முத்தங்கள்

‘ வாழ்க முகநூல்’

முகநூலுக்கு எனது முதலாவது முத்தங்கள்!

சுதந்திர உரையாடற் தளம் – கட்டற்ற கருத்துத் தளம் -என்றெல்லாம் கத்திக் கத்தி ஒரு தளத்தை உருவாக்க வருசக்கணக்கில் முயற்சித்துவரும் பத்திரிகையாளனுக்கு முகநூல் ஆறுதல் தருகிறது. ஒரு ‘தனியனாக’ வலைத்தளத்தை உருவாக்கி கட்டற்ற கதை பேச்சு வாக்கு செய்ய முயன்றபோது அம்புகளும் ஈட்டிகளும் தளத்தை உருவாக்கினவன் மேல் தான் பாய்ந்தன அன்றி , அந்தத் தளத்தை உபயோகித்துக் கதையாடியவர்களைக் குறி வைக்கத் தவறின. எய்தவன் இருக்க அம்பை நொந்து கொண்டார்கள் நமது எழுத்தாள வித்தகர்கள். இந்த அர்த்தத்தில் முகநூலில் நடக்கும் ‘அடிபாடுகளுக்கும்’ ஒரு வித நன்மையுண்டு. இதே அர்த்தத்தில் கீற்று இணைய ஆசிரியர்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சாரம் அர்த்தமற்றது. தான் விரும்பியபடி கீற்று இல்லை என்பதற்காக வசுவமித்ர ரமேசைப் போட்டுத் தாக்குகிறார். “தனது மனைவியாகிய ப்ரியாதம்பியைத் தமிழகம் அறிந்த, மதியூகியாக்கவே கீற்றை அவர் இப்பொழுது பயன்படுத்தி வருகிறார்” என்று வசுவமித்ர விசிலடிக்கிறார். ‘மூடுறா உன் இணையத்தை’ என்ற பாணியில் முட்டுபவர்களுடன் கூட முறுகாமலிருக்கும் ரமேசுக்கு எனது இரண்டாவது முத்தங்கள்.

மூன்றாவது – மற்றும் முக்கியமான முத்தங்கள் – ஷோபாசக்திக்கு!

சீ என்ன இது? என்று அருவருப்புப் படுவீர்கள் என்று தெரியும். அவருக்கு முத்தம் கொடுப்பது இது முதல் தடவையல்ல! அந்த விபரம் பற்றி பிறகொருநாள் பேசுவோம்! அவர்மேலான ‘அகோர’ தாக்குதல்களின் அர்த்தமின்மையின் பாற்பட்டு எழுந்த வாஞ்சையே இன்றைய முத்தத்தின் பின்னால் இருக்கும் சிந்தனை. அதற்காக எமக்கிடையிலான அரசியல் முரண்களை இந்த முத்தம் மூடி மறைத்து விட்டது என்று அவசரப்படவேண்டாம். அதேபோல் ‘தனிநபர்’ தாக்குதல்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறேன் என்ற வெற்றுக் கற்பனைகளையும் வளர்த்து விடாதீர்கள். யாம் கூறும் பாணி வேறு.

‘தனி மனிதனின் அரசியல்’ என்ற ஒன்றும் கிடையாது. சமூகம் சார்பற்ற அரசியல் என்பதோ அல்லது அரசியலற்ற சமூக நிகழ்வுகள் என்பதோ எதுவுமில்லை. மேற்சொன்ன- இறுகிய கட்டமைப்பைத் தருவது போன்ற – வார்த்தைகள் உண்மையில் இயங்கு சமூகத்தின் ஒரு சிறு குறுக்குவெட்டு மட்டுமே. காலத்துக்குக் காலம் ‘தனி நபர்கள்’ எவ்வாறு அரசியலை மாற்றிக் கொள்கிறார்கள் என்பது ‘சமூக விஞ்ஞான’ கேள்வி. இந்த மாற்றம் ஒவ்வொருவரதும் சிந்தனை வளர்ச்சியில் இருந்து மட்டும் எழுவதில்லை. மாறாக அவர் வாழும் சூழல் -அவரைச்சுற்றி இயங்கும் அரசியல்/சமூக/பொருளாதார தளங்களின் செல்வாக்கு என்பன மாற்றத்துக்குப் பங்களிக்கின்றன. -உனது நண்பர்களைப் பற்றிச் சொல். நான் உன்னைப் பற்றிச் சொல்வேன் என்ற பழங்கால கூற்றின் பின்னாலும் இத்தகைய சமூக அவதானம் இருப்பதை அக்கூற்றை முழுமையாக ன ஏற்காததையும் சொல்லி இங்கு அவதானிப்போம்.

இவ்வகையில் ஒருவரது அரசியல் பிற்போக்குத்தனத்தைக் கேள்வி கேட்க அவரது சமூக மற்றும் தனிப்பட்ட தொடர்பாடல்களையும் விசாரணைக்குள்ளாக்குவது சில சமயங்களில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இருப்பினும் , தூய கணிதம் போன்ற ‘கறுப்பு வெள்ளை’ தெளிவுடைய இலகுவான செயல் அல்ல அது. பல வர்ணம் கலந்த சிக்கல் நிறைந்த சமூக உறவில் இருந்து வர்ணப்பிரிப்பு செய்து அறிதல் மிகக் கடின விஞ்ஞானம். ஒருவன் கறுப்பாகவும் ஒல்லியாகவும் இருப்பதால் அவன் தலித் என்று முன் தீர்மானங்களுக்குத் தாவும் மனங்களுக்கு இந்தக் கடினத்தைக் கையாள முடியுமா?

ஷோபாசக்திக்கெதிரான தாக்குதல்கள் இத்தகைய ‘கறுப்பு வெள்ளை’ தாக்குதல்களாகவே இருக்கின்றன. வேலை மெனக்கெட்டு இதை எழுத வேண்டியிருப்பதும் அதனால் தான். வளர்மதியை எடுத்துக் கொள்வோம். முகநூலுக்காகப் பிறந்த உயிரது! நிதானமாக ஒரு கட்டுரை எழுதுவதற்கு அவருக்கு வருசக்கணக்கெடுக்கலாம். ஒரு விசயம் பற்றிய சரியான அவதானங்களைத் தொகுக்க முன்;பே அவரது பார்வை வேறு எங்கோ தாவி விடுகிறது. இந்த இயல்பால் முகநூல் அவருக்கு ஒரு ‘வரப்பிரசாதம்’. அவ்வப்போதிருக்கும் மனநிலைக்கேற்றவாறு வைச்சு வாங்குகிறார். அதன் மூலம் தன்மேல் அன்போடிருக்கும் பலரையும் ஓடஓடத் துரத்துகிறார்.

வசைபாடுங்கள் வளர். நன்றாக பாடுங்கள். ஆனால் வசைபாடும் அவசரத்தில் ஏன் அனாவசியமாகப் பொய்களுக்கும் புரட்டுக்களுக்கும் கருத்து மற்றும் அரசியல் பிழைகளுக்கும் முண்டு கொடுக்கிறீர்கள். ஆள் தள்ளாடினாலும் எழுத்துக்கு நிதானம் வேண்டும் என்று விரும்புகிறேன். அதே நேரம் வளரின் ‘தார்மீகக்’ கோபத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அவர் சொல்கிறார் “ஒரு ஜனக்கூட்டம் அழிவின் விளிம்பில் இருக்கும் நிலையிலும் அதைத் தம் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களை வசைபாடியதில் என்ன தவறு இருக்கிறது? அது குறித்துக் கள்ள மௌனம் சாதிப்பவர் மீது என்ன மரியாதை வேண்டியிருக்கு?” சரிதான். ஆனால் மரியாதைக்குறைவாக கதைப்பதல்ல இங்கு பிரச்சினை. எனக்கோ உங்களுக்கோ ராஜபக்ச மேலோ அல்லது பொன்சேகா மேலோ ஒரு சொட்டு மரியாதையும் வரப்போவதில்லை. ஆனால் ராஜபக்ச பிரபாகரனின் மூஞ்சையில் மூத்திரம் இருந்தார் என்று ஒருவர் எழுதினால் அதற்கு வக்காலத்து வாங்கவேண்டிய அவசியமுண்டா? அச்செயல் உண்மையில் நடந்திருக்கலாம். அந்த உண்மை யாருக்குத் தெரியும்? ‘கதைகளை’ வைத்து அரசியல் வகுப்பெடுப்பது தவறல்லவா? தேனி மற்றும் நிதர்சனம் போன்ற இணையத்தளங்களில் இத்தகைய புழுகுக் கதைகள் நிறைய வருகின்றன. நீங்கள் முன்வைக்கும் அரசியற் கருத்துக்களை பலப்படுத்தவென்று நீங்கள் ‘கட்டுக்கதைகளுக்கு’ தாவுகிறீர்களோ, அன்று வெளிச்சத்துக்கு வருகிறது உங்கள் அரசியற் பலவீனம். எதிரியின் எதிரி நண்பன் என்ற ‘கறுப்பு வெள்ளை’ அரசியல் பலவீனமானது.

‘கட்டுக்கதைகள்’ என்று நாம் சொல்வது எதை? ஷோபாசக்தி ஒரு கொலைகாரன் – கள்ளக்கடத்தல்காரன் -அரசிடம் காசு வாங்குபவன் – என்று விரியும் குற்றச்சாட்டுகள் எந்த அடிப்படையுமற்றவை. அரசியல் ரீதியான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து விலத்தி தனிநபர் உரையாடலில் புதைக்க ஷோபாவை வற்புறுத்தும் செயல்களவை. அவருக்கு எப்படிக் காசு வருகிறது என்ற கேள்வியை வளர்மதி மட்டுமல்ல பலரும் கேட்கிறார்கள். சரி இந்தியாவில் இருப்பவர்களுக்குத்தான் புரிந்துகொள்வது கடினம் என்றால் ஏன் இந்தக்கேள்வி பிரான்சில் இருப்பவர்களிடம் இருந்தும் வருகிறது என்று தெரியவில்லை. ‘ஆஸ்திக்கு ஒண்டு, ஆசைக்கு ஒண்டு, அலக்கேசனுக்கு ஒண்டு’ என்று மூன்று பிள்ளைகள் பெற்று அலக்கேசன் காசில் வியாபாரம் தொடங்கி செல்வம் பெருக்குபவர்களிடம் நட்போடிருப்பவர்கள் ஷோபாவைத் தாக்கும் பரிதாபகரமான நடவடிக்கையை என்ன சொல்ல?

‘எங்கிருந்து காசு வந்தது’ என்ற கேள்வி இன்று சகஜமாகப் போய்விட்டது. சிலரின் அர்ப்பணிப்புக்களைக் கொச்சைப்படுத்தும் கேள்வி இது. வெளிநாடுகளில் வாழும் பெரும்பான்மை எழுத்தாளர்கள் தமது சொந்த நலன்களில் மிக்க அக்கறையுள்ளவர்கள். அவர்களுக்கு இலக்கியம் பொழுது போக்கு. இதில் இருந்து மாறாகக் கடும் உழைப்புக்கும் மத்தியில் கிடைத்த சொற்ப நேரங்களில் வரிகளைக் கிறுக்கி இலக்கியம் செய்யும் சொற்ப இலக்கியவாதிகளும் உண்டு. வேலையை விட்டால் அவர்கள் பாடு துலைந்தது. தெருவிற் படுத்துத் தூங்கிய அனுபவம் எனக்குண்டு. தங்கள் நல் வாழ்க்கையை முதன்மைப்படுத்துபவர்களில் இருந்து மாறி எழுத்தை முதன்மைப்படுத்தி வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளத் துணியும் எழுத்தாளரில் ஒருவன் ஷோபா. அரசுப் பணத்தில் – தமது குடும்ப உதவியுடன் அவர் ‘இலக்கியச்சுற்றுலா’ செய்வதில் உங்களுக்கு ஏன் பொறாமை? நீண்டகாலமாக எனக்கு அந்த வசதியிருக்கவில்லை. விசா இல்லாமல் ரோட்டு ரோட்டாக திரிந்தபோது நானும் தான் பொறாமைப்பட்டேன். அதற்காக இலங்கை அரசிடம் காசு வாங்குகிறார் என்ற கட்டுக்கதைக்கு வக்காலத்து வாங்குவதா? அவருக்குக் காசு கொடுப்பது பிரெஞ்சு அரசு. நானும் ஒருமுறை வெட்கப்பட்டு வெட்கப்பட்டுப் போய் பிரெஞ்சு அரசிடம் சாப்பாட்டுக்காகப் ‘பிச்சைக்காசு’ வாங்கியிருக்கிறேன். அப்போது அந்த அரச ஊழியன் என்னைத் தனியாக கூட்டிச்சென்று சொன்னதை வாழ்நாளில் மறக்க முடியாது. ‘நீ ஏன் இந்தக் காசைப் பெறத் தயங்குகிறாய்? பிரெஞ்சு தொழிலாளர்கள் நீண்ட போராட்டத்தின் பின் இந்த நலன்களை எங்களுக்காக வென்றெடுத்து தந்திருக்கிறார்கள். இது பிரெஞ்சு அரசு உனக்குப் போடும் பிச்சையல்ல. இது உன் உரிமை’. எனக் கூறி உன் உரிமையை விட்டுக் கொடுத்து விடாதே என்று அவர் சொன்னதைப் பசித்த வயிற்றுடன் கேட்டிருந்தால் உங்களுக்கு கணகள் கலங்கியிருக்கும். ஷோபா தன் உரிமையைப் பயிற்சிப்பதில் என்ன தவறு. அதிகாரத்திடம் அவர் காசு வாங்கியதாக ஆதாரமிருந்தால் வையுங்கள் உங்களுடன் சேர்ந்து நானும் அடித்து நொருக்குவேன்.

சகமனிதர் மேல் ஷோபா அபாண்டமாக ஒரு ‘பாலியல்’ பொய்யை ஒரு போதும் திட்டமிட்டுக் கட்டமைக்க மாட்டார் என்று முழுமையாக நம்புகிறேன். இது தனிப்பட்ட கருத்து. எனது பழக்கத்தை, உரையாடலை வைத்து என் சிறு மூளை எடுத்த முடிவிது. இருப்பினும் இரு மனிதர்களுக்கிடையிலான சிக்கலான உறவுகளில் யார் சரி? யார் பிழை? என்று பாய்ந்து கருத்துச் சொல்லமுடியாத அளவுக்கு நம்மை அனுபவம் பக்குவப் படுத்தியிருக்கிறது. ஆகையால் நாமிங்கு அதுபற்றி பேசப்போவதில்லை. இது வக்கிரமென்றால் என்மேல் காறித்துப்புங்கள் பரவாயில்லை!

ஆனால் இந்த பிரச்சினையில் ஒரு விசயம் தெளிவாகியிருக்கிறது. நமது ‘எழுத்தாளர்கள்’ சும்மா பேச்சுக்கு ‘கட்டுடைப்பு’ கதைகள் கதைத்தாலும் அவர்களுக்கு குடும்பக் கட்டமைப்பு பற்றி ஆழமான அறிவில்லை என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். ‘குடும்பங்களையே பிரிக்கிறீர்கள் வேறு யாரையாவது போய்ப் பிடியுங்கள்’ என்று மிகவும் எரிச்சலூட்டும் படி எழுதுகிறார் புரட்சிகர சிறீரங்கன். “ ‘பரஸ்பரம்’ என்ற ஆணாதிக்க வக்கிரத்தை கொட்டுகிறார்” என்று பெண்ணியல்வாத பாடமெடுக்கிறார் றயாகரன். “நீ நாக்கை தொங்கவிட்டு அலைந்த உன் நாய்க்குரிய நாய்க் குணத்தை, இக்கதையில் உன்னையறியாமல் வக்கிரமாக கொட்டுகின்றாய்.” என்று திட்டும் றயாகரனின் இணையத்தளம் ஆணாதிக்க சொல்லாடல் நிறைந்த தளம். அவர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உட்படப் பல பெண்களுக்கெதிராக வன்முறைக் கதைகளை எழுதியவர். ‘ஓரினச்சேர்க்கை’ ஒரு முதலாளித்துவ சதி என்று நம்பி வருபவர்! இவர்கள் எல்லாம் பெண்களைக் காப்பாற்றப் புறப்பட்டு விட்டார்கள்!

மிகவும் பிற்படுத்தப்பட்ட கலாச்சார பழக்கவழக்கங்களை மேலும் திண்மப்படுத்தும் முயற்சிகள் இவை. ஓரு பெண் எழுத்தாளராக-நடிகராக இருக்க முடியாது. அவள் எப்படியாவது ஏதாவது ஒரு விதத்தில் தான் பெண்ணாக இருப்பதைப் பாவித்துத்தான் முன்னேறுகிறாள் என்று ஆண்கள் நம்புகிறார்கள். லீனா மணிமேகலையின் மேலான அனாவசியமான கொடூரத் தாக்குதல்களின் பின்னணியும் இதுதான். ‘இவள் பலரோடு உறவு வைத்துத்தான் முன்னுக்கு வந்தவள்’ என்று ஒருவர் என்னிடம் நேரடியாக சொன்னார்! லீனாவுக்கு எதிரான ஆணாதிக்கக் கதையாடல்களைப் பசப்புபவர்கள் ‘குடும்பப் பெண்கள்’ மேல் கரிசனையுடயவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். ‘என்னை விட்டு ஓடிப் போய்விடக்கூடாது’ என்று தமது ‘மனைவியர்’ பற்றி எல்லா கணவர்களும் பயப்பிடுகிறார்கள் போலுள்ளது. தமிழ் இலக்கியச் சூழலில் புண்படுத்தப்பட்ட ஏராளமான பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆண்களின் வக்கிர புத்திதான் அதற்கு காரணம். அவர்கள் சொல்லும் ஒழுக்கம் அவர்தம் நலன் சார்ந்தது. காதல் செய்யுங்கள் என்றால் கேட்கிறார்கள் இல்லை. ஏதாவது ஒரு விதத்தில் ‘கட்டுப்படுத்த வேண்டும்’ என்று நினைக்கிறார்கள். இந்த கட்டுப்படுத்தும் வக்கிரபுத்தி தான் கசிகிறது எழுத்துக்களில். ஒருவர் தன் காதலை தெரிவிப்பது பிழையல்ல என்பது வளர்மதி போன்றோருக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் தமது காதலை துணிவுடன் தெரிவித்த அனுபவமுள்ளவர் அவர்- அவருக்குக் காதலிக்கத் தெரியும். அவர்கூட ஏன் காதல் மறுப்புக் கதைக்கிறார்- கல்யாணம் செய்தபின் காதல் என்ற ஸ்டாலினியத்தைப் பொறுத்துக் கொள்கிறார் என்று ஒருவர் கேட்கலாம். இங்குதான் எதிரியின் எதிரி நண்பன் என்ற கறுப்பு-வெள்ளை அரசியல் புகுந்து கொள்கிறது. ஷோபாவுக்கு எதிராகச் ஒரு சிக்சர் அடிச்ச மகிழ்வில் திளைக்கிறார் வளர்மதி.

மினர்வா கீற்றில் எழுதிய கட்டுரையில் பெரும்பான்மைப் புள்ளிகளுடன் உடன்பாடே. குறிப்பாக இடதுசாரிகள் மேலான தாக்குதல்கள் பற்றி அவர் குறிப்பிடுவதுடன் முழு உடன்பாடே. இருப்பினும் அவர் முழுமையான அறிதலின் அடிப்படையில் தாக்குதலை ஷோபா நோக்கித் திருப்பியதாக நம்முடியவில்லை. அவரது தாக்குதலின் பின்னால் அரசியல் பின்னணி இருப்பதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்குப் போகிற போக்கில் அ.மார்க்சை அடிக்க அம்பேத்கரை அவர் இழுப்பதை பார்க்கலாம்.

“முதல் மனைவி உயிருடன் இருக்க, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட காலகட்டத்தில்தான், பாலியல் சுதந்திரம் குறித்து அ.மார்க்ஸ் பேசத் தொடங்கினார் என்று நண்பர் ஒருவர் சொன்னதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. (அம்பேத்கரும், பெரியாரும் முதல் மனைவி இறந்தபின்பே இரண்டாவது திருமணம் செய்தார்கள் என்பதும், அந்தத் திருமணத்தையும் பகிரங்கமாக செய்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது)”. இதைப்படிக்க குழப்பமாகிப் போய்விட்டது. முதல்மனைவி இறந்த பின் தான் ‘மறு திருமணம்’ செய்துகொள்ள வேண்டும் என்கிறாரா? ‘திரு மணம்’ செய்துகொள்வது சரி என்கிறாரா? ஓன்றும் புரியவில்லை. இந்த மேற்கோளை சுட்டுவதற்கு ஒரு காரணம் உண்டு. தனது கட்டுரையில் பெண்கள் மீதான வன்முறை பற்றிய சரியான கருத்துக்களை வைக்கும் மினர்வா அ.மா, ஷோபா சார்ந்த கருத்து வைக்கும் போது பொதுமைப்படுத்தும் தவிப்பில் தடுமாறுகிறார் என்பதையே இங்கு சுட்ட விரும்புகிறேன். தனிப்பட்ட விருப்பு வெறுப்பை அரசியலாக்க முயலும் செயலோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. ஷோபாவுக்காக வலிந்து மினர்வாவையோ அல்லது யாரையும் தாக்கும் நோக்கு எனக்கில்லை. ஷோபா இவ்விசயத்தில் பொய் சொல்லவில்லை என்ற எனது அறிதலின் அடிப்படையில் இருந்த எனது சந்தேகத்தை உங்கள் முன்வைக்கிறேன் என்பதை தயவு செய்து புரிந்து கொள்க. தங்கள் கருத்தை மீளாய்வு செய்வீர்களானால் சந்தோசமே.

இலக்கியவாதிகள் மத்தியில் ஒரு ஆணுக்கும் -பெண்ணுக்குமான தொடர்பு இருப்பதே கஸ்டமாக இருக்கிறது. எழுத்தாளர்களின் வக்கிர புத்திகள் பல வழிகளில் வெளிப்படுகிறது. பெண் எழுத்தாளர்கள் ஆண் எழுத்தாளர்களுடன் பேசுவதையே தடை செய்வார்கள் போலிருக்கிறது! இந்த வாதங்கள் பெண் எழுத்தாளர்களுக்கு எத்தகைய அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஏதோ ஒரு வகையில் கட்டுப்பாடான நிலமைக்குள் தான் பெண்கள் இருக்க வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப நிறுவ முயற்சிக்காதீர்கள். ஆணாதிக்கத்தின் வலையில் விழாதீர்கள். பாலியல் வன்முறையை எதிர்ப்பது அத்தியாவசியமானது. அது போல்தான் ஆணாதிக்கத் தளைகளை அறுப்பதும். ஏதாவது ஒரு வகையில் அதற்கு உடன்படாதீர்கள். சக எழுத்தாளர் மேல் அநாவசியமான பாலியல் வன்முறை குற்றம் சுமத்துவது பெண்கள் மீதான கட்டமைப்பை மீள நிறுவுவதான பாணியில் நிகழ்வதை உங்கள் அவதானத்துக்குக் கொண்டு வருகிறேன்.

ஷோபாவின் அரசியல் பற்றியும் தொடர்ந்து எழுதுவேன்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *