விளங்கிக் கொள்வது கடினம். தேசிய கோரிக்கை சார் பீட்டரின் ஆழாமன பார்வை இதற்கு பின் இருந்தது பதியப்பட வேண்டிய ஓன்று.
பீட்டரின் செயற்பாடுகள் – திட்டமிடல்கள் அனைத்தும் வர்க்க நலனை முதன்மைப்படுத்தியதாகவே இருந்து வந்திருக்கிறது. நோய் காரணாமாக ஓய்வு பெற முடிவு எடுக்க இருந்தபோதுகூட அடையாள அரசியலுக்கு எதிரான தொழிலாளர் நலனை முதன்மைப்படுத்திய கடுமையான போராட்டத்தை அவர் செய்தார். தொழிற்சங்க நடவடிக்கை சார்ந்த திட்டமிடல்கள், அமைப்புகள் இணைத்து இயங்குவது பற்றிய உரையாடல்கள், தேர்தல் களத்தில் மக்கள்/ தொழிலாளர் சக்தியை கட்டி எழுப்புதல் என பங்களிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
பீட்டரின் மறைவு சோகத்தையும் இழப்புணர்வையும் ஏற்படுத்தினாலும் அவரது இதுவரை கால வாழ்க்கை பலருக்கும் நிறைவை ஏற்படுத்திய ஒன்று. மிக பலமான போராட்ட அமைப்பு – அதன் தொடர் போராட்டம் பீட்டரின் தொடர் இருத்தலை உருதிப்படுத்திக் கொண்டே இருக்கும். வர்க்க போராட்டதிற்காக தனது இறுதி மூச்சுவரை சிந்தித்த – போராடிய மனிதனுக்கு அந்த போராட்டத்தின் தொடர்ச்சிதான் நியாயமான அஞ்சலி.