கொழும்பில் நடைபெற்ற தமிழ்ஒருங்கமைப்புக் கூட்டம்
கடந்த அக்டோபர் 20ம் திகதி கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தமிழ் ஒருங்கமைப்பின் கூட்டமொன்றில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்ட உரையிது. வாசிப்பு வசதிக்காகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
‘நான் முஸ்லிம் அரசியல் மட்டும் பேசுவேன்’. ‘நான் மலையக அரசியல் மட்டும் பேசுவேன்’. ‘நான் வடக்கு அரசியல்’- ‘நான் கிழக்கு அரசியல்’ – ‘நான் தெற்கு அரசியல்’ என்று திசைக்கொன்றாக பிரிந்து அரசியல் செய்வதால் எந்த மக்களுக்கும் லாபமில்லை.
சேனன்-
முப்பது வருடங்களுக்குப் பிறகு யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த ‘முடிந்துபோன’ யுத்தம் எந்தெந்தப் பிரச்சினைகளைத் தீர்வுக்குக் கொண்டுவந்துள்ளது என்ற கேள்வி நியாயமானது. ஏனெனில் ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலப்பகுதிப் பிரச்சினைகள் எதற்கும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. யுத்தம் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வல்ல. மாறாக யுத்தம் பல புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவல்லது. அதைத்தான் இன்று நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
யுத்தத்தின் மூலம் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளாகத் தற்போதைய அரசு சொல்பவைகள் என்னென்ன?
‘ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.’
‘புலிகளின் அராஜக கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் மக்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.’
‘சிறுபான்மை என்பது இனி நம் நாட்டில் இல்லை. ஒரே மக்கள் ஒரே நாடு.’
-என்று வெற்றிகள் அடுக்கப்படுகின்றன.
இவைதான் யுத்தத்தின் வெற்றிகள் என்றால் இந்த யுத்தம் இன்னும் முடியவில்லை. பதிலாக யுத்தம் படுதோல்வியையே சந்தித்துள்ளது என்ற சொல்லலாம். எல்லா மக்களும் இந்த யுத்தத்தால் தோற்றுப் போயுள்ளார்கள். அனைவரது சனநாயக உரிமைகளும் இன்று தாக்கப்படுகிறது. ஊடக உரிமை, பேச்சுரிமை, கூட்டம்கூடும் உரிமை, என்று அனைத்து உரிமைகளும் பந்தாடப்படுகிறது.
சிறுபான்மையினரை இனி எந்த உரிமைக்குரலும் எழுப்பாதபடி ஒடுக்கியுள்ளோம் என்பதைத்தான் ‘இனி எமது நாட்டில் சிறுபான்மை இல்லை’ என்று சனாதிபதி அறிவித்துள்ளார். சிறுபான்மையோரின் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது. அவர்கள் குரலை எங்கும் காணக்கூடியதாக இல்லை. தெற்கில் நடக்கும் ஒரு சில எதிர்ப்புகள் கூட வடக்கில் அல்லது கிழக்கில் நடக்கும் சாத்தியம் இல்லை. ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை யாழ் நகரில் ஒழுங்கமைக்க முயற்சித்துப் பாருங்கள். இனி இந்த நாட்டில் சிறுபான்மையர் இல்லை என்பதன் அர்த்தம் விளங்கும்.
நிலப்பிரச்சினையும் மொழிப்பிரச்சினைகளும் மேலும் கூர்மையடைந்துள்ளதே தவிர எவ்விதத்திலும் பின்னுக்குத் தள்ளப்படவில்லை. சிறுபான்மையர் அரச உத்தியோகம் பெற சிங்கள மொழி பேசவேண்டும் என்ற கட்டாயம் வந்துள்ளது. இதைச் சிறுபான்மையர் சந்தோசமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாமா? ஆனால் ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகிறார்கள். மோசமாக அடிவாங்கியிருக்கும் அவர்கள், மேலும் அடிவாங்க தயாரில்லை என்ற அவர்களின் பயத்தை பாவித்து உரிமைப்பறிப்பு திணிக்கப்படுகிறது.
ஆனால் இது முடிந்துபோன கதையல்ல. பொறுத்த அடி வாங்கிய இந்தச் சமூகம் எதையும் பொறுத்துப் போகத் தயாராக இருக்கலாம். ஆனால் இதே சமூகத்தில் அடுத்த தலைமுறையும் பொறுத்துக்கொண்டிக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. காஷ்மீரைப் பாருங்கள். தற்போது இந்திய அரசுக்கெதிராக கல்லெறியும் சமுதாயம் புதியது. அவர்களுக்கும் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதே எதிர்காலம் தான் இலங்கை சிறுபான்மையருக்கும். எந்த ஒரு சமுதாயமும் அடக்குமுறைகளை சனநாயக மறுப்புகளைச் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. எங்கு அடக்குமுறை இருக்கிறதோ அங்கு எதிர்ப்பு இருந்தேயாகும்.
ஏன் இளையோர் ஆயுதப்போராட்டத்துக்கு துரத்தப்பட்டார்கள் என்பதும் மார்க்சியராகிய எமக்கு நன்றாகத் தெரியும். அரசியல் மாற்று இன்மை அவர்களை ஆயதத்தை நோக்கி துரத்தியது. தமிழ் சிங்கள தலைமைகள் வெறும் வாயளவில் பினாத்திக்கொண்டிருந்தார்களே தவிர உரிமைகளை வென்றெடுக்கும் அரசியல் மாற்றை உருவாக்கவில்லை. இதுதான் இளையோரை ஆயுதப்போராட்டம் நோக்கித் தள்ளியது. இன்றும் இதே கதிதான். இன்றைய தமிழ்த் தலைமைகளும் அதே பிழையைத் தொடர்ந்து செய்கின்றன. பழைய கூட்டணிக்கும் இன்றைய கூட்டமைப்புக்கும் அரசியல் ரீதியான வேறுபாடுகள் என்ன? இவர்களிடம் எந்த அரசியல் தெளிவும் இருப்பதாக தெரியவில்லை. கூட்டமைப்பு தமிழர் வாக்குகளை மட்டும் குறியாக வைத்துத் தேர்தல் அரசியல் செய்கிறது. தமிழ் தேசியத்துக்கு ஆதரவு என்ற ஒற்றைப் பேச்சை வைத்துக்கொண்டு வாக்குகளை கோரி நிற்கிறது. தமிழ் பேசும் முஸ்லிம் மக்களைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையுமிருப்பதாகத் தெரியவில்லை. ஐயரைக் கூப்பிட்டு குத்துவிளக்கேற்றி கடந்த கிழமை அவர்கள் கொழும்புக் காரியாலயத்தை ஆடம்பரமாகத் திறந்து வைத்ததை நாமறிவோம். இதேபோல் மலையக மக்களையும் புறந்தள்ளிய அரசியலையே கூட்டமைப்பு முன்னெடுக்கிறது. பாதிக்கப்படும் சிங்கள மக்களை நோக்கி பேசும் நோக்கம் அவர்களிடமில்லை. அவர்கள் ஒரு தேசிய அரசியல் செய்யத் தயாராக இல்லை.
சிறுபான்மையர் வாக்குகளை மட்டும் பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகும் நோக்கு தவிர வேறு நோக்கற்ற கூட்டமைப்பு எவ்வாறு சிறுபான்மையர் உரிமைகளை வென்றெடுக்க முடியும்? ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து ஒரு சொட்டு அரசியல் வளர்ச்சியும் ஏற்படவில்லை. அப்போதிருந்த ஒரு சொட்டு அரசியல் மாற்றுக்கூட இன்று இல்லை. இலங்கை அரசுடன் பேசுவோம் இந்திய அரசுடன் பேசுவோம் என்று மீண்டும் தமிழ்த் தலைமைகள் எமக்குக் கனவுகளைத் தந்து பிரமைகள் காட்டுகிறார்கள். எந்த ஒரு இலங்கை அரசும் சிறுபான்மையினருக்கான நியாயமான தீர்வை வைக்கப் போவதில்லை. ஆனால் இந்த அரசை தீhமானிக்கும் பெரும்பான்மை மக்கள் தெற்கில் இருக்கிறார்கள். இவர்களுடன் பேசாமல் -பெரும்பான்மை ஆதரவை நோக்கி இயங்காமல் நாமெப்படி தீர்வைப் பற்றி பேசமுடியும். 85 வீத பெரும்பான்மை மக்களை புறக்கணித்து 15 வீத மக்கள் தீர்வை வலியப்பெறுவது எப்படி சாத்தியம் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். 85 வீத மக்களையும் எதிரிகளாக பார்ப்பதை விடுவோம். இலங்கை அரசைக் கெஞ்சிக் கெஞ்சித் தயவு பெறுவோம் என்ற கதையையும் விடுவோம். மக்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம்.
உங்களது உரிமைகள் அடித்து நொருக்கப்படும் பொழுது –உங்கள் சனநாயக உரிமைகள் மறுக்கப்படும்பொழுது அதற்கெதிராக நாம் உங்களுடன் நின்று போராடுவோம் என்ற செய்தியை ஒடுக்கப்படும் சிங்களத் தொழிலாளர் மற்றும் வறிய மக்களுக்கு நாம் பகிரங்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் நாம் ஒடுக்கப்படும்போது குரல் கொடுப்பார்கள்- எமது உரிமைக் குரலைப் புரிந்தகொள்வார்கள். சிறுபான்மைத் தேசிய அரசியலை முன்னெடுக்க இன்று தேசிய அரசியல் செய்வது அவசியமானது. ‘நான் முஸ்லிம் அரசியல் மட்டும் பேசுவேன்’. ‘நான் மலையக அரசியல் மட்டும் பேசுவேன்’. ‘நான் வடக்கு அரசியல்’- ‘நான் கிழக்கு அரசியல்’ – ‘நான் தெற்கு அரசியல்’ என்று திசைக்கொன்றாக பிரிந்து அரசியல் செய்வதால் எந்த மக்களுக்கும் லாபமில்லை. அந்தந்த அரசியலை முன்னெடக்கும் கட்சி தலைமைகளுக்கு மட்டும்தான் அதனால் லாபம். மலையக மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தாது சிறுபான்மையர் உரிமைப்போராட்டத்தை நாம் ஒரு சொட்டும் நகர்த்த முடியாது. நாம் சிறுபான்மையருக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை கட்டவேண்டுமென்றால் அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் ஒன்றிணைக்க முன்வரவேண்டும்.
இங்கு இன்னுமொரு முக்கியமான புள்ளியையும் குறிப்பிடவேண்டியுள்ளது. தெற்கில் ஒடுக்கப்படும் சிங்கள தொழிலாளர்கள் மற்றும் வறிய மக்களுக்கும் எதிர்ப்புச் செய்யும் தலைமை சிறுபான்மையரிடம் இருந்துதான் வரவேண்டியுள்ளது. நாம் ஒன்றிணைந்து எதிர்க்கும் சிறுபான்மைக்குள் அனைவரையும் இழுத்துவரவேண்டும். ஒடுக்கப்படும் தமிழ் -சிங்கள- முஸ்லிம் மலையக முற்போக்கு சக்திகளை இனைத்து இதை நாம் சாதிக்கலாம். இதுதான் பலமான போராட்டத்தை கட்டமைக்க வழி- இது தான் எம்மை வெற்றி நோக்கி நகர்த்த வல்லது.
இன்று தெற்கு மக்களின் உரிமைகளை கதைக்கவும் யாருமில்லை. தெற்கில் ஒரு குடும்ப அரசால் எதிர்கட்சிகள் முடக்கப்பட்டு வருகிறது, யாராவது எதிர்க்க முற்பட்டால் அவர்கள் தேசத்துரோகிகளாக எதிரிகளாக விழா எடுக்கப்படுகிறார்கள். சரத் பொன்சேகாவுக்கு நடக்கும் விழா எல்லாருக்கும் போதனையாக இருக்கும் படி நடத்தப்படுகிறது. மாணவர் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த ஜே வி பியின் உதுள் பிரேமரத்ன கைது செய்யப்பட்டதை பார்க்கிறோம். இந்தக் கைதை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளை ஜேவிபி யின் அரசியல் வங்குறோத்துப் பற்றியும் நாம் இங்கு குறிப்பிடவேண்டும். யுத்தத்தை அதன் கொடுமைகளை இன்றுவரை அவர்கள் வக்காலத்து வாங்கி வருகிறார்கள். தற்போதய அரசு சர்வாதிகார வடிவம் எடுப்பதற்கு முக்கிய பங்களித்தவர்கள் அவர்கள். சிறுபான்மையரின் உரிமைகளை இன்றுவரையும் மறுத்து வருகிறார்கள். மார்க்சிய சொல்லாடலுக்குள் இனவாதத்தையும் மொழிவாதத்தையும் அடக்குமுறையையும் புதைத்து இன்னுமொருவகை அடக்குமுறை அரசியல் செய்கிறார்கள் அவர்கள்.
இந்த லட்சணத்தில் தெற்கு மக்கள் நொருக்கப்படும் தமது உரிமைகளுக்காக யாரோடு சேர்ந்து போராடுவது? அவர்கள் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பது யார்? நாம் தான் அதற்கும் பொறுப்பெடுக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான தமிழ்பேசும் மக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்பட்டதை –மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் அனைத்து உரிமைகளும் நொருக்கப்பட்டு குற்றுயிராக நிற்பதைப் பார்க்கும் பொழுது நெஞ்சு கனப்பதைப் போலத்தான் –
நாம் காலம் காலமாக போராடி வென்றெடுத்த உரிமைகள் காற்றில் கரைக்கப்படுவதை பார்க்கும் போதும் மனம் கனக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் எதிராக நாம் ஒன்றுபடவேண்டும். உதவிக்கு இந்தியா வரும் அல்லது மேற்கு நாடுகள் வரும் என்ற கனவுகளை விடுவோம். இந்தியா ஒருபோதும் வராது. யுத்தம் கோர முடிவக்கு வந்ததில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பங்கிருந்தது என்பது இன்று அனைவரும் அறிந்த விசயம். இலங்கை மேற்கத்தேய பொருளாதார செல்வாக்கில் இருந்து பிராந்திய பொருளாதார செல்வாக்குக்குள் நகர்ந்ததன் அரசியல் பிரதிபலன்களைத்தான் நாம் அனுபவிக்கிறோம். இதனால் மேற்குலகு இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமா என்றொரு கேள்வியை நீங்கள் கேட்கலாம். இதன் விடை சுலபமானது. அவர்கள் எதை செய்தாலும் அது அவர்தம் பொருளாதார நலன் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருக்கும். ஜி எஸ் பி பிளஸ் வரி சலுகைகளை நிறுத்துவத்துக்கு எதிராக கடுமையாக வாதிட்டவர்கள் இங்கிலாந்தில் தற்போதய அரசாட்சி செய்பவர்கள். அவர்கள் அண்மையில் கொழும்புக்கு வந்து பொருளாதார உறவை வளர்க்க முயற்சிப்பது உங்களுக்குத் தெரியும்.
9-11க்கு பிந்திய உலக அரசியற் சூழ்நிலையில் – தற்போதய மிகப்பெரிய பொருளாதார சரிவின் பின்னனியில் -மேற்கத்தேய அரசுகள் ஒடுக்கப்படுபவர்கள் சார்ந்து இயங்குவர் என்று கனவு காண்பதைப்போன்ற மொக்குக் கனவு வேறு இருக்கமுடியாது. இந்த மேற்கத்தேய முதலாளித்துவ அரசுகள் தத்தமது நாடுகளில் வறிய தொழிலாளர்களை ஒடுக்குவதில் கடும் பிசியாக இருக்கிறார்கள். இதற்கு எதிராக பிரான்சில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது, கிரீஸ் ஜேர்மன் போத்துக்கல் என்று பல நாடுகளில் ஒரு வர்க்கப் போருக்குத் தொழிலாளர்கள் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினையை விட்டுப்விட்டு மேற்கத்தேய அரசுகள் ஓடிவந்து இலங்கைவாழ் சிறுபான்மையருக்கு குரல் கொடுக்கப் போகிறார்கள் என்று உங்களுக்கு யாராவது சொன்னால் அது ஒரு பச்சைப்பொய் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு தேவை பொருளாதார லாபம். அதை வாரி வழங்க தற்போதய இலங்கை அரசு தயாராக உள்ளது.
மனித உரிமை என்ற ஒரு சங்கதி உண்டு. யுத்தக்குற்றம் என்ற ஒரு பிரச்சினையும் உண்டு. இவைகளை தமது சொந்த பொருளாதார நலன்களுக்காக பயன்படுத்திய வரலாறுதான் மேற்குலக முதலாளித்துவ அரசுகளின் வரலாறு. மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை இவர்கள் ஈராக்கில் கொண்று குவித்துள்ளார்கள். இவர்களின் இரத்த வெறிக்கு இன்றும் ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்கள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். கொங்கோவில் பலியான மில்லியன் கணக்கான மக்கள் இவர்களின் மனித உரிமை ராடருக்குள் இல்லை. இலங்கை மட்டும் என்ன வித்தியாசம்?
அதேசமயம் மேற்கு நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான தமிழ்பேசும் மக்கள் செய்த போராட்டங்கள் இலங்கையை மேற்குலகு பார்க்கும் விதத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது என்பது மிகையான கூற்றல்ல. உதாரணமாக இங்கிலாந்தில் பாராளுமன்றத்தின் முன் முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான இளையோர் இங்கிலாந்து அரசின் வயிற்றில் புளி கரைத்ததார்கள் என்பதில் உண்மையுண்டு. இதைச் சொன்னவுடன் புலம்பெயர் தமிழர்கள் மேற்கத்தேய அரசுகளின் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எமது போராட்டப் பலத்தை முறியடித்து தமது நலனை முன்னெடுக்கும் செயலை அரசுகள் செய்ய அதற்கு ஒத்துப்போகும் அரசியலைத்தான் அங்கிருக்கும் சில தமிழர்களும் செய்கிறார்கள். இன்று வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் கருத்தொற்றுமை கிடையாது. பல்வேறு குழுக்கலாக பிரிந்து நின்று அரசியல் செய்கிறார்கள் அவர்கள். இதில் முக்கிய பணப் பலத்துடன் இயங்கும் சிலர் அந்தந்த நாட்டு அரசியற் கொள்கைகளுக்கு எந்த கேள்வியுமின்றி ஒத்தூதுகிறார்கள். இங்கிலாந்து அரசு இலங்கை அரசுடன் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்ற செய்தியைப் படிக்கும் நீங்கள் அதற்கு எதிராக புலம்பெயர் போராட்டம் நிகழ்ந்தது என்ற செய்தியை படிக்க முடிந்ததா?
வெளிநாட்டு தமிழ் பேசும் மக்களின் பிரஞ்சையும் இங்கிருக்கும் மக்களின் பிரக்ஞையும் வேறு வேறானவை. அங்கு போராடக்கூடிய சூழ்நிலையும் மேற்கத்தேய அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வசதியும் இருந்தாலும் பெரும் அமைப்புகள் யாரையும் பகைக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். ஆனால் மக்கள் அப்படியில்லை. மக்கள் இலங்கையில் வாழும் சகோதரங்களுக்காக போராட தியாகம் செய்ய தயாராகத்தான் இருக்கிறார்கள். அதை ஒருங்கிணைக்கத்தான் யாரும் இல்லை. தமிழ் ஒருங்கிணைப்பு (தமிழ் சொலிடாரிட்டி) மட்டுமே இந்த வேலைகளைச் செய்கிறது. மேற்கு அரசின் ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் வெவ்வேறு இன மக்களின் உரிமைகளுக்காகவும் நாம் குரல் கொடுக்கிறோம். அவர்களின் ஆதரவை இலங்கைவாழ் சிறுபான்மை மக்களின் உரிமைப்போராட்டத்துக்கு வென்றெடுக்கப் நாம் பாடுபடுகிறோம். தமிழ் சொலிடாரிட்டி அளவுக்கு மற்ற இன மக்கள் மத்தியில் அவர்தம் போராட்ட அமைப்புகள் மத்தியில் தெரியப்பட்ட, ஆதரவு பெற்ற, வேறு எந்த தமிழ் அமைப்புக்களும் கிடையாது. நாம் மக்களை நோக்கிப் பேசுகிறோம். அங்கும் சரி இங்கும் சரி மக்களை நோக்கி பேசுவதும் மக்களை ஒன்றிணைத்த போராட்டமுமே நமக்கான ஓரே வழி.
இந்தியா பற்றிய எமது அணுகுமுறையும் இது போன்றதே. பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கும் இந்திய அரசு இலங்கையில் தேசிய இனவிடுதலையை பெற்றுத்தரும் என்ற பழங்கதையை மீண்டும் பேசுவதில் அர்த்தமில்லை. இந்தக்கதை பேசும் ரி.என்.ஏ போன்ற அமைப்புகள் கொழுத்த லாபமடைவதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இதில் தமக்கெந்த லாபமும் இல்லை என்பது மக்களுக்கு தெரியும். இந்திய அரசால் காஸ்மீர் மக்களின் சுயநிர்னய உரிமையும் சனநாயக உரிமைகளும் நொருக்கப்படுவது நாமறிவோம். சட்டீஸ்கர், ஒரிசா, நாகலாந்து என்று இந்திய அரசுக்கெதிரான பெரும் மக்கள் போராட்டம் நிகழ்வதையும் நாமறிவோம்.
இதே போராட்டம் தமிழ் நாட்டிலும் நிகழ்கிறது. இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வேட்டையாடப்பட்டதற்கு எதிராக கத்திய தொண்டைகள் – தெருத்தெருவாக நடந்த கால்கள் – கொடி பிடித்த கைகள் – இந்திய அரசால் ஒடுக்கப்படும் மக்களுடயவை. கறுப்பு கொமான்டோ பாதுகாப்பில் டிராபிக்கை நிறுத்தி ஏ.சி காரில் வந்திறங்கி தமிழ்-இரத்தம் என்று புலம்பிவிட்டு மீண்டும் அதே ஏ.சி காரில் ஏறிப்போய் தமது ஏ.சி மாளிகைகளில் இளைப்பாறும் தமிழ்நாட்டு தலைவர்கள் இங்கு செத்துக்கொண்டிருப்பவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என்று எண்ணி ஏமாந்துவிடாதீர்கள். யுத்தம் நடந்தபோது அரசுக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முறியடிக்க வெற்றிகரமாக அனைத்து செயல்களையும் முன்னெடுத்தவர்கள் தான் ‘கருணாநிதிகள்’.
இலங்கை அரசின் கைகளில் இரத்தக்கறை உண்டென்றால், இந்திய-தமிழ்நாட்டு அரசுகளின் கைகளிலும் அதே இரத்தக்கறை உண்டு. இவர்களை நோக்கி அல்லது சார்ந்து நாம் இயங்கமுடியாது. நாம் மக்களுடன் பேசுவோம். எமக்காக எத்தனையோ போராட்டங்களை செய்த தமிழ்நாட்டு ஒடுக்கப்படும் மக்களுக்காக –அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக என்றாவது நாம் குரல் கொடுத்திருக்கிறோமா? முதலில் அதைச்செய்வோம். அதன்மூலம் போராட்டத்தை முறைப்படி ஒன்றிணைப்போம்.
முற்போக்குச் சக்திகள் ஒன்றுபடவேண்டும் என்ற அடிப்படையில் மனோ கணேசன் அவர்களுடன் நாம் உரையாடியிருந்தோம். அதுபற்றி வீரகேசரியில் வந்த அவரின் செவ்வி பார்த்திருப்பீர்கள். இது ஒரு முக்கியமான முயற்சி –ஆனால் இலகுவானதல்ல. இது ஒரு நீண்ட போராட்டம் என்ற தெளிவுடன் இதில் நாம் ஈடுபடவேண்டும். இக்கூட்டத்தில் மனோ கலந்துகொள்வது நல்லதாகப்போயிற்று. இம்முயற்சி பற்றி அவரே உங்களுக்கு சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன். இந்த முயற்சியில் சுயநலமற்ற மக்கள் அரசியல் செய்பவர்கள் இணைந்துகொள்ள வேண்டும். இதுபோல் நாம் ஒரு தனித்துவமான அரசியலை இன்று நிறுவவேண்டியுள்ளது.
இலங்கையில் வெ;வேறு பகுதிகளில் வாழும் தமிழ்பேசும் மக்கள் வௌ;வேறு பிரக்;ஞை உடையவர்கள் என்று முன்பு சொல்லியிருந்தேன். ஆனால் இவர்களிடம் ஒற்றுமையான ஒரு பிரஞ்சையும் உண்டு. இனி யாரையும் இவர்கள் நம்பத் தயாராக இல்லை என்பதே அது. ஏனெனில் அரசியல்வாதிகளால் இவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள். இவர்களது நம்பிக்கையை மீண்டும் பெற்றுக்கொள்வது இலகுவான காரியமல்ல. அதனால்தான் சமரசமற்ற உறுதியான முற்போக்குச் சக்தியொன்றை உருவாக்குவது அவசிய தேவையாக உள்ளது. எப்படி மக்கள் நம்பிக்கையை வெல்வது என்பது பற்றி ஒரு உதாரணத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஜரோப்பிய பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் நமது நனணபரும் தோழருமான ஜோகிக்கின்ஸ் அவர்கள் முன்பு ஐயர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பொழுது அவருக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்த முன்னணி வலதுசாரி பத்திரிகை ‘ காசால் வாங்கமுடியாத ஒரே ஒரு அரசியல்வாதியின் தோல்வி’ என்று தலையங்கம் எழுதியது. இது எமக்கு தோல்வியல்ல வெற்றி. இன்று ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவு அவருக்குண்டு. இந்த ஆதரவை அரச மற்றும் முதலாளித்துவ சக்திகளுக்கு ஊதுகுலழாக இருந்து அவர் பெறவில்லை. மாறாக மக்களுக்காகப் போராடி சிறைசென்றும் -தெருத்தெருவாக போராட்டங்களை ஒன்றினைத்துமே அவர் வென்றார். நாம் மக்களுடன் மக்களாக போராடாமல் அவர்தம் நம்பிக்கையை வெல்ல முடியாது. இலங்கை இடதுசாரிகளுக்கு இந்த பாரம்பரியம் ஒருகாலத்தில் இருந்தது உண்மைதான். ஆனால் அவர்களின் இன்றய நிலை பற்றியும் சில விசயங்களை இங்கு குறிப்பிட்டு நான் என் பேச்சை முடிக்க விரும்புகிறேன்.
எல் எஸ் எஸ் பி 1972ம் ஆண்டு அரசியல் யாப்பு திருத்தத்தின்போது தமிழ் பேசும் மக்களின் காலை வாரியது நமக்கு தெரியும். இன்று மகிந்த சிந்தனையின் சூட்டில் குளிர் காய்ந்தபடி சனாதிபதியின் அதிகாரத்தை கூட்டி அரசை சர்வாதிகாரம் நோக்கி நகர்த்தும்; சட்ட திருத்தங்களுக்கு ஆதரவளித்து வருகிறது, முன்பு எல் எஸ் எஸ் பி பிழையான பாதையில் போகிறது என்று அக்கட்சிக்குள் இருந்து சண்டைபோட்டு வெயியேறிய வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள்கூட இன்று அரசின் அரவனைப்பில் கிறங்கி கிடக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால்தான் பெரும்பான்மை மக்களுக்கு இன்று இடதுசாரி அரசியலில் நம்பிக்கை குறைந்துபோயுள்ளது, இருப்பினும் எஞ்சியிருக்கும் இடதுசாரிகள் மட்டுமே இன்றும் அடக்குமுறைக்கெதிராக குரல்கொடுத்தவண்ணமும் போராட்டங்கள் செய்தவண்ணமும் இருக்கிறார்கள். சிறிதுங்க ஜெயசூரிய போன்றவர்கள் மற்றும் ஏனைய ஜக்கிய சோசலிச கட்சி தோழர்கள் தொடர்ந்தும் தமது உயிரைப்பணயம் வைத்து கடும் எதிர்ப்பு செய்துவருவது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்றே. மக்கள் மத்தியில் போராட்டக்குரலை கட்டமைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் துணிவுடன் இக்கூட்டத்தை ஒழுங்கமைத்தமைக்கு நன்றிகள். தமிழ் சொலிடாரிக்கு இவர்கள் தமது ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். இந்த சொலிடாரிட்டி மேலும் பலப்படவேண்டும் – மேலும் எதிர்ப்பு பலப்படவேண்டும் என்பதே எமது அவா.