நன்றி கிடைக்கப்பெற்றேன்

2009

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
-அவள்தான் சொன்னாள்
வாழ்தல் சிரித்திருத்தல் அல்ல என்று
இருத்தல் முழுநேரவேலை என்றாள்.
உதாரணத்துக்கு நீ இறக்கலாம்
-அக்கதை கோபக்கதை
காசு மட்டும் என்ற நினைவிருத்தல் வாழ்தல்
அவ்வாறுதான் நகிம் சிக்மெட்டும் பாடினார் என்றாள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நல்லது என் மெலிவின் கரி அது
உலகத்துக்காக சிறையிருந்து கொண்டு
உனக்காக அழுது கொண்டிருப்பவனை விட்டுவிட்டு
எப்படி நீ எதிர்பார்க்கலாம் நெருப்பை?
-நிறைய-
படுமோசப் பதகளிப்பு

நான் பல்லில்லாப் பருப்பு
முனகல் இழந்த மென்மேனி
விளையாட்டை களவாடி கனவுருகக் களியாடிப் பிறந்தேன்
மதகுகளில் புகைவிட்டு
பெண்நாய்க்கு கல்லெறிந்து வளர்ந்தேன்
பனை பார்த்துப் புகையிழுத்து
பாதகியை நொந்து
பானங்கள் பருகினேன்
படைவருவன செய்து
வெட்டியோடி வாழ்ந்தோம்.
முறைப்பை மறைத்து
மனதுக்குள் களிப்போடு புதைத்தோம்
-முடியவில்லை-
களிப்பு புளித்து
வெடிக்க அவாவிக் குரைக்கிறது
கண்மூடித் திறக்க முடியவில்லை
இழந்து கிடப்பதற்கு கண்சிமிட்டும் திறப்பு

பாணம் கனக்கும் உடலின் பிணையாளி யார்?
அதைப் பாவித்துப் பரிதவிக்கும் பாவனைபுகழ் ‘மற’நாட்டுக் கொழுந்து யார்?
உதவாக்கரை குரல் உடைக்கும்-‘மறம்’
வழியற்ற தொடரும் குண்டுகள் உறைக்கும்
கண்ணெதிரே பிழைக்கும் புதிர் துலைத்து
சுண்டெலியாய்ச் சுருங்கும்
தலையிடிக்கு படபடவென சுருட்டி விழுங்கும் பகலில்லை பகலில்லை
பார்த்து சாக பாட்டி இருந்திருக்க முடியுமா?
மக்களுக்கும் மனமில்லை
எப்படி தவிக்கும் இது?
நாளும் நினைவும் நமக்கில்லை

வடுகாவிய நடப்புகளை உறைமாற்றி வெளியிட்டு வெற்றி விழாச் செய்வோம்
பகலின்றிக் கதை செய்து கனகாலம்
காக்க வழியற்ற வாப்பா மல்லுக்கு
அலட்டி விளையாடும் தோட்டா
நீ ஓடி விளையாடு பாப்பா!
வேலைக்கு வழியற்ற வரிசை தவிர நீ ஓடி விளையாடு பாப்பா
மனம் பதறும் பக்கம்
முடியுது என்று பங்கருக்குள் கத்தியது ஞாபகமிருக்கும்
வலியவர வலுவற்ற சரி பிழை நூறும்!
நூறும் நூறும்
சிரித்தபடி சொல்லி நூர்ந்த பாட்டி
ஏனடி சொன்னாய் நூறும் என்று?

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அவள்தான் சொன்னாள்
வாழ்தள் சிரித்தல் அல்ல என்று
எப்படிதெரியும் பானம் பருகிய நினைவு பனை கக்கும் என்று
ஏதோ ஏக்கம் -தெனாவட்டு தெரியும் போக்கு-சிறைபிடிக்க சிலிர்த்து ஏவும்

நடக்கிற காரியமா?

நம்மைத் தெரியாத நட்பு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *