மனுஷ்யபுத்திரன் பற்றியும் – மற்றும் லண்டன்காரர் நாவல் வெளியீடும்

‘இந்த வருடம் உயிர்மை வெளியிட்ட முக்கிய புத்தகங்களில் ஓன்று’ மனுஷ்யபுத்திரன்

‘இந்த வருடம் வந்த முக்கியமான நாவலாக இதை கருதுகிறேன்’ சதீஷ் கிரா

‘தமிழ் மொழியில் எழுதப்பட்ட உலக இலக்கியம்.. நான் படித்தபொது வியந்துபோனேன்’ இமயம்

 

 

புதிய தலைமுறையில்

மனுஷ்யபுத்திரனை (மனுஷ்) பலர் பாராட்டிப் பேசி வருகிறார்கள். அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து பல்வேறு இன்னல்களை -எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறார். இந்த தடைகள் மற்றும் உடல் ரீதியான பல்வேறு தடைகளையும் தாண்டி இயங்கிக் கொண்டும் சாதித்துக் கொண்டும் இருப்பவர் என்பதால் எதிர்ப்பவர்கள் மத்தியிலும் அவருக்கு மரியாதை உண்டு.

அவரது கவிதைகள் சார்ந்து பலருக்கும் முரண்பட்ட கருத்துக்கள் உண்டு. மிகச் சிறந்த கவிதைகளை அவர் எழுதி இருக்கிறார். அதில் பலருக்கும் முரண்பாடு இருக்காது. அவை பல மொழிகளில் வெளிவரவேண்டியவை. அவை மொழி தாண்டி ரசிக்கப்படக் கூடியவை. அத்தகைய வல்லமை எல்லாருக்கும் வாலாயம் ஆகாது. சில ‘புகழ்’ பெற்ற எழுத்துக்கள் மொழிபெயர்ப்பில் செத்து சிதிலமாகி விடுகின்ற நிகழ்வை நாம் பார்த்து வருகிறோம். அதே சமயம் தனது பரந்த வாசகப் பரப்பிற்கு ஏற்ப பல முகநூல் கவிதைகளை எழுதி வருகிறார் மனுஷ். இதை ரியாஸ் குரானா போன்ற கவிஞர்கள் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். அது வேறு வகை. மு மேத்தா மற்றும் வைரமுத்துவின் எல்லைகளைத் தாண்டாத சிலர் விமர்சிப்பது முற்றிலும் நியாயமற்றது.

எனது நிலைப்பாடு வேறு. கவிதை என்ற வடிவத்தின் மேல் நம்பிக்கை இல்லை – அதன் காலம் முடிந்து விட்டது என எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன். கணனியின் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி – பாரிய செயர்கை மொழி பயன்பாடு – பல கேள்விகளை எம்முன் வைத்துள்ளது. ‘இயற்கை’ இயல்பின் பல எல்லைகளை செயற்கை கைப்பற்றி வருகிறது. இது எமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளி உள்ளது.

இயற்கை / செயற்கை மொழி வேறுபாடு என்ன? நேரடி மனித ஈடுபாடு மட்டும் இயற்கை ஆகி விடுமா? நேரடி மனித ஈடுபாடு தாண்டிய திறனை செயற்கை நுண்ணறிவு வழங்கும்போது அதன் இயற்கைத் தன்மையை மறுக்க முடியுமா? பெரும்பான்மை மனித ஈடுபாடு, கணணி செயற்கையை விட திறன் குறைந்தே இருக்கிறது – ஆக சமூக இயற்கை திறன் என்பது சிறுபான்மையாக வந்து நிற்கிறதா? போன்ற பல கேள்விகளும் அதன் துணைக் கேள்விகளும் விரிந்துகொண்டே செல்கின்றன. இந்த அடிப்படையில் கவிதை வடிவம் மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது எனச் சொல்வது மிகையில்லை என்றே நினைக்கிறேன். இது பற்றி விரிவாகப் பேச வேண்டும்.

 

மனுஷ் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு விசயத்தில் தயங்கியதில்லை. அவர் உணர்வுகளை மறைப்பதில்லை. அது ஒரு தனித் திறமை –கவிகளுக்கு அவசியம். ஆனால் கவிஞர் எனச் சொல்லும் பலருக்கும் அது இயல்பில்லை. தனது உணர்வுகளை தனது வார்த்தையில் ஓடவிடும் திறமை மனுஷ்க்கு உண்டு. எண்ணத்துக்கும் எழுத்துக்கும் இடைவெளி குறைவு. இப்போதும் – இவ்வளவு அனுபவங்களுக்குப் பிறகும் – அவர் உணர்வுகளின் நுனியில் நின்றபடிதான் பயணிக்கிறார்.

இந்த அடிப்படையில் இருந்து அவர் எழுத்துக்களை அணுகும் பொழுது – குறிப்பாக அவற்றை தொகுப்பாக அணுகும் பொழுது உணர்வோடு வாழ்ந்திருத்தல் விரிவதை பார்க்க முடியும். இது ஒருவகை பரிசோதனை எழுத்துமுறை என்றும் பார்க்கலாம். பொதுவாக கவிஞர்கள் தம்மை வேறு உலகிற்கு கடத்தி செல்வர் – இந்த சுய கடத்தலில் இருந்து சுரக்கும் படிமங்கள் தனித் தீவுகளாக நிற்கும். இதற்கு மாறாக தனது எழுத்தை அன்றாட வாழ்தலின் நீரோட்டமாக முன்வைக்கிறார் மனுஷ்.  அதன் சரி பிளைகளும் அழகியலும் ஆய்வுக்குரியன. ஆனால் இது புது வகை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

 

மனுஷ்யபுத்திரனின் மொழி பற்றி விரிவாக எழுத வேண்டும் என்பது நீண்ட கால நோக்கம். விரைவில் எழுதலாம். ஆனால் சமீபத்தில் பலர் என்னிடம் காரசாரமான சில கேள்விகளை வைத்திருந்தார்கள். அந்த நியாயமான கேவிகளுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அவரது எழுத்து, கவிதை பற்றிய பார்வை ஒவ்வொருவருக்கும் இருக்கும் அகவய பார்வையுடன் சம்மந்தப்பட்டது. எனக்கு பிடிக்கும் கவிதை இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்காலாம். அத்தகைய அகவயப் பார்வை தாண்டி மொழியை பார்ப்பதும் ஆய்வதும் -முன்பு சொன்னதுபோல் – புதிய மாற்றை உள்வாங்கி செய்ய வேண்டும். மனுஷ் மேல் வெறித்தனமாக காதல் கொண்டு ரசிக்கும் அவரது பல ரசிகர்களை போல் இன்றி நிதானமான முறையில் இது செய்யப்படவேண்டும். அது வேறு. இதைப் பலரும் புரிந்து கொள்வர்.

ஆனால் அவரது அரசியலை ஏன் கேள்வி கேட்கவில்லை என சிலர் கோபித்துக் கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மீண்டும் உயிர்மை பதிப்பகத்தில் புத்தகம் வெளியிடுவதற்காக மௌனமாக இருப்பதாக கூட வந்த சில சிலேடைச் சொற்களை பார்க்க கூடியதாக இருந்தது. மனுஷ் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் – அதன் ஆதரவாளர் – கட்சியின் சார்பில் பல பொறுப்பான வேலைகளைச் செய்து வருபவர். ஆனால் இந்த அரசியலுக்கு அப்பால் அவருக்கு நண்பர்கள் உண்டு. மனுசை இருபது வருடங்களுக்கு மேலாகத் தெரியும். அவரது பயணத்தை தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அரசியல் ரீதியான பல முரண்பட்ட கருத்துக்கள் பேசி இருக்கிறோம். புத்தக – பதிப்பக வேலைகள் தவிர தூரத்து உரையாடல் குறைவு. ஒவ்வொரு முறை சென்னை செல்லும்பொழுதும் பார்த்து உரையாடுவது வழக்கம். முரண்பட்ட அரசியல் உரையாடல் அவருடன் சாத்தியம் மட்டுமல்ல – இலகு என்பது மனுஷ்யபுத்திரனை நன்கறிந்தவர்களுக்கு தெரியும். கவிஞர் எதிர் கருத்துக்களையும் கேட்பவர். உள்வாங்கி பேசக் கூடியவர். அடிப்படை நேர்மை உள்ளவர்.

உயிர்மை பதிப்பகம் என்னிடம் காசு வாங்கி புத்தகம் போட்டதில்லை. கருப்பு பதிப்பகம் அவ்வாறு பேரம் பேசியதை முன்பு ஒரு விவாதத்தின் போது பதிவு செய்திருக்கிறேன். அதன் பதிப்பாசிரியர் வியாபாரத்துக்காக நான் புத்தகம் போடுவதாக தாக்கியதால்தான் அதைச் சொல்ல வேண்டி ஏற்பட்டது. சிறு பதிப்பகங்கள் பண ஆதரவுடன் புத்தகம் வெளியிடுவது தவிர்க்க முடியாதது. கடுமையாக வேலை செய்து ஒரு புத்தகத்தை எழுதும் ஒரு எழுத்தளார் தனது புத்தகம் எப்படியாவது வெளிவர வேண்டும் என விரும்புவார். அது வெற்றி பெறுவது – பாராட்டப்படுவது வேறு விசயம் .அத்தகைய புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளாகுவது இயல்பு. இதனால் பதிப்பகத்தார் கவனத்துக்கு உள்ளாகும் புத்தகங்களை வெளியிட விரும்புகிறார்கள். தமது புத்தகத்தை வெளியிடும் பதிப்பகம் வாசிப்பவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என எழுத்தாளர்கள் விரும்புகிறார்கள். அதற்கான முயற்சியை பதிப்பகம் எடுக்க வேண்டும். புத்தகம் வெளி வந்தவுடன் சில பிரதிகளை எடுத்து நண்பர் வட்டாரங்களுக்கு விநியோகிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலையை எந்த எழுத்தாளரும் விரும்புவதில்லை. ஆனால் இதுதான் பலரது நிலமை. இதனால் பல நல்ல புத்தகங்கள் காணாமற் போய் விடுகின்றன. இந்த நிலையில், நல்ல புத்தகம் என நினைப்பதை மனுஷ்ய புத்திரனும் உயிர்மை பதிப்பகத்தை சேர்ந்தவர்களும் உற்சாகத்துடன் முன்னெடுத்து செல்வதை தவறு என சொல்லி விட முடியாது.

இதற்கு மாறாக சில பதிப்பகங்கள் முற்றிலும் வியாபார நோக்கிற்காக இயங்குகின்றன. அரசியல் சார்ந்து இயங்குகின்றன. அத்தகைய பதிப்பகங்களுடன் என் போன்றவர்கள் புத்தகம் போடமுடியாது. உயிர்மை தவிர வேறு யார் இந்த வேலையை செய்யக் கூடியவர்கள்? ‘முதுகு சொறியும்’ அரசியலும் சுய விளம்பர நடைமுறையும் தமிழ் எழுத்தாளர் – பதிப்பக சூழலில் புரையோடிக் கிடக்கிறது என்பதும் உண்மையே. ஒரு நாவலை அது நல்ல நாவலா இல்லையா என்ற அடிப்படையில் பேசுவார்கள் குறைவு. இந்த ‘கவர்ச்சி’ அரசியல் நாடகங்களுக்குள்ளும்தான் நாம் நகர வேண்டி இருக்கிறது.

இது தவிர தமிழ்நாட்டில், புலம் பெயர் ஈழ எழுத்தாளர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது. காசு கொடுத்து புத்தகம் போடுவது – மதுபானம் வாங்கிக் கொடுத்து தம்மைப் பற்றி எழுதச் சொல்வது  -போன்ற பணத்தைக் காட்டி சுய புலம்பலை பரப்பும் நடைமுறையோடு இந்த புலம்பெயர் எழுத்தாளர்கள் இணைத்து பேசப்படுகிறார்கள். இதற்கு குறிப்பாக ஒரு எழுத்தாளர் காரணம். அவரது நடைமுறைகளால் ஈழ எழுத்தாளர் வட்டமே இப்படித்தான் என்ற எண்ணம் பரவிக் கிடக்கிறது. பெண்கள் மேலான காமுக நடவடிக்கை – குடித்து விட்டு அடிபடுவது – அணி பிரித்து ஒதுக்குவது. சீடர் கூட்டம் கட்ட முயல்வது – சுய விளம்பரத்துக்காக செலவு செய்ய தயாராக இருப்பது – போன்ற நடவடிக்கைகளை இந்த எழுத்தாளர் ‘பிரபலமாக்கி’ அதன் மூலம் பிரபலமாகி உள்ளார். வெளிநாட்டில் இருந்து போகும் ஈழ எழுத்தளார் ‘மதுபானம் சாப்பிடலாமா’ என சக எழுத்ததாளர்களை கேட்க பயப்பட வேண்டி உள்ளது. அதனால் ஏதோ உதவி கேட்டு மடக்கப்படுவோம் என்ற பயத்தில் சில எழுத்தாளர்கள் ஒதுங்க வேண்டி ஏற்பட்டு விடுகிறது. பெண்களுடன் பேசவே பயப்பட வேண்டி உள்ளது. காம நோக்கிற்காக இவர்கள் பேசுகிறார்களோ என அச்சப்பட வேண்டிய ஒரு கேவலமான நிலவரம் உருவாக இது போன்ற எழுத்தாளர்கள் காரணமாக இருக்கிறார்கள். இது காதல் இல்லை. காதல் செய்ய வேண்டாம் என கலைஞர்களை கேட்க முடியாது. குறைந்த பட்ச மரியாதை – நட்பான உரையாடல் – நல்ல எழுத்துக்களை அடையாளப் படுத்தல் – எழுத்து பற்றிய நியாயமான ( சுய புலம்பல் அற்ற) விவாதம் – இவற்றை எதிர்பார்ப்பது தவிறில்லை. ஆனால் சில எழுத்தாளர்களின் கேவலமான நடைமுறைகள் இலக்கிய வட்டத்தில் நாற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறது.

 

சிறு பத்திரிகை சூழல் – இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் சூழல் இன்று எங்கு இருக்கிறது ? அது மங்கி மறைந்து வருகிறது. இலக்கிய வானம் இருண்டு கிடக்கிறது. அங்கு நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை. பல சூரியன்கள்தான் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.

தரமான இலக்கியம் நோக்கி நகர்வது பற்றிய எந்த அக்கறையுமற்ற சூழலை வளர்க்கும் வேலையைத், தரமான இலக்கியம் செய்து விட்டதாக கருதுவோரும் வளர்கிறார்கள். இதற்கு மாறாக சிறு பத்திரிகை ஆர்வம் இன்னும் தேங்கி நிற்கும் இலக்கிய அக்கறை உள்ள ஒரு சில பதிப்பகங்களில் உயிர்மை முக்கிய பதிப்பகமாக இயங்கி வருகிறது. கவிஞர்கள் நடத்தும் பதிப்பகமாக இருப்பதால் அப்படி இருக்கலாம். மனுஷ்யபுத்திரன் ஒரு நல்ல வியாபாரி இல்லை. வெறும் வியாபாரியாக அவர் இயங்கி இருந்தால் உயிர்மை வேறு மாதிரி போயிருக்கும். எழுத்தாளர்கள் நடத்தும் பதிப்பகங்கள் வித்தியாசமாக இருப்பது புதினமில்லை. அதில் குறை நிறைகள் இருக்கத்தான் செய்யும்.

தம்மைத் தாமே பெரிய எழுத்தாளர்களாக எண்ணிக்கொள்ளும் சிலர் தமது புத்தகம் ஆயிரக்கணக்கில் விற்றதான பாவனையில் புத்தகம் விற்பனைக்கு இல்லாதது பற்றி பேசி இருக்கிறார்கள். எனக்கு தெரிந்து தமிழ் பதிப்பக சூழல் அவ்வாறில்லை. நன்கறிந்த ஒரு சில எழுத்தளர்களின் புத்தகங்கள் தவிர மற்றயவை ஆயிரக்கணக்கில் விற்பதில்லை.

மனுஷ் புத்தகம் விற்பதற்காக வெற்றுப் புகழ்ச்சி செய்யவில்லை. அவர் தனக்குப் பிடித்ததை நேர்மையாக சொல்கிறார். அவ்வளவுதான். தான் வெளியிடும் புத்தகத்தை விளம்பரம் செய்வதோ – ஒரு எழுத்தாளர் தனக்கு பிடித்த புத்தகம் பற்றி பேசுவதோ -அவர்கள் உரிமை.

லண்டன்காரர் நாவல் தமிழக வாசகர்களுக்கு ஏற்ப திருப்பி எழுதப்பட்டு வெளிவந்த புத்தகம். மீண்டும் எழுதபட்ட புத்தகத்தை மீண்டும் வாசியுங்கள். வாசித்த பிறகு நேர்மையாக பார்த்து பேசுங்கள். ஒரு எழுத்தாளர் அதை தவிர வேறு எதையும் கேட்க முடியாது. கலைஞர்கள் தம்மை தாமே வியாரம் செய்யும் ‘கருமாதி’யை எழுத்தை நிறுத்துபவர்கள்தான் செய்யவேண்டும்! அந்த நிர்பந்தத்தில் இருந்து தமிழ் இலக்கிய உலகம் விடுதலை பெற வேண்டும். அப்போதுதான் சிறந்த இலகியத்தை நோக்கி நகர விரும்புபவர்கள் நம்பிக்கையுடன் வேலை செய்ய முடியும்.

 

உயிர்மை புத்தக வெளியீடு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *